Thursday, June 21, 2018

இருக்கும் இடத்தை விட்டு...

By வாதூலன் | Published on : 19th June 2018 01:18 AM |

சில வாரங்கள் முன் ஒரு உறவினரின் வீட்டுத் திருமணத்துக்குப் போக வேண்டியிருந்தது. காலை வேளையில் முகூர்த்தம். மண்டபம் இருக்கும் இடத்தின் வரைபடம் அழைப்பிதழின் பின்புறம் அச்சிடப்பட்டிருந்தது. ஆனாலும் மண்டபம் தட்டுப்படவேயில்லை. எரிச்சலும், அலுப்பும் மேலிட (அதிகாலை தூக்கம் கெட்டதனால்) கைப்பேசியில் விசாரித்தால், மேள சப்தம்தான் பெரிதாக ஒலித்தது. கொஞ்சம் தொலைவு போய் ஒருவரிடம் கேட்டபோது, அட, அதைத் தாண்டி வந்திட்டீங்களே' என்று கூறினார். என்ன ஆயிற்றென்றால், கல்யாண மண்டபத்தின் வாசலில் ஏராளமான விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டிருந்ததால், மண்டபத்தின் பெயர் சிறிதாகக் குறிக்கப்பட்டிருந்தது கண்களுக்குத் தெரியவில்லை.

இது போன்று பல சமயங்களில் நடந்திருக்கிறது. ஆட்டோ, வாடகைக் கார் என எதுவானாலும் வேகமாகத்தான் செல்லும். அந்த விரைவில், ஏற்கனவே தெரிந்த பல கடைகள், கட்டடங்களைக்கூட தவறவிடச் சந்தர்ப்பங்கள் அதிகம். மேலும் நம்மூரில் திடீரென்று நடைமுறைப்படுத்தப்படும் ஒரு வழிப்பாதையை நீக்குவது', இரு வழித்தடத்தை அனுமதி இல்லாத' வழியாக மாற்றுவது போன்ற விதிமுறைகள் பிரச்னையைக் கூடுதலாக்குகின்றன.
இவை யாவும் வீட்டுக்கு வெளியே பயணம் போகும்போது ஏற்படும் நிகழ்வுகள். ஆனால் இல்லத்துக்குள்ளேயே பல பொருள்களைத் தேடித் திணறுகிற சங்கடங்கள் அவ்வப்போது உண்டாகும். இதில் முதலாவதாக நிற்பது கைப்பேசி. அதை அவசரத்தில் எங்காவது வைத்துவிட்டுப் பின்னர் தேடாத இடமே இருக்காது. வேறு கைப்பேசி மூலம் அழைத்தால், ஓசை வரும் திசை தெரியும். அப்போது அது மெளன நிலையிலிருந்தால் கண்டுபிடிப்பது கடினம்.

அடுத்ததாக வருவது, அட்டைகள். வங்கி அட்டைகள், அரசு தொடர்பான ஆதார், பான், ரேஷன் அட்டைகள் போன்ற பல. இப்போதெல்லாம் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தும்போதே கணினி குற்றங்கள் நேர்கின்றன. ஒரு முறை பற்று அட்டையைத் தேடுவதற்குள் நான் பட்ட பாடு இருக்கிறதே. நிதானமாக, வரிசை கிரமமாக முன்தின நிகழ்வுகளை யோசித்துப் பார்த்தேன். சட்டென்று ஞாபகம் வர அவசரமாகச் சென்று பார்த்தேன். துவைக்கப் போட்டிருந்த சட்டைப் பைக்குள் அது இருந்தது. நல்ல காலம், துணி துவைக்கும் இயந்திரத்திற்குள் போகவில்லை.

மற்றொன்று, இப்போதெல்லாம் கடைகளில் வாங்கும் கருவிகளுக்கோ, மின்னணு சாதனங்களுக்கோ கனமான உத்தரவாத அட்டை கொடுப்பதில்லை. கணினியில் அச்சிடப்பட்ட ரசீதே தருகிறார்கள். அதன் கீழ் பொடி எழுத்தில் உத்தரவாத வாசகம் அச்சாகி இருக்கும். கருவியில் ஏதேனும் பழுது வந்தால், இந்த ரசீதைத் தேட வேண்டும்.

