Friday, June 8, 2018

தலையங்கம்

வேலையில்லா திண்டாட்டத்தின் கொடூரம்





தமிழ்நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது.

ஜூன் 08 2018, 03:00

தமிழ்நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. இன்ன வேலைக்காக படிக்கிறோம், அந்த வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், வங்கிகளில் கடன்வாங்கி படிக்கும் மாணவர்கள் அந்த வேலை கிடைக்காமல், என்ன வேலை கிடைத்தாலும் சரி, எவ்வளவு சம்பளம் கிடைத்தாலும் சரி, தன் சாப்பாட்டு செலவுக்கும், வங்கிக்கடனை அடைப்பதற்கும் வருமானம் கிடைத்தால்போதும் என்ற நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள். பல பட்டங்கள் பெற்றவர்கள் கூட, படிக்காதவர்கள் பார்த்துக் கொண்டு இருக்கும் வேலையை பெறுவதற்கு போட்டிப்போடும் நிலை ஏற்பட்டுவிடுகிறது.

சமீபத்தில் ஐகோர்ட்டில் நடந்த ஒரு வழக்கின்போது, நீதிபதி என்.கிருபாகரன் வேலையில்லாத திண்டாட்டம் எந்த நிலைக்கு போயிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டி இருக்கிறார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அப்போது முதுகலை பட்டம் பெற்ற ஆசிரியர்களில் சிலர், பிளஸ்–2 பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தமாட்டோம் என்று போராட்டம் நடத்திக் கொண்டு வந்ததை குறிப்பிட்டு, ‘‘ஆசிரியர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். அவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைத்திருக்கிறது. சென்னை ஐகோர்ட்டில் அடிப்படை சம்பளம் ரூ.7,500–க்காக துப்புரவு பணியாளர்கள் வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் என்ஜினீயரிங் பட்டதாரிகள், எம்.பில். படித்தவர்களைவிட, ஆசிரியர்கள் நல்லநிலையில் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார். என்ஜினீயரிங் படித்தவர்கள், எம்.பில். படித்தவர்கள் ஐகோர்ட்டில் மட்டும் இத்தகைய சாதாரண பணியில் ஈடுபடவேண்டிய நிலைக்கு தள்ளப்படவில்லை. பல இடங்களில் வேலையில்லா திண்டாட்டத்தின் இத்தகைய நிலையை பார்க்க முடிகிறது. இந்த செய்தி என்றைக்கு பத்திரிகையில் வந்ததோ, அன்றே ‘டிடிநெக்ஸ்ட்’ ஆங்கில பத்திரிகையில் வெளிவந்த ஒரு செய்தி உயர் பட்டங்களை பெற்ற பலர் ‘டாஸ்மாக்’ பார்களிலும், ஓட்டல் சமையல் அறைகளிலும், வீடு வீடாகச் சென்று நுகர்வோருக்கு பொருட்களை வழங்கும் பணியில் இருப்பதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி இருக்கிறது. ‘‘ஒரு புதிய இந்தியாவை இளைஞர் சக்தி என்று சொல்லப்படும் யுவசக்தி கொண்ட இந்தியாவை படைப்பேன்’’ என்று பிரதமர் கூறிக்கொண்டிருக்கும்போது, இவ்வாறு இளைஞர் சக்தி வீணாகிக்கொண்டிருப்பது நிச்சயமாக வருந்தத்தக்கது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும், மாணவர்களுக்கு படிக்கும்போதே ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’களை அளிக்கவும், ஆங்கிலத்தில் புலமை பெறவும் செய்ய வேண்டும். இதுமட்டுமல்லாமல், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் நிறைய தொழிற்சாலைகளை தனியார் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொடங்க ஊக்கம் அளிக்கவேண்டும். கனரக தொழிலில் பெரிய பெரிய எந்திரங்கள், கம்ப்யூட்டர்களைக் கொண்டே உற்பத்தி இருக்கும் என்பதால், ஆட்கள் அதிகம் தேவைப்படாது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளை தொடங்குவதன் மூலமாகத்தான் நிறைய வேலைவாய்ப்புகளை பெருக்கமுடியும். இத்தகைய தொழிற்சாலைகளிலும் வேலைபார்ப்பவர்களை மட்டும் உருவாக்காமல், சிறு தொழில்களை தொடங்கும் தொழில் முனைவோரை உருவாக்கும் வகையிலான படிப்புகளை பல்கலைக்கழகங்கள் தொடங்க வேண்டும். எப்படி விவசாயத்திற்கு என தனி பல்கலைக்கழகம் இருக்கிறதோ, பொறியியல் படிப்புக்கு என தனி பல்கலைக்கழகம் இருக்கிறதோ, சட்டப்படிப்புக்கு என தனி பல்கலைக்கழகம் இருக்கிறதோ, ஆசிரியர் படிப்புக்கு என தனி பல்கலைக்கழகம் இருக்கிறதோ, டாக்டர்கள், நர்சுகள் படிப்புக்கு என தனி பல்கலைக்கழகம் இருக்கிறதோ, அதுபோல சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு என தனி பல்கலைக்கழகம் தொடங்கும் முயற்சியை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024