Wednesday, April 12, 2017

இன்று முதல் குடிக்க மாட்டேன்...' : காப்பு கட்டி 'குடி'மகன்கள் சத்தியம்

ஆத்துார்: போதை பழக்கத்தில் இருந்து மீள, ஆத்துார், மதுரகாளியம்மன் கோவிலில், 'இனிமேல் குடிக்க மாட்டேன்' என, 'குடி'மகன்கள் சத்தியம் செய்து, காப்பு கட்டி செல்கின்றனர்.

சேலம் மாவட்டம், ஆத்துார், வசிஷ்ட நதி வடக்கு பகுதியில் உள்ள சம்போடை வனத்தில், மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, ஆத்துார் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சமீப காலமாக, மது பழக்கத்துக்கு அடிமையான பலர், மதுரகாளியம்மனிடம் சத்தியம் செய்து, அம்மன் மடியில் வைக்கப்பட்ட எலுமிச்சம் பழத்தை சாப்பிட்டு, கையில் கயிறு கட்டி செல்கின்றனர். மதுரகாளியம்மனிடம் சத்தியம் செய்ய வரும், 'குடி'மகன்களிடம், 'இனிமேல் குடிக்க மாட்டேன்' என, கற்பூரத்தை அணைத்து, சத்தியம் வாங்கும் கோவில் பூசாரி, அவர்களுக்கு கையில், 'சிவப்பு' நிற கயிறு கட்டி விடுகிறார்.

பூசாரி ராஜாமணி கூறியதாவது: மதுரகாளியம்மனிடம் சத்தியம் செய்து செல்லும், 'குடி'மகன்கள், மது குடிப்பதை நிறுத்தி விடுகின்றனர். சிலர் கையில் உள்ள கயிற்றை அவிழ்த்து விட்டு, மீண்டும் குடிக்கின்றனர். அவர்கள், பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர். பல பெண்கள், கணவர், மகன்களை, ஆத்துாருக்கு அழைத்து வந்து, மதுரகாளியம்மன் கோவிலில், சத்தியம் வாங்கிச் செல்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024