Friday, June 8, 2018

தமிழகத்தில் அடுத்த 10 நாட்களில் மழை புரட்டிப்போடப்போகும் பகுதிகள் எவை?
 By DIN | Published on : 07th June 2018 05:52 PM |

சென்னை: தென்மேற்கு பருவ மழை தொடங்கி ஒரு வாரத்துக்கும் மேல் ஆன நிலையில், தமிழகத்தில் பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் மழை நிலவரம் குறித்து விரிவான தகவல்களை பதிவிட்டுள்ளார்.

அதில், கோவையின் வால்பாறை, நீலகிரி, தேனியின் பெரியார் பகுதி, கன்னியாகுமரியில் பேச்சிப்பாறை பகுதிகள், நெல்லையில் மாஞ்சோலை - பாபநாசம் பகுதிகளில் இன்று முதல் கன மழை பெய்யும். மழை நீர் அப்பகுதிகளில் உள்ள அணைகளுக்கு வந்து சேரும் என்று நம்புகிறோம். இப்பகுதிகளில்தான் தமிழகத்தின் பெரும்பாலான அணைகள் அமைந்துள்ளன.

இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு வால்பாறை மற்றும் நீலகிரி பகுதிகளில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மிக மிக கன மழை பெய்யும்.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியிருக்கும் ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலம், திண்டுக்கல்லின் கோடை பகுதி, பொள்ளாச்சி பகுதிகளுக்கும் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

காவிரிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள கேஆர்எஸ் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளான குடகு, கபினியின் நீர்பிடிப்பு பகுதியான வயநாடு, மூணாறு, வால்பாறை, கோவா, மகாமலேஷ்வர், கர்நாடகாவின் கடற்கரைப் பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல யாரேனும் திட்டமிட்டிருந்தால், உங்கள் பயணத்தைத் தள்ளிப் போடலாம். மேற்கண்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் அடுத்த 10 நாட்களில் 1,500 மி.மீ. மழை கொட்டித் தீர்க்க வாய்ப்பு உள்ளது.

சென்னையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர, வெப்பச் சலனத்தால் பெய்யும் மழையின் அளவு குறையக் கூடும்.

அதே போல, மும்பையில் இன்று தொடங்கியிருக்கும் பருவ மழை, தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும். இந்த மாநகரில் தொடர் மழை பெய்ய வாய்ப்பும் உண்டு. தெற்கு மும்பையின் ரத்னகிரி - கோவா - மங்களூர் - கோழிக்கோடு பகுதிகளைத் தாக்கக் கூடும். மங்களூர் நகருக்கு கன மழை வாய்ப்பு உள்ளது. கோவாவுக்கு சுற்றுலாப் பயணம் செல்ல நினைத்திருந்தீர்கள் என்றால் அது மிகவும் ஆபத்தானது. கன மழை பெய்யும் நாட்கள் காத்திருக்கின்றன.

அதே போல, மகாராஷ்டிராவின் கடற்கரைப் பகுதிகள், கேரளா மற்றும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024