Friday, June 8, 2018

மாநில செய்திகள்

‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்த மற்றொரு மாணவி தற்கொலை உருக்கமான தகவல்கள்





விழுப்புரம் பிரதீபாவை தொடர்ந்து ‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்த திருச்சியை சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவியும் தற்கொலை செய்துகொண்டார்.

ஜூன் 08, 2018, 04:45 AM

திருச்சி,

விழுப்புரம் மாவட்டம் பெருவளூரை சேர்ந்த மாணவி பிரதீபா நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். பிரதீபா மரண செய்தி தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த சோகம் அடங்குவதற்கு முன்பாக திருச்சியில் மற்றொரு மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

திருச்சி அருகே உள்ள உத்தமர் கோவிலை சேர்ந்தவர் கண்ணன் (வயது 47). அரசு போக்குவரத்து கழக டிரைவரான இவர் அண்ணா தொழிற்சங்கத்தின் கிளை தலைவராகவும் உள்ளார். இவரது மனைவி செல்வி, மகள் சுபஸ்ரீ (17), மகன் மிதுன் (13).

மருத்துவராக விரும்பிய சுபஸ்ரீ பிளஸ்-2 தேர்வில் 907 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவ படிப்பில் சேரமுடியும் என்பதால் தனியார் பயிற்சி நிறுவனம் ஒன்றில் சேர்ந்து சிறப்பு பயிற்சி பெற்று நீட் தேர்வை எழுதினார்.

ஆனால் ‘நீட்’ தேர்வில் அவர் 24 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். இதனால் அவரது டாக்டர் படிப்பு கனவு தகர்ந்துபோனது. தேர்வு முடிவு வெளியானதில் இருந்தே அதிகம் பேசாமல் சுபஸ்ரீ சோகமாக இருந்தார். அவரை பெற்றோர் சமாதானப்படுத்தினர். ஆனாலும் அவர் சோகமாகவே இருந்தார். இதனால் அவரை திடப்படுத்துவதற்காக பெற்றோர் நேற்று முன்தினம் மாலை காலபைரவர் கோவிலுக்கு அழைத்துச்சென்றனர்.

பின்னர் வீடு திரும்பியதும் இரவு 10 மணி அளவில் தனது அறையில் இருந்த சுபஸ்ரீ திடீரென துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்குபோட்டுக் கொண்டார். இதனை அறிந்த அவரது பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உடலை கீழே இறக்கி ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் வழியிலேயே சுபஸ்ரீ பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதுபற்றி கொள்ளிடம் டோல்கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். போலீசார் சுபஸ்ரீயின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். நேற்று காலை சுபஸ்ரீயின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியினர், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் சுபஸ்ரீயின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர், தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் கண்ணனை செல்போனில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தனர். இதனையடுத்து சுபஸ்ரீ உடல் மின்மயானத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

சுபஸ்ரீயின் தந்தை கண்ணன் கூறும்போது, “நீட் தேர்வில் தவறான பதிலுக்கு மதிப்பெண் மைனஸ் ஆகும் என்பதை மறந்து, அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்திருக்கிறாள். இதனால் வெகுவாக மதிப்பெண்கள் குறைந்து விட்டது. நாங்கள் பரவாயில்லை, வெளிநாட்டுக்கு அனுப்பி மருத்துவம் படிக்கவைக்கிறோம் என்றோம். இருப்பினும் 3 நாட்களாக அமைதியாக இருந்தவள் இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்துவிட்டாள். என் மகளைபோன்ற முடிவை எந்த மாணவியும் தேடிக்கொள்ள வேண்டாம். எங்கள் நிலைமை இனி எந்த பெற்றோருக்கும் வரக்கூடாது. தமிழ்நாட்டுக்கு ‘நீட்’ தேர்வு கூடாது” என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024