Sunday, June 17, 2018

குழந்தை கடத்த வந்ததாக 60 வயது முதியவர் மீது தாக்குதல்..! காவல்துறை விசாரணை

எம்.திலீபன்   17.06.2018

குழந்தைகளைக் கடத்த வந்ததாக 60 வயது முதியவரை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்த சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாவட்டத்தில் தொடர்ந்து பிள்ளை பிடிப்பவர்கள் உலாவுதாக வதந்திகள் பரவிய வண்ணம் நிலவுகிறது.



பெரம்பலூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தில் 2 நாட்களாக 24 வயது நிரம்பிய வாலிபர்கள் 2 பேர் அப்பகுதி தெருவோரம் உள்ள தெருக்களில் சுற்றி வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளை அழைத்து 2 பேரும் பேசியதால் சந்தேகப்பட்ட பெற்றோர், பொதுமக்கள் நேற்று முன்தினம் இருவரையும் குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நினைத்துப் பிடித்து வைத்தனர்.

தகவல் அறிந்தது சம்பவ இடத்துக்கு பெரம்பலூர் போலீஸார் வந்து 2 பேரையும் மீட்டு விசாரித்தனர். அதில் செஞ்சேரியில் தங்கி பழைய துணிகளை வாங்கிச் செல்ல வந்த மகாராஷ்டிரா மாநிலத்தவர் என அறிந்ததால் அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். இந்நிலையில் இன்று பெரம்பலூர் துறைமங்கலத்தில் குழந்தைகளுடன் நடந்து சென்ற பெண்ணைத் தொடர்ந்து சென்ற 60 வயது முதியவரைக் குழந்தை திருடன் எனச் சந்தேகித்து பொதுமக்கள் பிடித்து வைத்து அடித்து உதைத்தனர். பிடிபட்ட முதியவரோ எதுவுமே பேசாமல் இருந்தார்.

 தகவல் அறிந்ததும் பெரம்பலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து முதியவரை மீட்டுச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்டவர் தமிழ் பேச தெரியாத வடமாநிலத்தவரா அல்லது மனவளர்ச்சி குன்றியவரா என்பதும் தெரியவில்லை. இதேபோல் பல்வேறு கிராமங்களில் குழந்தை திருடர்கள், வடமாநிலங்களில் இருந்து வந்திறங்கியதாக வதந்தி பரவியுள்ளதால் தினம்தோறும் ஒரு கிராமத்தில் குழந்தை கடத்தல் பேச்சாகவே உள்ளது. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றார்கள் பொதுமக்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024