Saturday, June 23, 2018

சின்ன சின்ன வரலாறு 11: பூட்டு

Published : 22 Jun 2018 11:09 IST


லதா ரகுநாதன்





"ஒரு நிமிஷம்... கதவு சரியா பூட்டியிருக்கேனான்னு செக் பண்ணிட்டு வந்துடுறேன்’’ என்று வீட்டை விட்டுக் கிளம்பும்போது நாம் சொல்லும் அல்லது யோசிக்கும் விஷயம் இதுவாகத்தான் இருக்கும்.

இதற்கான அடிப்படைக் காரணம் "எனது பொருள்".

அதாவது, நான் , எனது, என் வீடு எனும் எண்ணம் தோன்றத் தொடங்கிய நாளிலிருந்து இந்த பூட்டுக்கான தேவையும் தொடங்கிவிட்டது.

நம் பொருளையும் வீட்டையும் பாதுகாக்கிற பூட்டு பற்றிய வரலாறு, தெரியவேண்டாமா நமக்கு?

பூட்டுச்சாவியின் வளர்ச்சியின் ஆரம்பப் புள்ளி ஒரு முடிச்சு. அதாவது பொருள்களை பாதுகாக்க கயிறு அல்லது அதைப்போன்ற ஒரு கட்டுமான பொருள் கொண்டு அவற்றைக் கட்டிவைக்கத்தொடங்கினார்கள். இது எந்த வகையில் பாதுகாப்பு என்பதைப்பார்த்தால், நம் பொருள் களவாடப்பட்டிருக்கிறதா என்பதை காட்டிக்கொடுக்க மட்டுமே இது உபயோகப்பட்டது. இதன் ஜுஜுபித்தனம் புரிய ஆரம்பித்ததும், பாதுகாப்பிற்கான தேடல் தொடங்கியது.

வரலாற்றில் யார் எப்போது என்ற விவரங்கள் தெரியவில்லை. முதலில் சொன்னதுபோல் மனிதன் தன் பொருள் என்று பிரித்துப்பார்க்கத்தொடங்கிய ஏதோ ஒரு காலத்திலேயே பூட்டின் வடிவம் ஜனிக்கத்தொடங்கி இருக்க வேண்டும். வரலாற்று ஏடுகளில் முதல் பூட்டுச்சாவி, அந்தக்கால மெசபடோமியா ராஜ்ஜியத்தின் ஒரு நகரான அஸ்ஸிரியாவில் கி.மு. 4000 லேயே உபயோகத்திலிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் இயந்திர பூட்டுக்களைச்செய்யத்தொடங்கிய கலாச்சாரம் எது என்று தெரியாததால் , எகிப்து, கிரேக்கம் மற்றும் ரோமாபுரியில் ஒரே சமகாலத்தில் வேறு வேறு விதமான பூட்டுக்கள் செய்யத்தொடங்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

பதிவு செய்யப்பட்ட முதல் வகை பின் லாக் எனும் வகை பூட்டு , ஆறாயிரம் வருடங்களுக்கு முன் எகிப்திய நாடுகளில் கட்டையால் செய்யப்பட்டது.இவை மரக்கதவுகளில் பொருத்தப்பட்டிருந்தது. இதற்கான சாவி நம் டூத்ப்ரஷ் போன்ற வடிவுகொண்டு , மரத்தினால் செய்யப்பட்டிருந்தது. பூட்டின் வெவ்வேறு ஓட்டைகளில் பொருத்தப்படும்போது, உள்ளே பொருத்தப்பட்ட பின்கள் விலகி, தாழ்ப்பாளை நாம் திறக்க இயலும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்களாலும், ருமேனியர்களாலும் இந்தப் பின் லாக் பூட்டுக்கள் கொஞ்சம்கொஞ்சமாக புதிய உருவம் எடுக்கத்தொடங்கின.

