Friday, May 18, 2018

பேத்தியைக் காப்பாற்றி உயிரை விட்ட பெண்: பால்கனி இடிந்து விழுந்ததில் பரிதாபம்

Published : 17 May 2018 21:26 IST

சென்னை

 

பால்கனி இடிந்து உயிர்பலி வாங்கிய வீடு படம்: சிறப்பு ஏற்பாடு

முகப்பேரில் பால்கனி இடிந்து விழுந்ததில் பேத்தி, கணவருடன் அமர்ந்திருந்த பெண் பேத்தியைக் காப்பாற்றிவிட்டு உயிரிழந்தார். கணவனுக்கு கால் முறிந்தது.

சென்னை மேற்கு முகப்பேர் கர்ணன் தெருவில் வசிப்பவர் நடராஜன் (55). இவரது மனைவி லட்சுமி (48). பூ வியாபாரம் செய்து வருகிறார்கள். லட்சுமி வீட்டிலேயே பூ கட்டித்தர அதை நடராஜன் கொண்டுசென்று விற்று வருவார். நடராஜன் லட்சுமி தம்பதியினருக்கு தமிழ்ச்செல்வி, சுகன்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சுகன்யாவின் மகள் ரக்‌ஷனா என்ற எட்டு மாத கைக்குழந்தை உள்ளது. நடராஜன்- லட்சுமி தம்பதியினர் மேற்கண்ட விலாசத்தில் முதல் மாடியில் கடந்த 15 ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். அந்த வீடு இரண்டு மாடிகளைக் கொண்டது.

வழக்கம் போல் இன்று மதியம் லட்சுமி பால்கனியில் அமர்ந்து பூ கட்டிக்கொண்டிருந்தார். அவரது பேத்தி எட்டு மாதக் குழந்தையை மடியில் கிடத்தியபடி பூ கட்டிக்கொண்டிருந்தார். அவருடன் அவரது கணவர் நடராஜனும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது இரண்டாவது மாடியில் உள்ள பால்கனி எதிர்பாராத விதமாக திடீரென இடிந்தது.


கண்ணிமைக்கும் நேரத்தில் இடிபாடுகள் முதல் தளத்தில் லட்சுமி நடராஜன் அமர்ந்துள்ள பால்கனி மீது விழ, ஆபத்தை உணர்ந்த லட்சுமி டக்கென்று தனது பேத்தியை அணைத்தபடி குனிய இடிபாடுகள் அவர் மீது விழுந்தது. இரண்டாம் தள பால்கனி விழுந்த வேகத்தில் முதல்தள பால்கனியும் உடைந்து லட்சுமி, நடராஜன் பேத்தி ரக்‌ஷனா மூவரும் கீழே விழுந்தனர்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே பலியானார். பேத்தியைக் காப்பாற்ற அவரைக் கட்டி அணைத்து குனிந்துகொண்டதால் பேத்தி ரக்‌ஷனாவுக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டது. கணவர் நடராஜன் கால் முறிந்தது. இடிபாடுகள் சாலையில் விழுந்ததில் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற மகேஷ்(25) என்ற இளைஞரின் கை முறிந்தது.

பேத்தியைக் காப்பாற்றும் நோக்கில் உயிரிழந்த தனது தாயை கட்டிக்கொண்டு மகள் சுகன்யா கதறி அழுதார். அக்கம் பக்கத்தவரும் இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து வந்த நொலம்பூர் போலீஸார் லட்சுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து வீட்டின் உரிமையாளர் உதயகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் இரண்டாவது மாடி பால்கனியில் மராமத்து வேலைகள் நடந்துள்ளது. இருந்தும் பால்கனி இடிந்துள்ளது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...