Thursday, June 7, 2018

ராக யாத்திரை 05: தாழ் திறந்த இசையின் கதவு

Published : 18 May 2018 10:47 IST

டாக்டர் ஜி. ராமானுஜம்
 



‘இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்’ பாடல் காட்சியில் சுமித்ரா, லதா
- THE HINDU ARCHIVES

முதலில் ஒரு ஷொட்டு; ஒரு குட்டு. இம்முறை வினாத்தாள் கொஞ்சம் எளிது போலும். காலையிலேயே பல்லைக்கூடத் துலக்காமல் பதிலளித்த பலரில், முதல்வரான கோவை அந்தோணிராஜ் அவர்களுக்குப் பாராட்டுகள். சென்ற வாரம் கேட்ட வினாவுக்கு விடை – ‘தீபம்’ (1977). அந்தப் படத்தில் உள்ள ‘அந்தப்புரத்தில் ஒரு மகராணி’ என்ற பாடல்தான் அது. ‘மாயா மாளவ கௌளை’யில் இசைஞானி அமைத்து டி.எம்.எஸ், ஜானகி பாடிய பாடல். பிற்காலத்தில் மாயா மாளவ கௌளையில் அமைக்கப்போகும் அபூர்வப் பாடல்களின் அச்சாரம் அதுதான்.

தொடக்கத்தில் ஓர் அருமையான வயலின் இசையின் தொடக்கம். ‘சாமந்திப் பூக்கள் மலர்ந்தன; இரு சந்தனத் தேர்கள் அசைந்தன’ என்னும் இடத்தில் சிதார் இசை. ‘ஆசை கனிந்து வர அவன் பார்த்தான்’ என ஜானகியின் ஹஸ்கி கொஞ்சல். ‘சங்குவண்ணக் கழுத்துக்குத் தங்க மாலை’ என முழங்கும் டி.எம்.எஸ். கம்பீரக் குரல் என்று ஒவ்வோர் இசைக்கலைஞரும் இந்தப் பாடலில், இந்த ராகத்தின் மேன்மையை வெளிப்படுத்தியிருப்பார்கள். சுமார் நாற்பது ஆண்டுகள் கடந்தும் பலரது மனத்தில் பசுமையாகப் பதிந்துள்ள பாடல்.

அச்சாரமாக அமைந்த பாடல்

மாயா மாளவ கௌளை கொஞ்சம் சோகமான ராகம். அதில் என்னதான் நட்பு, மகிழ்ச்சி, பக்தி, நெகிழ்ச்சி, காதல் எனச் சொன்னாலும் முத்துச் சரத்தைக் கோக்கும் இழைபோல ஒரு மெல்லிய சோகக் கீற்றுத் தென்படும். அப்படித் தெரியும் பாடல் ஒன்றுதான் 1978-ல் இசைஞானி மெட்டமைத்த ஒரு பாடல். பஞ்சு அருணாசலம் திரைக்கதை, எஸ்.பி.முத்துராமன் இயக்கம் என்னும் மாபெரும் வெற்றிக் கூட்டணியின் இன்னொரு தூணாகத் தன்னை இசைஞானி இளையராஜா உறுதிசெய்து கொண்டிருந்த காலகட்டம் அது.

‘வட்டத்துக்குள் சதுரம்’ என்ற திரைப்படத்தில் அமைந்த ‘இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்’ என்ற பாடல். ‘அதோ அதோ என் பாடலில் ஒரே ராகம்’ என மாயா மாளவ கௌளையைத்தான் சொல்கிறதோ அப்பாடல்? வழக்கம்போல் வயலின், குழல் என ராகத்தைச் செம்மைப்படுத்தும் கருவிகளுடன் ஜானகி, சசிரேகா, உமாதேவி குரலில் நட்பைப் பிரதிபலிக்கும் அட்டகாசமான பாடல். கேட்கக் கேட்க மனதைக் கரைய வைக்கும் இசை.

அடுத்த வருடம். அதே கூட்டணி. தந்தை தன்னைப் புரிந்துகொள்ளாத மகளைப் பார்த்துப் பாடும் சோகமான ஒரு பாடல். தந்தையாக ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன். மகளாக ஸ்ரீதேவி. ‘கவரி மான்’ (1979) படத்தில் எஸ்.பி.பி. குரலில் மெல்லிய சோகமாக மாயா மாளவ கௌளை. ‘பூப்போல உன் புன்னகையில்’. பிற்காலத்தில் இதே ராகம் ஏராளமான சோகப் பாடல்களாக ராஜாவின் ஆர்மோனியத்திலிருந்து ஒலிக்கப் போவதன் ஆரம்ப அறிகுறி இது.

