Monday, May 21, 2018

கர்நாடகத் தேர்தல்: உச்சத்தில் இருந்த பாஜக, வீழ்ந்தது எப்படி?- ஒர் அலசல்

Published : 20 May 2018 14:51 IST

பெங்களூரு,





பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா : கோப்புப்படம்

பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா : கோப்புப்படம்

கர்நாடகத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது வெற்றிச்செய்தியை உற்சாகத்தோடு எடியூரப்பாவிடம் கேட்ட அமித் ஷா, அடுத்த 3 நாட்களில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காதீர்கள். நீங்களே ராஜினாமா செய்து விடுங்கள் என்று விரக்தியுடன் கூறியுள்ளார்.

கர்நாடகத்தில் 222 தொகுதிகளுக்கும் கடந்த 12-ம் தேதி தேர்தல் நடந்தது. 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் 120 இடங்கள் பெற்று ஆட்சி அமைக்கும் சூழல்தான் நிலவியது, ஆனால், நேரம் செல்ல நிலைமை மாறியது.

வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜகவுக்கு 104 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 78 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கு 38 இடங்களும், இதர கட்சிகளுக்கு 2 இடங்களும் கிடைத்தன. மாநிலத்தில் ஆட்சி அமைக்க 7 எம்எல்ஏக்கள் மட்டுமே பாஜகவுக்கு தேவைப்பட்டது. அதற்கான முற்சியில் பாஜக இறங்குவதற்கு முன் சாதுர்யமாக காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் தேவகவுடா, குமாரசாமியைச் சந்தித்து காய்களை நகர்த்தியது.

ஆனால், 104 இடங்கள் பெற்றும் தொடக்கத்தில் இருந்தே பாஜக செய்த தவறுகளால்தான் அந்தக் கட்சியால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. முதலில் அவசரப்பட்டு ஆளுநரிடம் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கூறி கடிதம் அளித்தது. பாஜகவின் அந்த அவசரமான முடிவு, தேர்தலின் போது எதிர் துருவங்களாக இருந்த ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சிகளை இயல்பாகவே ஒன்றுசேர்க்க வைத்தது.

பாஜக தலைமையின் இந்த அவசர முடிவு எதிர்க்கட்சிகளிடையே எதிர்பாராத ஒற்றுமையை ஏற்படுத்தி, தங்கள் எம்எல்ஏக்களை கோழிக்குஞ்சுகளை பாதுகாப்பதுபோல் பாதுகாக்க வைத்தது. இதனால், கடைசிவரை ஒரு எம்எல்ஏவைக் கூட பாஜகவால் அசைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்று கர்நாடக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

அதேசமயம், மாநிலத்தில் பாஜகவின் முக்கியத் தலைவர்களாக பிஎஸ் எடியூரப்பாவுக்கும், ஸ்ரீராமுலுவுக்கும் இடையே நீண்டகாலமாகவே உரசல் போக்கும், மோதலும் இருந்து வந்துள்ளது. இது கட்சிக்குள் இருபிரிவுகளாக தொண்டர்களை செயல்படத் தூண்டியுள்ளது.

இருவருக்கும் இடையிலான சிக்கலில் குகட்சியின் பொதுச்செயலாளர் முரளிதர ராவ் தலையிட்டு, தேர்தல் வாக்குப்பதிவுக்கு சிலநாட்களுக்கு முன்புதான் கடைசி நேரத்தில்தான் சமாதானம் செய்து வைத்துள்ளார். இதனால், தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவுக்கு ஆதரவாக ஸ்ரீராமுலுவின் ஆதரவாளர்கள் சரிவர தேர்தல் பணியாற்றவில்லை.

அதுமட்டுமல்லாமல், பாஜக தலைமைக்கும், மாநில தலைமைக்கும் கர்நாடகத் தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை பெற்றுவிடுவோம் ஆட்சி அமைத்துவிடுவோம் என்ற மிதமிஞ்சிய நம்பிக்கை பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் குறிப்பாக “பி பிளான்கள்” எதையும் திட்டமிடாமல் கண்களை மறைத்துவிட்டது. இதனால், தவறுக்கு மேல், தவறு கடைசிநேரத்தில் செய்யும் சூழலில் ஏற்பட்டது.


பி.எஸ். எடியூரப்பா

அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சியில் பாஜக தலைவர்கள் பேரம் பேசிய ஆடியோ டேப்களை காங்கிரஸ் கடைசி நேரத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இதனால், மக்கள் மத்தியில் பெரும் அவப்பெயர் பாஜகவினருக்கு ஏற்பட்டது. இதனால்தான், நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமல் உணர்வுப்பூர்வமாக பேசி முடித்தவுடன் எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து இறங்கினார்.

இது குறித்து பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ''பாஜகவை முதல்வராக்கிப் பார்க்கவேண்டும் என்றுதான் பாஜக தலைமை விரும்பியது. ஆனால், தேர்தலில் தனிப்பெரும்பான்மை இல்லாதா காரணத்தால், எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து இறங்கினார்.

காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளில் இருக்கும் லிங்காயத் எம்எல்ஏக்கள் நிச்சயம் பாஜக பக்கம் வருவார்கள், ஒக்காலிக சமூகத்தைச் சேர்ந்த குமாரசாமி, முதல்வராக வர காங்கிரஸ் கட்சியில் இருக்கும் லிங்காயத் எம்எல்ஏக்கள் விரும்பமாட்டார்கள் என்பதால், 10 எம்எல்ஏக்கள் நிச்சயம் எங்கள் பக்கம் வருவார்கள் என்று நினைத்தோம் ஆனால், வரவில்லை. எடியூரப்பாவின் செயல்பாடுகள் 2019-ம் ஆண்டு தேர்தலில் எங்களுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தரும்'' என்று தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை மாலை வரை பாஜக தலைவர்கள் பெரும்பாலானோர் ஆட்சி அமைத்துவிடுவோம் என்று அதீதமான நம்பிக்கையுடனே கட்சித் தலைமையுடன் தொடர்பில் இருந்துள்ளனர். எப்படி ஆட்சி அமைப்பீர்கள் என்று ஊடகங்கள் கேட்டபோது, நிச்சயம் நடக்கும் என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் புதிரான பதிலாக அளித்துவிட்டு நகர்ந்தனர்.

ஆனால், பாஜகவினர் மத்தியியில் பாஜக தலைவர் அமித்ஷாவின் “ஆப்ரேஷன் லோட்டஸ்”, அரசியல் சாணக்கியத்தனம், புத்திகூர்மை எந்தநேரமும் அஸ்திரமாக அனுப்பப்படும் என்பதால் நம்பிக்கையுடன் இருந்தனர்.

ஏனென்றால், பாஜக தலைவர் அமித் ஷா கர்நாடக மாநிலத்தில் ஒருமாதத்துக்கும் மேலாக பிரச்சாரம் செய்துள்ளார். நம்பிக்கை மிகுந்த தலைவர்களான ஜே.பி.நட்டா, தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரை அனுப்பி ஆட்சி அமைக்கத் தேவையான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளக் கூறியிருந்ததால், முடிவுகள் சரியாக எடுக்கப்படலாம் என்று நம்பி இருந்தனர்.

ஆனால், நடந்ததோ தலைகீழ். அவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் சுயமாக எந்தமுடிவும் எடுக்க முடியாமல் போனதும், முடிவுகள் எடுக்க தாமதம் ஆனதும் ஆட்சி கைநழுவிப்போக முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

பாஜக கட்சி வட்டாரங்கள் கூறுகையில், மாநிலத்துக்கு கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்ட போதிலும், அவர்களால் எந்த முடிவையும் சுயமாக எடுக்க முடியவில்லை. எதற்கெடுத்தாலும் கட்சியின் தலைமையை கேட்டுத்தான் எடுக்க வேண்டிய சூழலில் இருந்தனர். இதனால், எந்த அவசர முடிவையும் நடைமுறைப்படுத்த முடியவில்லை.

அதுமட்டுமல்லாமல், தொடக்கம் முதல் கடைசி வரை அதீதமான நம்பிக்கை அனைத்து விஷயங்களிலும் மெத்தனமாக இருக்க காரணமாகிவிட்டது. வாக்கு எண்ணிக்கையின் போது 12 மணிக்கு பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்தவுடனே அடுத்த கட்ட பணியைத் தொடங்கி இருக்க வேண்டும். ஆனால், 125 இடங்கள் வரை கிடைக்கும் என்று அதீதமான நம்பிக்கையில் கொண்டாடத்தில் மூழ்கிவிட்டனர். இதனால், காங்கிரஸ் உஷாராகி ஜேடிஸ் கட்சியுடன் கூட்டணிக்கு தயாராகிவிட்டது. இங்கு பாஜக தவறு செய்துவிட்டது

எங்களின் தனிப் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் கூட, 7 எம்எல்ஏக்களை எப்படியும் கொண்டுவந்துவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்கக் கோரினோம் ஆனால், கடைசிவரை முடியவில்லை எனத் தெரவித்தனர்.

பாஜகவின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான பி.சி. காடிகவுடர் கூறுகையில், ’’ஜேடிஎஸ், காங்கிரஸ் சந்தர்ப்பவாத கூட்டணி. இந்த கூட்டணியில் ஏராளமான முரண்பாடுகள் இருக்கின்றன. எங்களின் கணிப்பின்படி, விரைவில் இந்த கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டு ஆட்சியில் பிளவு ஏற்படும்’’ எனத் தெரிவித்தார்.


ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் சிவக்குமார்

காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி தேன்நிலவு காலத்தைக் கூட தாண்டுமா என்ற கேள்வியை பாஜக வைத்துள்ளனர். பொறுத்திருந்து பார்க்கலாம்.

No comments:

Post a Comment

Student flooded with calls as his phone number appears in ‘Amaran’

Student flooded with calls as his phone number appears in ‘Amaran’ Wrong number: The callers wanted to have a word with  Sai Pallavi or comp...