Tuesday, April 11, 2017


: ஏப்ரல் 10,2017,22:19 IST

 மூன்று மாதங்களுக்கு தேர்தல் இல்லை:
தேர்தல் அதிகாரிகள் தகவல்


'சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதிக்கு, இன்னும் மூன்று மாதங்களுக்கு, தேர்தல் நடத்த வாய்ப்பில்லை' என, தேர்தல் கமிஷன் வட்டாரத்தில் கூறப்படுகிறது.





இடைத்தேர்தலில், அ.தி.மு.க., - சசிகலா அணி சார்பில், தினகரன் போட்டியிடப் போவதாக தகவல் வெளியானதும், பணப் பட்டுவாடா அதிகம் இருக்கும் என, தகவல் வெளியானது.

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதைத் தடுக்க, தேர்தல் கமிஷன், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஐந்து தேர்தல் பார்வையாளர்கள், ஒரு சிறப்பு தனி தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டனர்.

சமூக வலைதளங்களில் பரவின

துணை ராணுவ வீரர்கள், 720 பேர், பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டனர். பறக்கும் படை, கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது. நுண் பார்வையாளர்கள், மோட்டார் சைக்கிளில்,

ரோந்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. அனைத்தையும் மீறி, தினகரன் அணி சார்பில், ஓட்டுக்கு, 4,000 ரூபாய் வழங்கப்பட்டது. பட்டுவாடா வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவின. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறை நடத்திய சோதனையில், பட்டுவாடா ஆவணங்கள் சிக்கின.

ஜைதி ஆலோசனை

அதைத் தொடர்ந்து, தேர்தலை ஒத்திவைக்க வேண்டும். பட்டுவாடா செய்த வேட்பாளர்களை, தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என, அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.இது தொடர்பாக, நேற்று முன்தினம் டில்லியில், தலைமைத் தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா, தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆகியோர் பங்கேற்றனர்.

தேர்தல் எப்போது?

கூட்டத்தில், தினகரனை தகுதிநீக்கம் செய்வது, தேர்தலை ஒத்திவைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆலோசனை முடிவில், தேர்தலை ஒத்திவைக்க, முடிவு செய்யப்பட்டது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல்போல,

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலும், சில மாதங்களுக்குப் பிறகே நடத்தப்படும் என, தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது: இடைத்தேர்தலை, ஆறு மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும். ஆனால், தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்படும்போது, எப்போது வேண்டுமானாலும் நடத்த, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில், தேர்தல் கமிஷனுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணத்தை, மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

ஜூலை, 5க்குள் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, ஆர்.கே.நகர் தொகுதிக்கு, ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்னரே, தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -




No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024