Monday, March 26, 2018

20 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் அமல்

By சென்னை, | Published on : 26th March 2018 12:45 AM

தமிழகத்தில் 20 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இக்கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் 461 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 42 சுங்கச் சாவடிகள் (டோல்கேட்) உள்ளன. இந்த சுங்கச் சாவடிகளுக்கு மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992 -ஆம் ஆண்டு போடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ஆம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து ஆண்டுக்கு ஒருமுறை 10 முதல் 15 சதவீதம் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது. இதன்படி, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 22 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 20 சுங்க சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.
கட்டணம் உயரும் சுங்கச் சாவடிகள்: கன்னியூர் (கோவை), பட்டறை பெரும்புதூர் (திருத்தணி) சூரப்பட்டு (திருவள்ளூர்), வானகரம் (திருவள்ளூர்), பரனூர் (விழுப்புரம்), ஆத்தூர் (சேலம்), கிருஷ்ணகிரி, சாலைபுதூர் (தூத்துக்குடி), பள்ளிகொண்டான் (வேலூர்), வாணியம்பாடி (வேலூர்), எட்டூர் வட்டம் (நெல்லை), கப்பலூர் (நெல்லை), நாங்குநேரி (நெல்லை), புதுக்கோட்டை, சிட்டம்பட்டி (திருச்சி), பூதக்குடி (மதுரை), லெம்பலாக்குடி(சிவகங்கை), லட்சுமணப்பட்டி (சிவகங்கை), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), சென்னசமுத்திரம் (காஞ்சிபுரம்) ஆகிய 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

எவ்வளவு கட்டணம்?: அதாவது 52 கி.மீ. நீளமுள்ள சாலையில் கார், ஜீப், வேன் ஆகிய வாகனங்கள் ஒரு முறை செல்ல ரூ.55லிருந்து ரூ.60 ஆகவும், இலகு ரக வர்த்தக வாகனம், இலகு ரக சரக்கு வாகனம், மினி பஸ் போன்றவற்றுக்கு ரூ.90லிருந்து ரூ.95 ஆகவும், லாரி, ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.190 லிருந்து ரூ.195 ஆகவும், 3 ஆக்ஸில் வர்த்தக வாகனங்களுக்கு ரூ.205 லிருந்து ரூ.215 ஆகவும், கனரக வாகனங்களுக்கு ரூ.295 லிருந்து ரூ.305 ஆகவும், பெரிதாக்கப்பட்ட வாகனங்கள் ரூ.360லிருந்து ரூ.375ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இச்சுங்கக் கட்டண உயர்வு காரணமாக சரக்கு வாகனங்களின் சேவைக் கட்டணமும் உயர்த்தப்படும் என்பதால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், இக்கட்டண உயர்வு காரணமாக ஆம்னி பேருந்துகளின் கட்டணமும் உயர்த்தப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

வாகன ஓட்டிகள் புகார்: சுங்கக் கட்டணத்தை வசூலிக்கும் தனியார் நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை முறையாக பராமரிப்பதில்லை. ஆனால், அச்சாலைகளின் பராமரிப்புப் பணி என்ற பெயரில் ஆண்டுக்கு இரண்டு முறை சுங்கக் கட்டணத்தை உயர்த்துகின்றனர். பராமரிப்பே இல்லாத இந்த நெடுஞ்சாலைகளுக்கு எதற்காக கட்டணத்தை இப்படி உயர்த்துகின்றனர் எனத் தெரியவில்லை. தொடர்ந்து இதுபோன்று கட்டணத்தை உயர்த்தி வருவதால் அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும் என வாகன ஓட்டிகள் எச்சரிக்கின்றனர்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறும்போது, " தமிழகத்தைப் பொறுத்தவரை 42 சுங்கச் சாவடிகளில் 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில், ஒரே நாளில் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று திரும்பி வர ரூ.5 முதல் ரூ. 20 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது' என்றனர் அவர்கள்.

No comments:

Post a Comment

212 PG medical seats vacant after Round 2

212 PG medical seats vacant after Round 2 TIMES NEWS NETWORK 29.12.2024 Ahmedabad : Following the second-round allocations for postgraduate ...