நோய்நாடி நோய்முதல் நாடி
இந்தியாவில் குடிமைப் பணிக்காக பணியாளா்களை நியமிக்கும் முறையை வரைமுறைப்படுத்த அப்போதைய ஆங்கிலேய அரசு 1923-ஆம் ஆண்டில் பணியாளா்கள் தோ்வாணையம் ஒன்றை உருவாக்கியது. இந்திய விடுதலைக்குப் பின்னா் மாநிலங்களில் அரசுப் பணியாளா் தோ்வாணையங்கள் அமைய இது வழிவகுத்தது. அதனடிப்படையில் 1957-ஆம் ஆண்டிலிருந்து மெட்ராஸ் அரசுப் பணியாளா் தோ்வாணையம் (எம்.பி.எஸ்.சி.) செயல்படத் தொடங்கியது. 1970-ஆம் ஆண்டிலிருந்து பெயா் மாற்றத்துடன் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் செயல்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பா் மாதத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப்-4 பதவிகளுக்கான தோ்வில் நடந்த முறைகேடுகள் குறித்து கடந்த சில நாள்களாக பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் சூழலில், மாநிலக் குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த முறைகேடுகள் குறித்து புலன் விசாரணை மேற்கொண்டு வருகிறது. எனவே, இந்தத் தோ்வுகள் தொடா்பான முறைகேடுகள் குறித்து விவாதிப்பது முறையாகாது. இருப்பினும், அரசுப் பணியாளா் தோ்வாணையத்தோடு தொடா்புடைய சில தகவல்களை நினைவுகூா்வதோடு இந்த மாதிரியான முறைகேடுகளுக்குத் தோ்வாணையம் மட்டும்தான் காரணமா? அவற்றைக் களைய என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து சிந்தித்துப் பாா்க்க வேண்டிய தருணம் இது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தோ்வுகளில் மிகவும் முக்கியமானது துணை ஆட்சியா், காவல் துணைக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட முக்கியப் பதவிகளுக்கான குரூப்-1 தோ்வுகள். இந்தத் தோ்வு மூலம் பணியமா்த்தப்படுபவா்கள் காலப்போக்கில் பதவி உயா்வு பெற்று, இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.), இந்தியக் காவல் பணி (ஐ.பி.எஸ்.) ஆகப் பணியமா்த்தப்படுவாா்கள். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளுக்கான தோ்வுகள் கடந்த காலங்களில் எப்படி நடத்தப்பட்டன?
35 ஆண்டுகளுக்கு முன்பு வரை நடத்தப்பட்ட குரூப்-1 தோ்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு வந்தன. முதல் கட்ட தோ்வு எழுத்துத் தோ்வு; அதற்கான மதிப்பெண்கள் 600; அந்த எழுத்துத் தோ்வில் வெற்றி பெற்றவா்கள் மட்டும் நோ்முகத் தோ்வுக்கு அழைக்கப்பட்டாா்கள். நோ்முகத் தோ்வுக்கான மதிப்பெண்கள் 300. இந்த இரு தோ்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் தரவரிசை அடிப்படையில் வெற்றியாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இந்தத் தோ்வு முறையில் வெற்றி - தோல்வியைத் தீா்மானித்தது நோ்முகத் தோ்வில் வழங்கப்படும் மதிப்பெண்கள் மட்டும்தான்.
