Thursday, June 7, 2018

ராக யாத்திரை 06: உயிரை உருக்கும் உன்னத இசை!

Published : 25 May 2018 11:03 IST

டாக்டர் ஜி. ராமானுஜம்

 

போன வாரம் கடினமான கேள்வி என நினைத்திருந்தேன். அந்த நினைப்பு கர்நாடக அரசுபோல் அற்ப ஆயுளில் கவிழ்ந்து விட்டது. அசாமில் தேர்வு மையம் வைத்தாலும் அசராமல் ‘நீட்’டாக எழுதுபவர்களன்றோ நாம்! ‘சரிகமபதநி என்னும் சப்தஸ்வர ஜாலம்’ என்னும் பாடலே அது. படம் ‘ராக பந்தங்கள்’(1982). இசை: குன்னக்குடி வைத்தியநாதன். வாணி ஜெயராம், எஸ்.பி.பி குரலில் ஒலிக்கும் இனிய மாயா மாளவ கௌளை அது. சரியாகச் சொன்னால் பலருள் முதல்வரான கோடம்பாக்கம் ஹரிஷ் மற்றும் துணை முதல்வர் நெல்லை உமா கனகராஜ் ஆகியோருக்குப் பாராட்டுக்கள்!

முன்னரே சொன்னதுபோல் முதலிரவு(1979) திரைப்படத்தின் ‘மஞ்சள் நிலாவுக்கு இங்கு ஒரே சுகம்’ என்ற பாடல் இந்த ராகத்தில் ஒரு மாஸ்டர் பீஸ். ‘ஆலங்குயில் கூவும் ரயில் யாவும் இசைஆனதடா’ என்பதுபோல் ரயிலின் கூவெனும் ஒலியும் மாயா மாளவ கௌளையின் ஒரு ஸ்வரமாக ஒலிக்கும் மந்திரப் பாடல் அது. ஜெயச்சந்திரன் - பி.சுசீலா குரலில் ஒலிக்கும் மெல்லிசை வகை அது. ரயிலின் ஓசை மட்டுமல்ல தட தட என்று ஓடும் லயமும் தாளமாக இணையும் ஒரு மாயவித்தை நடக்கும் இப்பாடலில்.


வரம் வாங்கி வந்தவர்

இசைஞானியின் ஆர்மோனியம் சிலரைப் பார்த்தால் படு உற்சாகமாக மெட்டுப் போடும். அப்படி வரம் வாங்கி வந்தவர்களுள் ஒரு இயக்குனர் ஆர்.சுந்தரராஜன். ‘பயணங்கள் முடிவதில்லை’யில் இந்த வெற்றிப் பயணம் தொடங்கியது. ஒரு காலகட்டத்தில் அவர் மாபெரும் வெற்றிப்பட இயக்குநர் என்றால் இப்போதுள்ள பொடிசுகள் நம்ப மறுக்கலாம். அவரது இயக்கத்தில் வெளியானது ‘அம்மன் கோவில் கிழக்காலே’(1986) என்றப் படம்.

பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்... அதில் ஜெயச்சந்திரனும் ஜானகியும் பாடியுள்ள பாடல் ஒன்று மாயா மாளவ கௌளையில். ‘பூவை எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே’ என்ற பாடல்தான் அது. இசையின் ஆரம்ப பாடங்கள் கற்றுக் கொடுப்பது இந்த ராகத்தில்தான் எனப் பார்த்தோம் அல்லவா? இந்தப் பாடலும் ராதாவுக்கு விஜயகாந்த் இசை கற்றுக் கொடுக்கும் பாடல்தான். ‘காத்துல சூடம்போலக் கரையுதே’ எனும்போது கரையாத மனமும் உண்டோ?
உயிரே… உயிரே…

இந்த ராகமே மெல்லிய சோகம்தான். அதிலும் சோகமான ஒரு சூழல் வந்தால் மனதை உருக்கி விடும். அப்படி உருக்கும் ஒரு பாடல்தான் ‘ஒருவர் வாழும் ஆலயம்‘(1988) படத்தில் வரும் பாடல். ஷண்முகப்ரியன் இயக்கத்தில் பெரிதாக வெற்றியடையாத படம் இது. ஆனால் எத்தனையோ கேள்விப்பட்டிராத படங்களிலெல்லாம் அற்புதமாக இசை அமைந்திருக்கும் இளையராஜாவின் பாடல்களைப் போன்றே இப்படத்திலும் அமைந்த ‘உயிரே உயிரே உருகாதே’ பாடல் அக்மார்க் நெய்யில் செய்த மாயா மாளவ கௌளை. ராகமும் சோகம், சூழலும் சோகம். இதோடு யேசுதாஸின் தெய்வீக தத்துவக் குரலும் சேர்ந்து ஒலித்து உயிரையே உருக்க வைக்கும்.