கிரேக்கர்களின் பூட்டு பாதுகாப்புக் குறைவாக கருதப்பட்டது. இதனால் ருமேனியர்கள் உலோகங்களினால் பூட்டுக்கள் செய்யத்தொடங்கினார்கள். இங்கே நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம், பூட்டை பொருளின் பாதுகாப்பிற்காகக் கண்டுபிடித்த ருமேனியர்கள் , அதன் சாவியையும் பாதுகாக்க வழி கண்டுபிடித்தார்கள். கைகளிலேயே அணிந்து கொள்ளும் விதமாகச் சாவி வடிவமைக்கப்பட்டு, பொருட்களின் பாதுகாப்பை இரட்டிப்பாக்கினார்கள்.

அட, நாம் ஆன் லைன் பாங்கிங் செய்யும்போது வரும் டபுள் லெவல் செக்கிங் போலத்தான்!

முதலாம் நூற்றாண்டில் ரோம சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சி அடைந்தபின் பூட்டின் வளர்ச்சிக்கு ஒரு பெரிய பூட்டாகப்போடப்பட்டது. பணப்பற்றாக்குறை மற்றும் தொழில் நுட்ப பற்றாக்குறை என்று பல காரணங்கள். ஆகவே இருக்கும் மாதிரி பூட்டுக்களையே சிக்கலாக்கி, ஒரு சாவியை விட்டுப் பல சாவிகள் கொண்டு திறக்க, கண்களுக்குத்தெரியாத கீஹோல்கள் என்று சிறிய மாற்றங்களே காணப்பட்டன.

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பூட்டுக்களின் புதிய வளர்ச்சி ஆரம்பமானது. ராபர்ட் பரோனின் 1778 ம் வருடம் கண்டுபிடித்த டபுள் ஆக்டிங் டம்ப்ளர் லாக், 1784 ம் வருடம் ஜோசப் ப்ரம்மைய்யாவின் ப்ரமாஹ் பூட்டு, 1818 ம் ஆண்டு ஜெர்மையாவின் சப் பூட்டுக்கள், 1848ல் லினெஸ் ஏலின் பின் டம்ப்ளர் பூட்டு, 1857 ல் ஜேம்ஸ் சர்ஜெண்டின் தானே பூட்டிக்கொள்ளும் பூட்டு, 1916ல் சாம்வேல் சேகலின் ஜெமி ப்ரூஃப் பூட்டு, 1924ல் ஹாரி சோரெஃப்பின் முதல் பாட்லாக்.....

ஆனால் யார் கண்டது... இன்னும் ஒரு நூறு வருடங்களுக்குப்பின் இந்த வகை பூட்டுக்கள் வழக்கொழிந்து போகலாம். இயந்திர வகையிலிருந்து தற்போது மின்னணுவிற்கு பூட்டின் தன்மை மாறுபடத்தொடங்கி உள்ளது.

ஸ்மார்ட் கார்டுகள் கொண்டு , சிரி கொண்டு, அலெக்சா கொண்டு ஒரு வாய்ச் சொல்லிலேயே கதவைத் திறக்க முடிகிறது. ஃபேஸ் ரெகக்னுஷன் பழக்கத்திற்கு வந்துவிட்டது. ஆக என் கையில் சாவி என்பது மாறிப்போக நாமே சாவியாக மாறிவிட்டால் இந்தப் பூட்டு சாவிக்கான தேவை இல்லாமல் போய்விடும்.

இதுவரையில் பூட்டுக்கள் வைத்து நடத்தப்பட்ட போட்டிகளைப்பார்ப்போம்.

சொத்தைப் பாதுகாக்க எனும் நோக்கத்தால் தயாரிக்கப்பட்டதால், எப்போதுமே பூட்டுக்களின் தரத்தை நிர்ணயிக்கப் போட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. 1818ல் வைக்கப்பட்ட ஒரு போட்டியில் ஒரு கைதேர்ந்த பூட்டை உடைப்பவர் மூன்று மாதம் மிககஷ்டப்பட்டு உடைக்க நினைத்த சப் டிடெக்டர் பூட்டு உடைக்கமுடியாமல் போனதால், இதை வடிவமைத்த ஜெர்மியா சப்பிற்கு நூறு டாலர்கள் பரிசளிக்கப்பட்டன.

