தமிழ் இசையே நீ வாழீ!
Published : 04 Jun 2018 07:06 IST
இசைஞானி என்று ரசிகர்களால் போற்றப்படும் இளையராஜாவின் பவள விழா ஆண்டு இது. 1976-ல் ‘அன்னக்கிளி’ படத்தில் தொடங்கி ஆயிரக்கணக்கான பாடல்கள், இணையற்ற பின்னணி இசைக்கோவைகள் என்று அதே அர்ப்பணிப்புடன் உற்சாகமாக இயங்கிவருகிறார் இளையராஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி, ஆங்கிலம் என்று 1,000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் இளையராஜாவைக் கவுரவிக்கும் விதமாக, இந்தியாவின் மிக உயர்ந்த இரண்டாவது விருதான பத்மபூஷண் இந்த ஆண்டில் வழங்கப்பட்டிருப்பது சாலப் பொருத்தம்.
தேனி மாவட்டம், பண்ணைபுரத்தில், 1943 ஜூன் 2-ல் பிறந்தவர் இளையராஜா. தனது அண்ணன் பாவலர் வரதராசனின் இசைக் குழுவில் தொடங்கிய பயணம் அவருடையது. திரைத் துறைக்குள் ஒரு கிட்டார் இசைக் கலைஞராக நுழைந்து, பிரபல இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷின் பிரதான உதவியாளராகப் பணிபுரிந்தவர். திரையிசையின் பல்வேறு நுட்பங்களைக் கற்றுத் தேர்ந்ததுடன், தன்ராஜ் மாஸ்டர் எனும் இசை ஆசிரியரிடம் பயின்று, லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் ‘கிரேடு -8’ முடித்தவர். பரபரப்பான பணிகளுக்கு இடையில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் அசாத்திய உழைப்பு காட்டியவர். இசையமைப்பாளராகப் புகழ்பெற்ற பின்னரும், கர்னாடக இசையைக் கற்க, அதிகாலையிலேயே செல்லும் பழக்கத்தைப் பின்பற்றியவர்.
இவை அனைத்துமே, திரையிசையில் அளப்பரிய சாதனை கள் புரிய அவருக்கு உதவின. கிராமியக் கதை, நகரப் பின்னணி கொண்ட கதை, காதல் கதை, அறிவியல் புனை கதை, திகில் கதை, சாகசக் கதை என்று எல்லாவிதமான படங் களுக்கும் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். தனது இசையின் மூலம், படங்களின் வெற்றிக்கு உதவிய துடன், பல பாடகர்களை, பாடலாசிரியர்களை அறிமுகம் செய்திருக்கிறார். ‘ஹவ் டு நேம் இட்’, ‘நத்திங் பட் விண்ட்’, ‘24 ஹவர்ஸ் இந்தியா’, ‘மியூசிக் மெஸையா’ உள்ளிட்ட அவரது இசைத் தொகுப்புகள் திரையிசைக்குள் அடக்கிவிட முடியாத அவருடைய இசை ஞானத்துக்கான எளிய சான்றுகள். சர்வ தேச ஆல்பங்களிலும் அவரது பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. 1992-ல் லண்டன் ஃபில்ஹார்மோனிக் இசைக் குழுவுக்காக சிம்பொனி எழுதியது அவரது சாதனைகளுள் ஒன்று. ஹங்கேரியின் புடாபெஸ்ட் சிம்பொனி இசைக் குழுவைப் பயன்படுத்தி அவர் உருவாக்கிய ‘திருவாசகம் இன் சிம்பொனி’ ஆல்பம் புகழ்பெற்றது.
ஒரு குக்கிராமத்தின் எளிய குடும்பப் பின்னணியிலிருந்து வந்து, பெரும் இசை சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் இளையராஜா. கோடிக்கணக்கான சாமானிய மக்களின் இசை முகமாக மிளிர்பவர். தமிழ் மண்ணின் மிகச் சிறந்த சாதனையாளர்களில் ஒருவரான இளையராஜாவுக்கு அவருடைய வாழ்வின் முக்கியமான தருணம் ஒன்றில் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்வதில் உளமார்ந்த மகிழ்ச்சிகொள்கிறது ‘இந்து தமிழ்’ நாளிதழ். இளையராஜா வாழீ நீர்!
No comments:
Post a Comment