இன்னொரு சோகமான சூழல். பெர்லின் சுவர்போல் காதலர்களைப் பிரிக்கும் சுவற்றின் இரு பக்கத்திலிருந்தும் எழும் சோகமான ஜோடிக்குரல்கள். ‘இது நம்ம பூமி’(1992) திரைப்படத்தில் ஒலிக்கும். ‘ஆறடிச் சுவருதான் ஆசையப் பிரிக்குமா கிளியே’ என்ற பாடல் அது. கிளி என்னும் உச்சரிப்பு யேசுதாஸுக்குக் கொஞ்சம் கிலிதான் என்றாலும் சமாளித்துத் தன் கந்தர்வக் குரலில் சொர்ணலதாவுடன் பாடியிருப்பார்.

இளையராஜாவின் பாடல்களில் ஒரு சிறப்பே சரணம் ஆரம்பிக்கும் விதம். எடுப்பு என்று சொல்லப்படும் இந்தத் தொடக்கம் பல பாடல்களில் எடுப்பாக இருக்கும். இப்பாடலிலும் பெரிதாக இசைக் கருவிகள் இல்லாமல் பின்னணியில் குழல் இசை மட்டுமே முக்கியமாக ஒலிக்கும் இப்பாடலில் ‘ஆழ்கடல் அலைகளும் ஓயுமோ’ என்னும் எடுப்பு, காவிய சோகத்தைத் தரும் இடம் (ஒரு தகவல் - இப்பாடலில் மூன்று சரணங்கள்).


அமரத்துவப் பாடல்

ரஜினிகாந்த் எந்த ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக, அழகாக நடித்த ஒரு படம் ஸ்ரீ ராகவேந்திரா (1985) . இந்தப் படத்திலும் இசை சொல்லிக் கொடுக்கும் ஒரு பாடல். அதே மாயா மாளவ கௌளை. அதே யேசுதாஸ். ‘ராம நாமம் ஒரு வேதமே’ என்னும் பாடல். ஆரம்பத்தில் வாணி ஜெயராம் குழந்தை ராகவேந்திரருக்கு. ‘மணிமுடி இழக்கவும் மரவுரி தரிக்கவும் அரண்மனை அரியணை துறந்தவனாம், இனியவள் உடன் வர இளையவன் தொடர்ந்திட வனங்களில் உலவிடத் துணிந்தவனாம்’ என்பதுபோல் வாலியின் அழகுதமிழ்க் கவிதை மொழிகளும் பாடலின் இறுதியில் வரும் ஸ்வரக்கோர்வைகளும் ஒரு அரிய அனுபவத்தைத் தருபவை.

தொல்லிசை, மெல்லிசை என இசைஞானியால் பிரித்து மேயப்பட்ட இந்த ராகத்தில் போடப்பட்ட பாடல்களில் உன்னதமான ஒன்று மேற்கத்திய சங்கதிகளுடன் ஒரு இசை விருந்தாக அமைகிறது. ‘கோபுர வாசலிலே’(1991) திரைப்படத்தில் வந்த ‘காதல் கவிதைகள் படித்திடும் நேரம்’ பாடல்தான் அது. ஆரம்பத்தில் வரும் வயலின்களின் சேர்ந்திசை, பின்னர் எஸ்.பி.பி - சித்ராவின் குரலில் ஒலிக்கும் வரிகள், இடையே வரும் தாள லய ஒலிகள், பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு என அனைத்தும் இப்பாடலை அமரத்துவம் பெற்றதாக ஆக்குகின்றன.

சரி. கொஞ்சம் கடினமான கேள்வியுடன் முடிப்போமா? கல்கியின் நாயகியின் பேரில் தொடங்கும் ஒரு மாயா மாளவ கௌளை பாடல் எது, என்ன படம்? அட! உடனே பதில் சொல்லக் கிளம்பிவிட்டீர்களே?

தொடர்புக்கு: ramsych2@gmail.com

No comments:

Post a Comment

'Uncle-Aunty quota' for NRI admissions in Kerala too!; MBBS and nursing admissions getting rigged

 'Uncle-Aunty quota' for NRI admissions in Kerala too!; MBBS and nursing admissions getting rigged   Wednesday 25 September, 2024 | ...