Tuesday, April 11, 2017

பல கோடி பணம் எப்படி?   அமைச்சரிடம் கிடுக்கிப்பிடி 

DINAMALAR

பல கோடி பணம் பட்டுவாடா மற்றும் தேர்தல் பேரம் தொடர்பாக, வருமான வரித்துறை அலுவலகத்தில், நேற்று, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் நடிகர் சரத்குமாரிடம், அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.





அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள், எம்.எல்.ஏ., விடுதி உள்ளிட்ட, 38 இடங்களில், சமீபத்தில், வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அதில், அவரது கணக்காளர் சீனிவாசன் வீட்டில் இருந்து, வாக்காளர்களுக்கு தலா, 4,000 ரூபாய் தரப்பட்ட பட்டியல் கிடைத்தது. அதன் மூலம், அமைச்சர்கள் ஜெயகுமார், செங்கோட்டையன் மற்றும் முதல்வர் பழனிசாமி மூலமாக, 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்ததது தெரிய வந்துள்ளது.

8 மணி நேரம்

இந்நிலையில், வருமான வரித்துறை அனுப்பிய சம்மனை ஏற்று, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, வருமான வரி புலானாய்வு அலுவலகத்தில், விஜயபாஸ்கர், நேற்று காலை, 11:15 மணிக்கு ஆஜரானார்.அவரைத் தொடர்ந்து, தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய நடந்த, ஏழு கோடி ரூபாய் பேரம் தொடர்பாக விளக்கம் அளிக்க, 11:30 மணிக்கு சரத்குமார் ஆஜரானார்.
அவர்களுக்கு முன், முன்னாள் எம்.பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆஜராகியிருந்தார்.இதில், விஜயபாஸ்கரிடம், 89 கோடி ரூபாய் பணம் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பாக, நான்கு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது; விசாரணை முடிந்து, அவர் மாலை, 3:45 மணிக்கு வெளியேறினார்.

அப்போது அளித்த பேட்டியில், ''கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளித்துள்ளேன்; விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்துள்ளேன்,'' என்றார்.

சில நிமிடங்களுக்குப் பின் வெளியேறிய, சிட்லபாக்கம் ராஜேந்திரன், கோபமாக காணப்பட்டார்.

விஜயபாஸ்கரை விட சரத்குமாரிடம், நான்கு மணி நேரம் கூடுதலாக விசாரணை நடந்தது. அவர்,எட்டு மணி நேர விசாரணைக்குப் பின், இரவு, 7:30 மணி அளவில் சோர்வாக வெளியேறினார். அதன்பின், உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

விஜயபாஸ்கர் ஒப்புதல்!

விஜயபாஸ்கரிடம் நடந்த விசாரணையின் போது, குட்கா வியாபாரிகள் மாமூல், பணி நியமனம் மற்றும் மருந்து பொருட்கள் வாங்கியதில் நடந்த முறைகேடுகள்; எந்தெந்த அமைச்சர்களுக்கு எப்படி பணம் வழங்கப்பட்டது என்பது உள்ளிட்ட, பல கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன.
'முதலில், பட்டுவாடாவை மறுத்த விஜயபாஸ்கர், பின், ஓரளவிற்கு, உண்மைகளை கூறினார். அதனால், பணம் பட்டுவாடா உறுதியாகியுள்ளது. எனினும், நினைத்த அளவிற்கு அவர் முழு ஒத்துழைப்பு தரவில்லை என்பதால், மீண்டும் விசாரணைக்கு வரச் சொல்லி இருக்கிறோம்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

கீதாலட்சுமி 'டிமிக்கி'

வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி, சில பணியிடங்களை நிரப்புவதில், இடைத்தரகர் போல செயல்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக,அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது சொத்துக் கணக்கு மற்றும் வருமான வரி கணக்குகளை ஆய்வு செய்து வருகிறோம்.
'சம்மன்' அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. அவர் குடும்பத்தில் முக்கிய நிகழ்ச்சி இருப்பதாகக் கூறி விட்டார். அவருக்காக, ஓரிரு நாள் காத்திருக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஹவாலா பணமா?

வருமான வரி விசாரணையில், பணம் பெற்றதை, சரத்குமார் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால், அவரது மனைவி ராதிகாவிடம் பணம் சேர்க்கப்பட்டதா அல்லது ஹவாலா முறையில் பரிமாற்றம் நடந்ததா என்றும், அவரிடம் அதிகாரிகள் கேள்விகளை அடுக்கினர். பதிலளிக்க, சரத்குமார் அடம் பிடித்ததால், அவருக்கு ஓய்வு கொடுத்து, மீண்டும் விசாரிக்க முடிவு எடுத்துள்ளனர்.

முதல்வரிடம் விசாரணையா?

வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது: தினகரனிடமிருந்து, விஜயபாஸ்கருக்கு பணம் தரப்பட்டு, அவர் மூலமாக முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்களுக்கு சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம். ஆனால், விஜயபாஸ்கர், அத்தகைய கேள்விகளுக்கு பிடிகொடுக்காமல் நழுவுகிறார். அதனால், தினகரன் மற்றும் முதல்வரை காட்டிக் கொடுக்காமல், அனைத்தும் தன் பணம் என, அவர் ஒப்புக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. அதற்கு, அவர் வரி கட்டினால் விட்டு விடுவோம்.
மேல் நடவடிக்கையை, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் தான் மேற்கொள்ள வேண்டும். எனினும், விஜயபாஸ்கரின் பினாமி நிறுவனங்களின் வருமானங்களை தோண்ட உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024