Tuesday, February 18, 2020

டி.என்.பி.எஸ்.சி., முறைகேடு : தானாக அழியும் மை, பேனா தயாரித்தவர் கைது

Updated : பிப் 17, 2020 23:42 | Added : பிப் 17, 2020 23:02

சென்னை : அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய தேர்வுகளில் முறைகேடு செய்த, இடைத்தரகர் ஜெயகுமாருக்கு, தானாக அழியும் மையுடன் கூடிய, பேனா தயாரித்து கொடுத்தவரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, 'குரூப் - 4; குரூப் - 2 ஏ' தேர்வு முறைகேடுகள் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த முறைகேடுகளுக்கு ஊற்றுக்கண்ணாக இருந்த, சென்னை, முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த ஜெயகுமார், 38, என்பவர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.பின், அவர் உட்பட, 40 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே, குரூப் - 4 தேர்வு முறைகேடு தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் தேடப்பட்டு வந்த, திருச்சியை சேர்ந்த பிரபாகரன் மற்றும் ஆசிரியர் செல்வேந்திரன் ஆகியோர், எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்நிலையில், இந்த முறைகேடுகளை தலைமை ஏற்று நடத்திய ஜெயகுமாருக்கு, சில மணி நேரத்தில், தானாக அழியும் மையுடன் கூடிய, பேனாக்களை தயாரித்து கொடுத்த, சென்னை, புரசைவாக்கத்தை சேர்ந்த, அசோக் என்பவரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார், நேற்று கைது செய்தனர்.

அவர் அளித்த பேனா வாயிலாக தான், விடைத்தாள்களில் திருத்தம் செய்யப்பட்டு, முறைகேடுகள் நடந்துள்ளன.தானாக அழியும் மை தயாரிக்கும் தொழில்நுட்பம்; அதற்கான மூலப்பொருட்கள்; எவ்வளவு தொகை தரப்பட்டது என்பது குறித்து, அவரிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், பிரபாகரன், செல்வேந்திரன் ஆகியோரை, காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.இந்த முறைகேடுகள் தொடர்பாக, மேலும் பலரை தேடி வருகின்றனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருப்போரை, விசாரணைக்கு நீதிமன்றம் அழைத்துச் செல்லும் பணிகளுக்காக, சிறப்பு காவல் படையில் இருந்து, 50 போலீசார் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.

கடலுாரில்12 பேருக்கு 'சம்மன்'

'குரூப் - 2' தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகுமாறு, கடலுார் மாவட்டத்தில், ஒரே கிராமத்தைச் சேர்ந்த, 12 பேருக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசார், 'சம்மன்' அனுப்பி உள்ளனர். இந்த, 12 பேரும், வணிக வரித்துறை உள்ளிட்ட, அரசு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.இவர்களில், மூன்று குடும்பங்களைச் சேர்ந்த, ஆறு சகோதரர்களும் உள்ளனர். இவர்கள், நாளை, கடலுார் சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என, சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியருக்கு முன்ஜாமின் மறுப்பு

சென்னை தலைமை செயலகத்தில், நிதித்துறையில் உதவியாளராக பணிபுரியும் கவிதா என்பவர், முன்ஜாமின் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், 'ராமேஸ்வரத்தில், 'குரூப் - ௨ ஏ' தேர்வு எழுதினேன். என்னுடன் தேர்வு எழுதிய மூவரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளனர். 'என்னையும் கைது செய்யக்கூடும். மகப்பேறு விடுப்பில் உள்ளேன். ௨௦௨௦ ஜனவரி, ௨௩ல், குழந்தை பெற்றேன். எனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி எம்.தண்டபாணி முன், விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அய்யப்பராஜ், '' மனுதாரர் உள்ளிட்ட, ௪௨ பேர், முறைகேடாக தேர்ச்சி பெற்று, அரசு பணி பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. ௨௨ பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; முன்ஜாமின் கூடாது,'' என்றார்.இதையடுத்து, முன்ஜாமின் மனுவை, நீதிபதி தண்டபாணி தள்ளுபடி செய்தார்.

சி.பி.ஐ., விசாரணைக்கு நீதிமன்றத்தில் முறையீடு

'குரூப் - 1' பணியிடங்களுக்கான தேர்வு, 2015ல் நடந்தது. அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய, இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகவும், தேர்வை ரத்து செய்யவும் கோரி, திருநங்கையான சுவப்ணா என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. இவ்வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, பொங்கியப்பன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ''குரூப் - 1 தேர்வு முறைகேடு குறித்து, சி.பி.ஐ., விசாரணை கோரி, மனு தாக்கல் செய்ய உள்ளோம்.

''தேர்வாணையத்தில், உயர் பொறுப்பில் இருப்பவர்களின் தொடர்பு இல்லாமல், இந்த முறைகேடு நடந்திருக்காது. கடைநிலை அதிகாரிகளை தான் கைது செய்கின்றனர். அதனால், வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்,'' என்றார்.

குரூப் - ௧ தேர்வு முறைகேடு தொடர்பாக, செய்தி ஒளிபரப்பிய தனியார், 'டிவி' சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி.பெருமாள், ''மூன்று விசாரணை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்; முறைகேட்டில் தொடர்புடையவர்களை பாதுகாக்கும் வகையில், அரசு செயல்படுகிறது,'' என்றார்.இதையடுத்து, இவ்வழக்கில் தங்களை இணைத்து கொள்ள, மூத்த வழக்கறிஞர் வில்சன் கோரியதை, நீதிபதிகள் ஏற்றனர். விசாரணையை, வரும், ௨௮ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024