எய்ம்ஸ்: நன்மைகள் என்ன?
By DIN | Published on : 21st June 2018 01:40 AM |
மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதால், தரமான சிகிச்சை மட்டுமின்றி மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்க உள்ளன.எய்ம்ஸின் செயல்பாடுகள்: மருத்துவக் கல்வியில் ஒரு தெளிவான முறையை உருவாக்குதல், மருத்துவக் கல்வி தொடர்பான அனைத்து படிப்புகள் மற்றும் வசதிகளை ஒரே இடத்தில் கொண்டு வருதல், ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல், தடுப்பு மருத்துவம் மற்றும் ஆரம்ப நிலை, தீவிர நிலை, இறுதிக் கட்ட நிலையிலான சிகிச்சைகள் அளிப்பது. சமூகம் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் இவை அனைத்தும் எய்ம்ஸ் மருத்துவமனையின் செயல்பாடுகளாகும்.
நாடு முழுவதும் உள்ள எய்ம்ஸ் மருத்துவனைகளின் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு தனி நுழைவுத்தேர்வு நடத்தப்படும். இதன் அடிப்படையில் தமிழகத்துக்கு அனுமதி அளிக்கப்பட உள்ள 100 இடங்களுக்கும் சேர்த்து மாணவர் சேர்க்கை நடைபெறும்.
உயர் சிறப்பு மருத்துவத் துறைகள்: பொதுவான மருத்துவத் துறைகள் முதல் இதயவியல், சிறுநீரகவியல், நரம்பியல் உள்ளிட்ட உயர் சிறப்பு மருத்துவத் துறைகளும் உருவாக்கப்படும். 750 படுக்கை வசதிகள், 60 இடங்கள் கொண்ட செவிலியர் பயிற்சிப் பள்ளி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட உள்ளன.
சாமானியர் முதல் விஐபிக்கள் வரை: மத்திய அரசின் நிர்வாகத்தில் நடைபெறும் இந்த மருத்துவமனையில் தரமான இலவச சிகிச்சைகள் அளிக்கப்படும். மேலும், மிகக் குறைந்த கட்டணத்திலான சிகிச்சை மற்றும் பரிசோதனைகளும் இடம்பெறும். மருத்துவத் துறையில் கண்டுபிடிக்கப்படும் புதிய சிகிச்சை முறைகள், தொழில்நுட்பங்கள் அனைத்தும் உடனுக்குடன் எய்ம்ஸ் மருத்துவமனையில் பின்பற்றப்படும்.
அரசியல் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் தங்கி சிகிச்சை பெறுவதற்கென்று பிரத்யேக வசதிகள் செய்யப்பட்டிருக்கும். எனினும், பொது மக்களின் சிகிச்சைக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். எய்ம்ஸ் மருத்துவமனையில் சாமானியர்கள் முதல் முக்கியப் பிரமுகர்கள் வரை அனைவருக்கும் ஒரே வகையான சிகிச்சை அளிக்கப்படும்.
No comments:
Post a Comment