Sunday, June 17, 2018



தொப்பையைக் குறைக்கும் புதிய கார்பாக்ஸிதெரபி... சாத்தியம்தானா' - மருத்துவர்கள் சொல்வது என்ன? #Carboxytherapy 


ஜி.லட்சுமணன்

`தொப்பையைக் குறைக்க வியர்க்க, வியர்க்க ட்ரெட்மில்லில் ஓட வேண்டாம். விதவிதமான டயட் முறைகளையெல்லாம் பின்பற்ற வேண்டாம். இந்த ஊசியைப் போட்டுக்கொண்டால் போதும்... தொப்பை குறைந்து, ஸ்லிம்மாகிவிடலாம்’ என்று ஆச்சர்யப்படவைத்திருக்கிறது அமெரிக்காவில் அண்மையில் நடந்த ஆய்வு ஒன்று.



` `கார்பாக்ஸிதெரபி' (Carboxytherapy) எனப்படும் இந்தச் சிகிச்சையில் கார்பன் டை ஆக்ஸைடு வாயு அடங்கிய பிரத்யேக ஊசியை அதிகக் கொழுப்பு சேர்ந்திருக்கும் இடத்தில் போட்டால், அந்தப் பகுதியிலிருக்கும் கொழுப்புச் செல்களை நீக்கி விடும்’ என்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள். நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் (Northwestern University) நடத்திய ஆராய்ச்சியில்தான் இந்தப் புதிய சிகிச்சை முறை கண்டறியப்பட்டிருக்கிறது. சமீபத்தில் இந்த ஆய்வுகுறித்த விவரங்களை அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜி-யின் (American Academy of Dermatology) இதழில் வெளியிட்டிருக்கிறது நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம்.

இந்தச் சிகிச்சை முறை குறித்து ஏற்கெனவே பல ஆய்வுகள் நடந்திருக்கின்றன. ஆனால், அவையெல்லாம் முழுமையாகவில்லை. இப்போதுதான் முதன்முறையாக மனிதர்களிடம் நடத்தப்பட்டிருக்கிறது. `உடல் பருமன் அளவீடு (BMI) 22-லிருந்து 29-க்குட்பட்ட 16 பேருக்கு இந்த ஊசியைப் போட்டு, பல கட்டங்களாக சோதனை நடத்தப்பட்டது. முடிவில், அல்டரா சவுண்ட் மூலம் பரிசோதித்ததில் அந்தப் பகுதியிலிருக்கும் கொழுப்புகள் ஐந்து வாரங்களில் குறைந்திருக்கிறது’ என்கிறது அந்த ஆய்வு.



``கார்பாக்ஸிதெரபி என்றால் என்ன... தொப்பையைக் குறைக்க உண்மையில் இந்தச் சிகிச்சை உதவுமா?’’ - சரும மருத்துவர் ஷரதாவிடம் கேட்டோம்.

``கார்பாக்ஸிதெரபி (Carboxytherapy), அழகுக்கலையில் ஏற்கெனவே பயன்பாட்டிலிருக்கும் ஒரு வகை சிகிச்சை முறை. கண்களின் கருவளையம், தழும்பு போன்றவற்றை நீக்கும் சருமம் தொடர்பான பிரச்னைகளுக்கு, இந்தச் சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இப்போது கொழுப்பை நீக்கும் சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம் என சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது, இந்தச் சிகிச்சையில் கொழுப்பு அதிகமிருக்கும் பகுதியில் கார்பன் டை ஆக்ஸைடு அடங்கிய பிரத்யேக ஊசியைப் போடுவார்கள். இது, ஏற்கெனவே உடலில் அந்தப் பகுதியில் கார்பன் டை ஆக்ஸைடின் அளவை இன்னும் கொஞ்சம் அதிகரித்து, கொழுப்பு செல்களுக்குக் கிடைக்கவேண்டிய ஆக்சிஜன் அளவைக் குறைத்துவிடும். இதனால் அந்தப் பகுதியிலிருக்கும் செல்கள் இறந்து போவதாகச் சொல்கிறது அந்த ஆய்வு. இதன் சாத்தியம் குறித்து முழுமையாக விளக்கப்படவில்லை.

அதே நேரத்தில் 16 பேரைக்கொண்டு நடத்தப்பட்ட மிகவும் சிறிய ஆய்வு இது. அதோடு, நீண்டகாலத்துக்கு அது பலன் தந்தது என்றும் சொல்லப்படவில்லை; ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அதே இடத்தில் கொழுப்புகள் உருவாகியிருப்பதாகத்தான் ஆய்வு முடிவு சொல்கிறது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட சிலருக்கு சிகிச்சை முடிந்த பிறகு வலி உள்பட சில பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே, இப்போதைக்கு இந்தக் கொழுப்பு குறைக்கும் சிகிச்சை முறை சிறந்தது எனச் சொல்ல முடியாது. முழுமையான கிளினிக்கல் ட்ரையல் முடிந்த பிறகே, இதை மேற்கொள்ள வேண்டும்" என்கிறார் ஷரதா.



``கார்பாக்ஸிதெரபி சிகிச்சை முறையில் தொப்பை குறைப்பு சாத்தியம்தானா... இது யாருக்கொல்லாம் பயன் தரும்?’’ - குடல், இரைப்பை அறுவைசிகிச்சை நிபுணர் பட்டா ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம்.

``உடற்பயிற்சி, டயட் போன்றவற்றைச் செய்து உடல் எடையைக் குறைக்க சோம்பல்படும் இளம் தலைமுறையை, இது போன்ற சிகிச்சை முறைகள் ஈர்க்கின்றன. அப்படிப்பட்ட வகையைச் சேர்ந்த ஓர் ஆய்வாகவே இது தெரிகிறது. `ஒரே ஓர் ஊசியைப் போட்டுக்கொண்டால் போதும், தொப்பையைக் குறைத்துவிடலாம்’ என்கிறது இந்த ஆய்வு.

இதில் பங்கேற்றவர்களும் ஆபத்தான உடல் பருமன் கொண்டவர்கள் இல்லை. அவர்களை வைத்துத்தான் ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்கள். எனவே, இது அழகுக்கலையில் தற்காலிகமாகப் பயனளிக்கலாம். ஆனால், அதிக உடல் எடையைக் குறைக்க இந்த முறை போதுமானதல்ல. மேலும், இந்தச் சிகிச்சையைப் பரிந்துரைக்க இதுபோன்ற சிறிய ஆய்வுகள் மட்டும் போதாது.

 குறிப்பிட்ட பகுதியில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்பை நீக்குவதற்கு பல்வேறு சிகிச்சைகள் ஏற்கெனவே இருக்கின்றன. அவற்றில் பரவலாக மேற்கொள்ளப்படும் அறுவைசிகிச்சை லைப்போசக்‌ஷன் (Liposuction). இதில், அல்ட்ரா சவுண்ட் துணையுடனும், பிரத்யேக ஊசி மூலமாகவும் உடலிலிருக்கும் கொழுப்பு உறிஞ்சி எடுக்கப்படும். பெரும்பாலும், கை, வயிறு, இடுப்பு, தொடை, மார்புப் பகுதியிலிருக்கும் அதிகக் கொழுப்பு இந்தச் சிகிச்சை முறையில் அகற்றப்படும். இந்தச் சிகிச்சையில் ரத்த இழப்பு மிக மிகக் குறைவாக இருக்கும் என்பதால், லைபோசக்‌ஷன்தான் நடைமுறையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது’’ என்கிறார் பட்டா ராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024