1784 ல் ப்ரமா லாக் கம்பெனியால் தயாரிக்கப்பட்ட சாலெஞ் லாக் லண்டன் பிகடெலியில் 67 வருடங்கள் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டு, பின் ஆல்பிரட் சார்ல்ஸ் ஹாப் என்பவரால் 16 நாட்கள் 51 மணி நேர உழைப்பிற்குப் பின்னர் திறக்கப்பட்டு அதற்கான பரிசான 200 டாலர்கள் வழங்கப்பட்டன.

இந்தியாவைப்பொருத்தவரையில் பூட்டு என்று சொன்னால் நம் நினைவில் வருவது அலிகார் பூட்டுக்கள் மற்றும் திண்டுக்கல் பூட்டுக்கள்.அலிகார் பூட்டுக்கள் புதிர் பூட்டுக்கள், அலங்காரப்பூட்டுக்கள், கைவிலங்கு பூட்டு, பொய் திறப்புக்கள் கொண்டவை என்று பல வகையில் தயாரிக்கப்பட்டன. மிக அதிக அளவில் இவை ஏற்றுமதியும் செய்யப்பட்டன.

பூட்டு பற்றி சொல்லும்போது சாவி பற்றியும் சொல்லியாகவேண்டும். செட்டிநாட்டுப் பகுதிகளில், இன்றைக்கும் பல வீடுகளில், கதவுடன் கொண்ட பூட்டு பொருத்தப்பட்டிருக்கும். அதன் சாவியைப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு உள்ளங்கை நீளத்தை விட பெரிதாகவே இருக்கும். தவிர, அந்தச் சாவி கனமாகவும் இருக்கும்.

திண்டுக்கல்லில் இருந்து வந்த மங்கோ பூட்டுக்கள் அவற்றுடன் நம் வாழ் நாள் முழுவதும் அவை இருக்கும் என்ற டேக்குடன் வந்தன.

திண்டுக்கல் பூட்டுக்கள் கைகளால் செய்யப்பட்டவை. அலிகார் பூட்டுக்கள் இயந்திரங்களால் செய்யப்பட்டவை. அதனால் திண்டுக்கல் பூட்டுக்களின் விலை அலிகார் பூட்டைவிட இரண்டு மடங்கு அதிகம்.இரும்பினால் செய்யப்பட்டு பின் நிக்கல் அல்லது க்ரோமியம் கொண்டு இவை பூசப்பட்டன.ஒரு காலத்தில் இவை அரசாங்க தேவைகளுக்கு உபயோகப்படுத்தப்பட்டன.

இங்கே பேலன்ஸ்டைன் நாட்டைப்பற்றி ஒன்று சொல்லவேண்டும். 1948 ல் நடந்த ஒரு போரில் பாலஸ்தீனர்கள் அகதிகளாக நாட்டை விட்டு துரத்தப்பட்டார்கள். அப்போது, அவர்களின் வீட்டின் சாவியை பத்திரமாக கைகளில் எடுத்துக்கொண்டு சென்றார்களாம். என்றாவது திரும்பி வந்தால் உபயோகப்படும் என்று. அவை தற்போது அவர்களின் வாரிசுகளின் கைகளில் வழிவழிச்சொத்தாக இன்றும் பாதுகாக்கப்படுகிறதாம்.

யார் கண்டது , இனி வரும் காலங்களில் பூட்டுச்சாவிகள் வழக்கொழிந்து சென்றபின் நாமும் நம் கைகளில் நம் வீட்டுச்சாவி அல்லது பீரோ சாவியை நம் சொத்தாக பாதுகாக்கக்கூடும்.

பொருட்களைப் பாதுகாக்க, வீட்டையே பாதுகாக்க எத்தனை நவீனமான பூட்டுகள் வந்தாலும் போனாலும், ’அவனுக்கு ஒரு வாய்ப்பூட்டு போட்டா தேவலை’ என்று சொல்வது, தொடர்ந்துகொண்டே இருக்கும் போல!

பொருளை எப்படியேனும் காபந்துபண்ணிவிடலாம். நம் சொற்களை காபந்து பண்ண பூட்டு தேவை... வாய்ப்பூட்டு தேவை!

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024