Sunday, June 17, 2018

''மார்க் பார்க்காமலே கையெழுத்துப் போடுவார் அப்பா!'' - பாலகுமாரன் மகள் உருக்கம் #FathersDay 

ஆ.சாந்தி கணேஷ்

ஜூன் 17 - உலக தந்தையர் தினம்.

சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் பற்றி அவருடைய மகள் கெளரியுடன் ஒரு மென் இருள் நேரத்தில் பேச ஆரம்பித்தேன்.

''எல்லாருக்கும் நான் கெளரி. அப்பாவுக்கு மட்டும் கெளரா. அப்படித்தான் என்னை ஸ்பெஷலா கூப்பிடுவார். என் மேல பிரியம் அதிமாச்சுனா ல கெளரவம்மான்னு கூப்பிடுவாரு.

வாஞ்சை, பிரியம், கருணை... இந்த மூன்று வார்த்தைகளின் ஒட்டு மொத்த சங்கமம்தான் அப்பா. அவருடைய எழுத்துக்களும் அதையே பிரதிபலிக்கும். அதனாலதான் அவர் எழுத்துக்களை படிச்சவங்க எல்லாம் அவரை 'அப்பா', 'அய்யா'ன்னு உரிமையா அழைச்சாங்க. வீடு தேடி வந்து பார்த்துட்டுப் போனாங்க. அதுதான் என் அப்பா.

அப்பாங்கிற வார்த்தைக்கான உரிமையை அவர் எனக்கும் சூர்யாவுக்குமானதா மட்டும் பார்க்கலை. அதை நாங்களும் புரிஞ்சு வைச்சிருந்தோம். தன்னைத் தேடி வர்றவங்களுக்கு தாயுமானவரா, தகப்பனா இருந்தார் அப்பா. அவரோட அன்புல எதிர்பார்ப்பே இருக்காதுங்க. சொன்னா நம்ப மாட்டீங்க, பிள்ளைகளான எனக்கும் சூர்யாவுக்கும்கூட எதையும் எதிர்பார்க்காத அன்பைத்தான் அள்ளி அள்ளிக் கொடுத்தார். 'அன்பு என்பது ஒருவரிடம் வசப்படுவதோ அல்லது ஒருவரை வசப்படுத்துவதோ அல்ல. அதுவாகிப் போதல், அதாவது, நாமே அன்பாகிப் போதல்' என்பார். இப்படித்தான் என் வீடும், வீட்டாரும் பாலகுமாரனாகி நிற்கிறோம்'' என்று நினைவுகளில் மூழ்குகிறார் கெளரி.



''சின்ன வயசுல அப்பா என்னை ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போகும்போது சத்தமா பாட்டு பாடிட்டே வண்டி ஓட்டுவாங்க .பல நேரங்கள்ல தேவாரம், திருவாசகம், சில நேரங்கள்ல சினிமா பாடல்கள். எம்.ஜி.ஆரோட 'அதோ அந்தப் பறவைப்போல ' பாட்டை ரோட்டுல சத்தமா அப்பா பாடுறப்போ பயங்கர உற்சாகமா இருக்கும். அப்பாவோட ஃபேவரைட் பாட்டுன்னா 'சிவப்பு ரோஜாக்கள்' படத்துல வர்ற 'நினைவோ ஒரு பறவை' பாடல்தான்.

நான் அஞ்சாவது படிக்கிறப்ப கமல் சாரோட 'விக்ரம் ' படம் ரிலீஸாச்சு. அந்தப் படத்துக்காக கமல் சார் நிறைய குழந்தைகளோட இருக்கிற மாதிரி ஒரு போஸ்டர் ரெடி பண்ணாங்க. அப்பாவுக்கு கமல் சார் நல்ல நண்பர் அப்படிங்கிறதால நான், சூர்யா, சந்தான பாரதி சார் பசங்க எல்லோரையும் வைச்சு அந்தப் போஸ்டரை உருவாக்கினாங்க. அந்த போஸ்டரை நான் படிச்ச ஆதர்ஷ் வித்யாலயா (ராயப்பேட்டை) ஸ்கூல் காம்பவுண்ட் சுவர்லேயும் ஒட்டியிருந்தாங்க. அதைப் பார்த்துட்டு என்னோட கிளாஸ் மிஸ், 'நீ பாலகுமாரன் பொண்ணா... உங்கப்பாகிட்ட எனக்கு ஆட்டோகிராப் வாங்கிக்கொடு'ன்னு கேட்டாங்க . நானும் அப்பாகிட்ட கேட்டேன். அவரும் 'என்றென்றும் அன்புடன் பாலகுமாரன்'ன்னு ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்தார். நானும் அதைச் சமர்த்தா ஸ்கூலுக்கு எடுத்துக்கிட்டுப் போனேன். ஆனா , டீச்சர்கிட்ட கொடுக்கலை. நானே வைச்சுக்கிட்டேன். ஏன்னா, நான் வாங்கின ஒரே செலிபிரெட்டி ஆட்டோகிராப் அப்பாவுடையதுதானே'' என்று கலகலக்கிறார் இந்த அப்பா பொண்ணு .

