Wednesday, June 6, 2018

தமிழ் வழியில்நீட் தேர்வு தேர்வெழுதியவர்களுக்கு 49 வினாக்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க கோரிய வழக்கு: வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

Published : 05 Jun 2018 17:35 IST




நீட் தேர்வில் தமிழ் வழியில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 49 வினாக்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கக் கோரிய மனுவினை இம்மாதம் 11 -ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ராஜ்யசபா எம்.பி. டி கே.ரங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில்,

  “நாடு முழுவதும் 2018 - 2019 ஆம் ஆண்டிற்கான மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வு எனப்படும் நீட் தேர்வுக்கான விண்ணப்ப விநியோகம் மார்ச் 9 ஆம் தேதி முதல் தொடங்கியது. இதற்கு விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ரூபாய் 1,400 பெறப்பட்டது.

நீட் தேர்விற்காக 170 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 13 லட்சத்து 23 ஆயிரத்து 672 மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பித்தனர். இதில் தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 288 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில் 24 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தமிழ் வழி வினாத்தாளை தேர்வு செய்து தேர்வு எழுதினார்கள்.

நாடு முழுவதும் மே 6 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நீட் நுழைவு தேர்வு நடைபெற்றது. மூன்று மணி நேரம் நடைபெற்ற நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் உள்ளிட்ட மூன்று பாடப்பிரிவுகளில் இருந்து 180 வினாக்கள் கேட்கப்பட்டது.

நான்கு விடைகள் அளிக்கப்பட்டு ஒரு சரியான விடையை தேர்ந்தெடுக்கும் முறையில் வினாத்தாள்கள் அமைக்கபட்டிருந்தன. சிபிஎஸ்இ பாடத்தினை அடிப்படையாக கொண்டே நீட் தேர்வு வினாக்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால் தமிழகத்தில் சமச்சீர் கல்வி நடைமுறையில் உள்ளது. சிபிஎஸ்இ கல்வி முறை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் என்ற அமைப்பின் கல்வி முறையை பின்பற்றுகிறது.

இதனால் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு நீட் தேர்வு எளிமையாக இருந்தது. ஆனால், சமச்சீர் கல்வி முறையில் உள்ள இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகளில் இருந்து நீட் தேர்வு வினாக்கள் பின்பற்றவில்லை. இதனால் தமிழக மாணவர்கள் நீட் தேர்விற்காக தனி கவனம் செலுத்தி புதிய பாடங்களை படித்தனர். இதனால் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் நீட் தேர்வுக்காக கோச்சிங் சென்டர்கள் சென்று அதிகளவில் பணம் செலுத்தி பயின்றனர்.

மே 6 ஆம் தேதி நடத்த நீட் தேர்வில் தமிழில் மொழி பெயர்ப்பு செய்த வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக கேட்கபட்டிருந்தன. தமிழில் மொழிமாற்றம் செய்த வினாத்தாளில் இயற்பியல் பாடப்பிரிவில் 10 வினாக்களும், வேதியியல் பாடப்பிரிவில் 6 வினாக்களும், உயிரியல் பாடப்பிரிவில் 33 வினாக்களும் தவறாக கேட்கபட்டிருந்தன.

குறிப்பாக வினா எண் 50,75,77,82 ஆகிய வினாக்கள் உள்பட 49 வினாக்கள் தவாறாக இருந்தன. இதனால் தமிழ் மொழியில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட வினா தாளில் தவறாக கேட்கப்பட்டிருந்த 49 வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும்.

இதுதொடர்பாக மே 10 ஆம் தேதி சிபிஎஸ்இ மற்றும் முதல்வர் தனிபிரிவுக்கு புகார் அளித்தேன். மேலும் எந்தெந்த வினாக்கள் தவறு என தனிதனியாக குறிப்பிட்டு பிரதமர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். 49 வினாக்கள் தவறாக உள்ளன என புகார் அளிக்கபட்ட நிலையில் எனது மனுவை பரிசீலனை செய்யாமல் மே 24 ஆம் தேதி விடைதாள் வெளியிடப்பட்டது.

சரியான முறையில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படாமல் இருந்த வினாத்தாளால் தமிழ் வழி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற முடியாமல் போக வாய்ப்புள்ளது.

எனவே மே 6 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு தவறாக தமிழில் மொழிமாற்றம் செய்யபட்டிருந்த 49 வினாக்களுக்கு மதிப்பெண் வழங்கி உத்தரவிட வேண்டும் அல்லது +2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும். மேலும், நீட் தேர்வு முடிவுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை மனுதாரர் வழக்கறிஞர் அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என திங்கள்கிழமை நீதிபதிகள் முன்பு முறையிட்டனர். அப்போது அரசு தரப்பில் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கினை விசாரிக்க அவசரம் இல்லை என்றனர் நீதிபதிகள். எனவே மனுதாக்கல் செய்யும் பட்சத்தில் பட்டியலிடப்பட்டு முறையாக விசாரணைக்கு வரும் என்றனர் நீதிபதிகள்.

இந்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் தேர்வு தொடர்பான வழக்குகளை கீழமை நீதிமன்றங்கள் விசாரிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்புதால் இந்த வழக்கினை இங்கு விசாரிக்க இயலாது என்றனர் நீதிபதிகள்.

மேலும் மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக காலஅவகாசம் கோரியதால் வழக்கினை வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

PG med counselling ’24, after delay, from Nov 8

PG med counselling ’24, after delay, from Nov 8  TIMES NEWS NETWORK 02.11.2024 Chennai : PG medical counselling for 2024, which faced signif...