Monday, May 21, 2018

மாவட்ட செய்திகள்

கோடை விடுமுறை காரணமாக ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது




ஏற்காட்டில் கோடை விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

மே 21, 2018, 05:00 AM
ஏற்காடு,

கோடை விடுமுறை காரணமாக ஏற்காட்டில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. படகு இல்லத்தில் ஒரேநாளில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் வசூல் ஆனது.

சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான ஏற்காட்டில் ரோஜா தோட்டம், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் கோவில், படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் உள்ளன. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினமானதால் ஏற்காட்டுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர். இவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று சுற்றிப்பார்த்தனர். எங்கு பார்த்தாலும் சுற்றுலாபயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒண்டிக்கடை முதல் பஸ்நிலையம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்பது போல் நின்றன. இந்த இரண்டு இடங்களுக்கு இடையே உள்ள சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தை வாகனங்கள் கடந்து செல்ல சுமார் 4 மணிநேரம் ஆனது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிப்பட்டனர். இரவு 7 மணியளவில் தான் போக்குவரத்து சீரானது. அப்போதும் வாகனங்கள் ஊர்ந்து செல்வது போல் அந்த இடத்தை கடந்து சென்றன.

சேலம், நாமக்கல், கோவை, வேலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டினார்கள். இதனால் படகு இல்லத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அங்கு ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்பின்னர் அவர்கள் படகில் மகிழ்ச்சியுடன் சவாரி செய்தனர். நேற்று ஒரேநாளில் படகு இல்லத்தில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் வசூல் ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்காட்டில் நேற்று மாலையில் சாரல் மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாது சுற்றிப்பார்த்தனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக ஏற்காடு பஸ்நிலையத்தில் இருந்து பல கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர். கார், வேன்களை வாடகைக்கு அமர்த்தி பயணிகள் தங்கள் ஊர்களுக்கு சென்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024