Wednesday, June 20, 2018

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 43 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு: 28-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியீடு

Published : 20 Jun 2018 07:32 IST

சென்னை
 


எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாளான நேற்று, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர். - M_PRABHU

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 43 ஆயிரத்து 935 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தரவரிசைப் பட்டியல் வரும் 28-ம் தேதி வெளியிடப்படுகிறது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் விண்ணப்ப விநியோகம் நிறைவடைந்தது. அரசு இடங்களுக்கு 24,933 விண்ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 13,338 விண்ணப்பங்கள் என மொத்தம் 38,271 விண்ணப்பங்கள் விற்பனையானது. இவைதவிர www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org என்ற சுகாதாரத் துறையின் இணையதளங்களில் இருந்தும் விண்ணப்பங்களை மாணவ, மாணவிகள் பதிவிறக்கம் செய்தனர்.

மொத்தம் 43,935 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தரவரிசைப் பட்டியல் வரும் 28-ம் தேதி வெளியிடப்படுகிறது. முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடங்கி 5-ம் தேதி வரையும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடக்க உள்ளது.

அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வு

தமிழகத்தில் மட்டும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி உட்பட 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 456 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி, சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் இருந்து 30 பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடுக்கு கொடுக்கப்படுகின்றன.

2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) www.mcc.nic.in என்ற இணையதளத்தில் இன்று தொடங்குகிறது. இரண்டு கட்டங்களாக கலந்தாய்வு நடக்க உள்ளது. இதற்காக ஆன்லைனில் பதிவு செய்வது கடந்த 13-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெற்றது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024