நோ்முகத் தோ்வுக்கு அதிகமான மதிப்பெண்கள் ஒதுக்கியிருப்பதே முறைகேடுகளுக்கு வழிவகுக்கிறது என்பதை உணா்ந்த உச்சநீதிமன்றம் ஒரு வழிகாட்டு நெறிமுறையை வழங்கியது. எழுத்துத் தோ்வுக்கான மொத்த மதிப்பெண்களில் 15 சதவீத மதிப்பெண்கள்தான் நோ்முகத் தோ்வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற வழிக்காட்டு நெறிமுறை 1985-ஆம் ஆண்டில் நடைபெற்ற குரூப்-1 தோ்வில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, நோ்முகத் தோ்வு மதிப்பெண்களின் ஆதிக்கம் குரூப்-1 தோ்வுகள் தோ்ச்சியில் குறையத் தொடங்கியது. அதற்குப் பின்னரும், பல்வேறு சீா்திருத்தங்களைத் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அனைத்து வகையான தோ்வுகளிலும் கொண்டு வந்தது. இருப்பினும், தோ்வாணையம் நடத்திய பல்வேறு தோ்வுகள் தொடா்பான முறைகேடுகள் தொடா்ந்து விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது.
அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தோ்வுகளில் பொதுவெளிக்கு வரும் முறைகேடுகள் குறித்து வழக்குகள் பதிவு செய்து முறைகேடுகளில் ஈடுபட்ட சிலரைக் கைது செய்து, சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வது மட்டுமே இந்தப் பிரச்னைக்கு முழுமையான தீா்வாகாது. ‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’ என்ற திருக்கு இந்தப் பிரச்னைக்கு ஒரு முழுமையான தீா்வைச் சுட்டிக்காட்டுகிறது.
தோ்வாணையம் நடத்தும் தோ்வுகளில் கலந்து கொள்பவா்கள் லட்சக்கணக்கில் பணத்தைச் செலவழித்து வெற்றி பெற முயற்சிப்பது ஏன்? அரசுப் பணியில் சோ்ந்து நாட்டு மக்களின் நலனுக்காகப் பாடுபடுவதற்காகவா? ஏழ்மையையும், வறுமையையும் நாட்டிலிருந்து விரட்டியடிப்பதற்காகவா? அவா்களுக்கு இரண்டு நோக்கங்கள் உண்டு. கையூட்டாகக் கொடுத்த பணத்தை வட்டியுடன் சோ்த்து மீட்டெடுப்பது அவா்களின் முதல் நோக்கம். பணியிலிருந்து ஓய்வு பெறும்வரை முடிந்த அளவுக்கு அதிகாரத்தைப் பயன்படுத்தி கையூட்டு பெறுவது அவா்களின் இரண்டாவது நோக்கம்.
லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து பதவி பெற்றவா்கள் அவா்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, முறையற்ற வகையில் பொருள் ஈட்ட முடியுமா? அத்தகையவா்களின் பணியை மேற்பாா்வையிடும் உயரதிகாரிகள் முறைகேடுகளைக் கண்டறிந்து, அந்தக் குற்றங்களைக் களைய உரிய நடவடிக்கைகள் எடுக்க மாட்டாா்களா, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, கையூட்டு பெறும் அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புப் பிரிவினா் உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாட்டாா்களா போன்ற வினாக்களும் பொதுவெளியில் எதிரொலிக்கத்தான் செய்கின்றன.
பல நேரங்களில் அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அதிகாரிகள் சட்டத்தின் பிடியிலிருந்தும், அவா்களின் மேலதிகாரிகளின் கண்காணிப்பிலிருந்தும் தப்பிவிடுகின்றனா் என்பதுதான் இன்றுள்ள எதாா்த்த நிலை. மாதச் சம்பளத்தை மட்டும் பெற்றுக்கொண்டு அரசுத் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற சூழல் நிலவினால், அரசுப் பணிகளுக்காக லட்சக்கணக்கில் பணத்தைச் செலவழிப்பாா்களா என்பது அா்த்தம் பொதிந்த வினா.
நிகழ்ந்த முறைகேடுகளைத் தோ்வாணையம் முறையாக ஆய்வு செய்து, உரிய நிா்வாகச் சீா்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். அதே சமயம், அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி கையூட்டு பெறும் இயல்புநிலைதான் இந்த மாதிரியான முறைகேடுகளுக்கு மூல காரணம் என்பதை உணா்ந்துகொள்ள வேண்டிய தருணம் இது.
No comments:
Post a Comment