Sunday, June 24, 2018

வீடுகளில் திடீரென கருகும் மீட்டர்: தவறை கண்டறியாமல் பணம் வசூல்

Added : ஜூன் 24, 2018 00:33


வீடுகளில், மீட்டர் கருகி விட்டால், அதற்கு காரணம் என்ன, யாருடைய தவறு என கண்டறியாமல், நுகர்வோரிடம், மின் வாரியம் பணம் வசூல் செய்வது, அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.வீடுகள் உள்ளிட்ட இணைப்புகளில், மின் பயன்பாட்டை கணக்கிட, மின் வாரியம், மீட்டர் பொருத்துகிறது. அதிக மின் பளு, தரம் குறைவு உள்ளிட்ட காரணங்களால், மீட்டர் கருகுவது, பழுதாவது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

கட்டணம் : அவ்வாறு, மீட்டர் கருகும்போது, தவறு யார் பக்கம் எனக் கண்டறியாமல், புதிய மீட்டர் பொருத்த, மின் வாரியத்தில் பணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், 'மீட்டரில் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. மின் ஊழியர்களிடம் புகார் தெரிவித்தால், மீட்டர் எரிந்து விட்டதாகக் கூறி, புதிய மீட்டர் பொருத்துவதற்கு கட்டணம் செலுத்தும்படி சொல்கின்றனர்' என்றனர்.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின் இணைப்பு பெறும்போது, குறிப்பிட்டிருந்த அளவை விட, அதிக மின்சாரம் பயன்படுத்துவது; மீட்டர் ஒயரை சரியாக இணைக்காமல் இருப்பதால், மீட்டர் கருக வாய்ப்புள்ளது.

'கரன்ட் காயில்' : சில ஆண்டுகளுக்கு முன், கருப்பு பெட்டி போன்ற, மீட்டர் இருந்தபோது, அது, எரிந்து விட்டதாக புகார் வந்தால், ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அதில், 'பிரஷர் காயில்' என்ற, தாமிரம் சுற்றிய கம்பி எரிந்திருந்தால், மின் வாரியத்தின் தவறு. 'கரன்ட் காயில்' எரிந்திருந்தால், நுகர்வோரின் தவறு. அதன்படி, மின் வாரியத்தின் தவறாக இருந்தால், நுகர்வோரிடம் பணம் வாங்காமல், புதிய மீட்டர் பொருத்தப்படும். நுகர்வோர் தவறாக இருந்தால், கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது, 'ஸ்டேடிக்' என்ற, பிளாஸ்டிக் மீட்டர் பொருத்தப்படுகிறது. இவற்றில், பல மீட்டர்கள், கிடங்குகளில் இருந்து வரும்போதே, பிரச்னைக்கு உரியதாக உள்ளன. இதற்கு, மீட்டரை சப்ளை செய்யும் நிறுவனங்களின் குறைபாடே காரணம்.
வழிமுறை : ஸ்டேடிக் மீட்டர் எரிந்து, 'டிஸ்பிளே' வரவில்லை எனில், அதற்கு, நுகர்வோரின் தவறா, மின் வாரியத்தின் தவறா என, கண்டறிய முடியாத நிலை உள்ளது. எனவே,, மீட்டர் எரிந்து விட்டது என்றால், புதிய மீட்டர் பொருத்த, ஒரு முனை மின் இணைப்பிற்கு, 548 ரூபாய்; மும்முனை இணைப்பிற்கு, 1,347 ரூபாய் என, வசூலிக்கப்படுகிறது. பலரும், பணம் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால், மீட்டர் எரியும் பிரச்னைக்கு தீர்வு காண, யார் தவறு என்பதை கண்டறிய, தனி ஆய்வகம் ஏற்படுத்த வேண்டும். மேலும், மீட்டர் கருகுவதற்கு காரணம் என்ன; அதில், நுகர்வோர் பக்கம் உள்ள தவறுகள்; மின் வாரியத்தின் தவறுகள் எவை என்ற, விரிவான வழிமுறைகளை, அனைவருக்கும் தெரியும்படி, நிர்வாகம் வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024