''மத்த அப்பா மாதிரியில்ல எங்கப்பா. மார்க் ஷீட் நீட்டுறப்பயோ, ரேங்க் கார்டுல கையெழுத்து வாங்குறப்பவோ நாங்க பயப்பட்டதா சரித்திரமே இல்ல. ஏன்னா அப்பா நாங்க வாங்கின மார்க்கை பார்த்தாத்தானே... பார்க்கவே மாட்டாங்க. மார்க் கார்டை வாங்கினதும் எங்க கையெழுத்து போடனும்னு மட்டும் பார்ப்பார். உடனே கையெழுத்து போட்டு எங்ககிட்ட கொடுத்திருவாங்க அப்பா.
எனக்கே ஆச்சர்யமா இருக்கும். ஒருநாள் மனசு கேக்காம அப்பாகிட்டேயே 'ஏம்பா, எங்க மார்க்ஸை செக் பண்ண மாட்டேங்கிற'ன்னு கேட்டேன். 'படிக்கிறது, ரேங்க் வாங்குறது உன்னோட பொறுப்பு. அதை நான் சொல்லி நீ செய்யக்கூடாது' அப்படின்னார். அந்த வார்த்தைகள் எங்களோட பொறுப்பை இன்னும் அதிகமாக்குச்சு'' என்றவர், தன் அப்பாவிடம் தான் வியந்த குண நலன்களைப் பட்டியலிடுகிறார்.

''கடவுள் நம்பிக்கை உள்பட எந்தவொரு விஷயத்தையும் எங்கமேல அப்பா திணிச்சதேயில்லை. எங்களுக்கான விஷயங்கள் எல்லாமே ஒரு பூ மலர்வது போலத்தான் நடந்துச்சு. அப்பா ஒரு நல்ல டெஷிசன் மேக்கர். பிரச்னைகளை பதட்டமே இல்லாம அணுகுவார். அதே மாதிரி ஒரு விஷயத்தை சூப்பர் ஃபாஸ்ட்ல செய்வார். தள்ளிப் போடுறதுங்கிறதே அப்பாவுக் அப்பாவுக்கு தள்ளிப் போடுதறது பிடிக்காது, கோபப்படுவார் அப்பா... ஆனால் அந்தக் கோவத்தால நாம சிரமப்படுற மாதிரி இருக்காது" என்றவர் தன் அப்பாவின் ஆன்மீக பற்று பற்றிப் பகிர்ந்து கொண்டார்.



''நான் திருமணம் முடிச்சு துபாய் போனதுக்கப்புறம் திடீர்னு போன் பண்ணுவாரு . 'கெளரா எல்லாம் சரியாயிருக்கா'ன்னு கேப்பாரு. 'காலையிலே இருந்து கால் வலிக்குதுப்பா 'ங்கிற உண்மையைச் சொல்லுவேன். 'அதான், மனசுக்குள்ள என்னவோ பண்ணுச்சு' என்பார்.

அப்பா எங்களைவிட்டு கிளம்பறதுக்கு முன்னாடி, அதாவது மே மாசம் ஆரம்பத்துல நான், என் கணவர் எங்க குழந்தையோட ஜார்ஜியாவுக்கு டூர் போயிருந்தோம். அங்கே ஒரு சர்ச் இருந்தது. செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் சர்ச்சுக்குள்ள போனவுடன் அங்க இருந்த கோபுரத்துக்குப் பக்கத்துல என் கணவர் நிக்கிற மாதிரி ஒரு ஃபோட்டோ எடுத்துக்கிட்டேன். அதை அப்பாவுக்கு அனுப்பினேன். அது டெலிவர் ஆனதும் என் போனோட சார்ஜ் ஆஃப் ஆகிடுச்சு. அந்த தேவாலயத்துல saint nino அப்படிங்கிற பெண் தெய்வத்தை வணங்குறாங்க . இவங்க இயேசு கிறிஸ்துவோட சிஸ்யர்கள்ல ஒருவர்னு சொல்லப்பட்டவர். ஜார்ஜியாவில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பியவர் இவர்தானாம். இந்த ஆலயத்தில் இவரைத்தான் பெண் தேவதையாக வழிபடுகிறார்கள். இந்த ஆலயத்துக்குள் நான் உள்ளே நுழைந்ததில் இருந்து வெளியே வருகிற வரைக்கும் என்னைச் சுற்றி 'ரும்' என்கிற ஒரு அதிர்வு சுற்றிக்கொண்டே இருந்தது. இந்தச் சத்தம் என் கணவருக்கு கேட்குதானு கேட்டப்ப அப்படி எதுவும் இல்லியேன்னு சொன்னார். இதையெல்லாம் அப்பாவுக்கு மெசேஜ் அனுப்புறதுக்காக ஹோட்டல் வந்துட்டு போனை ஆன் செய்றேன். என் ஃபோட்டோஸ் பார்த்துட்டு அப்பா அனுப்பின மெசேஜ்.

  எனக்கு அந்த சர்ச்சுக்குள் என்னென்ன நிகழ்ந்ததோ அதையெல்லாம் அப்பா வரிசையாக அதில் அனுப்பியிருந்தார். அதுவும் காலை 11.36க்கு நான் சர்ச் படத்தை அனுப்பியிருக்கிறேன். 11. 37, 11.38 என வரிசையாக மெசேஜ் செய்திருக்கிறார். ஸோ, கூகுள் செய்து பார்க்கவெல்லாம் நேரம் கிடையாது. தவிர, அதற்கு முன் தினம் நாளைக்கு இந்த சர்ச்சுக்கு போகப் போகிறேன் என்பதை நான் அப்பாவிடம் சொல்லவும் இல்லை. அப்பாவிடம் ஒரு ஆன்மிக சக்தி இருந்ததுங்க. அது மதமெல்லாம் கடந்து இருந்தது'' மெய் சிலிர்க்கிறார் பாலகுமாரன் மகள்!

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024