Saturday, June 23, 2018


விடுமுறை கால சிறப்பு சேவை: அசத்தும் மதுரை இளைஞர்கள்

Published : 20 Jun 2018 09:46 IST

ஒய்.ஆண்டனி செல்வராஜ்



மாநகராட்சி கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கரும்பலகைக்கு வர்ணம் பூசும் இளைஞர்கள்.

கோடை விடுமுறையில் தூசிபடிந்து கிடக்கும் அரசு பள்ளிகளை சுத்தம் செய்து புதுப்பொலிவாக்கும் சேவையை செய்கிறது மதுரை ‘வா நண்பா’ என்ற இளைஞர்கள் குழு. இவர்களைப் பொருத்தவரை கோடை விடுமுறைக்கு விடுமுறை விடுகிறார்கள். விடுமுறைக் காலத்தில் அரசு பள்ளிகள் பூட்டியே இருக்கும். அந்த சமயங்களில் வகுப்பறைகள் பராமரிப்பு இன்றி தூசி படிந்து காணப்படும். புழக்கம் இல்லாதததால் பறவைகளின் எச்சம், எலிகளின் நடமாட்டத்தால் பள்ளிகள் அலங்கோலமாக மாறிவிடும்.

பள்ளிகள் திறந்ததும் முதல் நாள் வகுப்பறைக்குள் நுழையும் மாணவர்களால் உட்கார முடியாத நிலைமையில் தான் பெரும்பாலான பள்ளிகள் இருக்கும். இதனால் மாணவர்களை வைத் தோ ஆட்களைக் கொண்டோ சுத்தம் செய்த பிறகே மாணவர்களும் ஆசிரியர்களும் வகுப்பறையில் அமர முடியும். கரும்பலகைகள் வெளுத்துக் கிடக்கும்.

இப்படி கோடை விடுமுறையில் பூட்டியிருக்கும் அரசு பள்ளிகளை சுத்தம் செய்யும் பணியில் மதுரையைச் சேர்ந்த ‘வா நண்பா’ இளைஞர்கள் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஏதாவது ஒரு அரசு பள்ளியை தேர்ந்தெடுத்து சுத்தம் செய்கின்றனர். இதனால் பள்ளி திறந்து முதல் நாள் வரும் மாணவர்களுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.

இவர்கள் ஏற்கெனவே ஏரி, குளங்கள், சாலைகள், பஸ் நிறுத்தங்கள், அரசு கழிப்பிடங்களை சுத்தம் செய்து பராமரிப்பது, பள்ளிகள், பொது இடங்கள், சாலைகளில் மரக்கன்றுகள் நடுவது, தேசத் தலைவர்கள் சிலைகளை சுத்தம் செய்வது போன்ற சமூகப்பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

இதுகுறித்த குழுவின் ஒருங்கிணைப்பாளரான எம்.சி.சரவணன் கூறியது:

பள்ளிகள் திறக்கும் போது மாணவர்கள் வகுப்பறையில் மகிழ்ச்சியாகவும், குதூகலமாகவும் இருக்க வேண்டும். பசங்களுக்கு படிக்கிற இடம் பசுமையாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும். அதற்காக மதுரையில் உள்ள மாநகராட்சி அரசு பள்ளிகள் வளாகத்தில் குப்பைகளை அகற்றுவது, பள்ளி நுழைவு வாயில் முன் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களை கிழிப்பது, வகுப்பறையில் தூசி, ஒட்டடைகளை அகற்றுகிறோம். பெஞ்ச், மேஜைகள் உடைந்திருந்தால் அதை சரி செய்து கொடுக்கிறோம். கரும்பலகைகளை வர்ணம் பூசுகிறோம்.

இது எங்களுக்கும் ஒரு புது அனுபவமாகவும் குதூகலமாகவும் இருக்கிறது. நாங்கள் மாநகராட்சி பள்ளிகளில் படித்தவர்கள் என்பதால் படித்த பள்ளிகளை சுத்தம் செய்வதை கடமையாக கருதுகிறோம்.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கு பள்ளியின் சுற்றுச்சூழலும் ஒரு காரணம். கரும்பலகைளை ஆண்டுதோறும் வர்ணம் பூசக்கூட பள்ளிகளில் நிதி ஆதாரம் இல்லை. அதனால் நாங்கள் ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் அரசு பள்ளிகளை பராமரித்து புதுப்பொலிவாக்குகிறோம் என்றார்.

அரசுப் பள்ளிகளை பாதுகாக்கும் பணியில் அவற்றை சுத்தப்படுத்துவதும் முக்கியமானது என்பதை உணர்த்துகின்றனர் இந்த மதுரை இளைஞர்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024