மெல்லிசையில் மறுஜென்மம்

அதே வருடம் இன்னொரு டி.எம்.எஸ் பாடல். சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் இணைந்து நடித்த முதல் படம் ‘நான் வாழ வைப்பேன்’. ‘மஜ்பூர்’ என்ற அமிதாப்பச்சன் நடித்த படத்தின் மறு ஆக்கம். படத்தின் பாடல்களெல்லாம் சூப்பர் ஹிட். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே’ என்ற மறக்க முடியாத பாடல் சோகமும் தத்துவச் சுவையும் அடங்கிய ஒரு மாயா மாளவ கௌளையில் மெல்லிசையாக மறுஜென்மம் எடுத்தது.

அப்படியே 1980-க்கு வந்தோமானால். தமிழில் பல முத்திரை நாயகர்களை அறிமுகப்படுத்திய, பிரபலப்படுத்திய படம் ‘நிழல்கள்’. அந்தப் படத்தில் போட்டிருப்பார் பாருங்கள் ஒரு மா.மா.கௌளை! உண்மையிலேயே அது ‘மா’பெரும் மா.கௌளைதான். தொடக்கத்தில் வரும் தந்தி இசை. லேசான சோக வயலின். அப்படியே கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக டெம்போவைக் கூட்டிக் கொண்டேபோய் ஒரு டஷ்!!! திருமறைக்காட்டில் திருஞானசம்பந்தரும் அப்பரும் திறந்த கதவுபோல் ஒரு திறப்பு. ‘பூங்கதவே தாழ்திறவாய்...’ என தீபன் சக்கரவர்த்தி, உமாரமணன் குரலில். இடைவெளியில் மேற்கத்திய இசை சங்கதிகளை இந்த ராகத்தில் வெளிப்படுத்தியிருப்பார் இசைஞானி.

வளைந்துகொடுக்கும் ராகம்

நல்ல ராகம் என்பது நல்ல களிமண் போல் எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கும். திறமையான மட்பாண்டக் கலைஞர் அதைப் பானையாகவோ, யானையாகவோ மாற்றுவது அந்த மண்ணை மேலும் அழகுபடுத்தவே. நல்ல இசைக்கலைஞன் கையில் கிடைக்கும் நல்ல ராகமும் அது போன்றே பல்வேறு வடிவங்களாக வெளிப்படும். மேற்கத்திய இசை, மெல்லிசை, கர்னாடக இசை, நாட்டார் இசை என எல்லா வடிவங்களிலும் இந்த ராகத்தின் வேறு வேறு முகங்களைக் காட்டியவர் இளையராஜா .

‘சக்களத்தி’(1979) என்றொரு படம். சுதாகர், விஜயன் நடித்தது. அந்தப் பட டைட்டில் பாடலில் மாயா மாளவ கௌளையில் இளையராஜாவே பாடிய பாடல் ‘என்ன பாட்டு பாட என்ன தாளம் போட’. கிராமத்து நாயகன் பாடுவது என்பதால் ஆங்காங்கே கொஞ்சம் ராகமும் தாளமும் விலகிவிடும். என்றாலும் நாட்டுப்புற இசையில் இந்த ராகத்தின் சாயலைக் கண்டறிந்து மறு உருவாக்கம் செய்த பாடல்களில் தொடக்கப் பாடல் இது.

அந்திவரும் நேரத்தில் அந்தப்புர மகராணி

1983-ல் இந்த ராகத்தை மிகவும் ஸ்டைலாக ‘பூங்கதவே’ போல் ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் அமைத்திருப்பார். பாக்யராஜின் ‘டிரில்’ வகை உடற்பயிற்சி நடனத்துடன் எஸ்.பி.பி, ஜானகி குரலில் வரும், ‘அந்தி வரும் நேரம்’ ஒரு வித்தியாசமான மெல்லிசை. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் ‘அந்தப்புரத்தில் ஒரு மகராணி’ ‘அந்தி வரும் நேர’த்திலும் ஆங்காங்கே தென்படுவாள்.

இந்த முறை கொஞ்சம் கஷ்டமான கேள்வியைக் கேட்போமா? பாடத்திட்டத்தில் இல்லாத கேள்வி! சரிகமபதநி என்றே தொடங்கும் ஒரு பாடல்! மாயா மாளவ கௌளையில். என்ன படம்? பாடியவர்கள்? யார் இசையமைப்பாளர்? (இசைஞானி அல்ல). முழு பதிலும் சொல்பவர்க்கே பாராட்டு. பார்க்கலாம்!

தொடர்புக்கு: ramsych2@gmail.com

No comments:

Post a Comment

'Uncle-Aunty quota' for NRI admissions in Kerala too!; MBBS and nursing admissions getting rigged

 'Uncle-Aunty quota' for NRI admissions in Kerala too!; MBBS and nursing admissions getting rigged   Wednesday 25 September, 2024 | ...