இந்தத் தேடல் படலம், வயதானவர்களும், சிறு குழந்தைகளும் இருக்கிற இல்லங்களில் கூடுதல் பிரச்னையைத் தருகிறது. அந்த நாளில் அறுபது பிளஸ் வயதுக்காரர்கள் மூக்குக் கண்ணாடியையும், பேனாவையும் மட்டுமே தேடுவார்கள். இப்போது வயது அதிகரிக்கும்போது, மாத்திரைகளின் எண்ணிக்கையும் கூடுகிறது. அதுவும் சில மாத்திரைகளைப் பிய்க்கும்போது, அவை கீழே விழுந்து ஓடி விடுகின்றன. குனிந்து தேடுவதற்கு மற்றவர்களின் உதவி தேவைப்படுகிறது.

காலையில் பூஜையின்போது பால் வைக்கிற வெள்ளிக்கிண்ணத்தை எங்கேயோ வைத்து விட்டுத் தேடுகையில், மனத்துக்குள் சஞ்சலம் புகுந்தது. அதைப் பற்றி மறந்தே போய் நிச்சலனமாய் அமைதியாய் இருந்த சமயம், மிகத் தற்செயலாய்க் கிடைத்தது. குழந்தையின் கைங்கரியம்!
உணர்வு பூர்வமான பல அம்சங்களும் பொருளைத் தேட நம்மை அலைக்கழிக்கின்றன. அதுதான் ராசி'. வீட்டில் ஏதாவது விசேடம் நிகழும்போது முதன் முதலில் வைக்கிற வெள்ளிப் பாத்திரம், மருத்துவரைப் பார்க்கப் போகிற போது உடுத்துகிற பழைய புடவை இப்படிப் பல. ஒரு முறை, மனைவி ராசியான மஞ்சள் புடவையைத் தேடிப் பிடித்து டாக்டரைச் சந்திப்பதற்குத் தாமதமாகி விட்டது. நல்ல காலமாக, அவர் கடைசி நோயாளியைப் பரிசோதிக்கும் தருணத்தில் போய்ச் சேர்ந்தோம்.
இந்தக் காலகட்டத்தில், சுயதொழிலுக்கும், சுய முன்னேற்றத்துக்கும் கூட ஒரு தேடல் வேண்டியிருக்கிறது. உன்னிடம் மறைந்திருக்கும் திறமையைத் தேடித் தெரிந்து கொள்' என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். சுயதொழிலில் முன்னுக்கு வர வேண்டுமானால் சுற்றுப் புறத்திலுள்ள நுகர்வோரின் தேவைகளைத் தேடுவதுதான் முதற்படி என்று கூறுகிறார்கள்.

இறுதியாக ஆன்மிகத் தேடல். இது யாருக்கும் எளிதில் கைவரப் பெறாத ஒன்று. இமயம் முதல் குமரி வரை பல கோயில்களுக்குச் சென்று வந்தும், ஏதோவொரு வெறுமையை உணரும் முதியோர்கள் பலர் இருக்கிறார்கள். இந்த ஊரிலில்லை யென்று எங்கு நாடி யோடுறீர்? அந்த வூரிலீசனும் அமர்ந்து வாழ்வதெங்ஙனே?''என்கிற சிவவாக்கியர் பாடல்தான் ஞாபகம் வருகிறது.
இல்லற ஆசாபாசங்களிலிருந்து முற்றுமாக விலகித் துறவு நிலை எய்வதற்கு அசாத்திய மனப் பக்குவம் வேண்டும். அது மதுரையைச் சார்ந்த வெங்கட்ராமனுக்கு எட்டு வயதிலேயே கிடைத்ததால் அவர் ரமண மகரிஷியாகப் புகழ் பெற்றார். சின்மயானந்தாவின் சீடரான நடராஜன் வாலிபரான பின்னர் தயானந்த சரஸ்வதியாக மாறினார்.
எல்லாம் கிடக்கட்டும். ஓர் அம்சம் இன்றைய நாளில் ரொம்பவும் உறுத்தவே செய்கிறது. எந்த நாளேட்டைப் பிரித்தாலும், முதலில் எதிர்மறை செய்திகள்தான் கண்ணில் படுகின்றன. தொழிலதிபர் கடத்தல், சைபர் குற்றங்கள், அரசியல் குதிரை பேரம் இத்யாதி. நற்செய்திகளை தாளின் உள்ளே தேடிப் பார்க்க வேண்டியிருக்கிறது. அந்த நிலைமை மாறி, நல்ல செய்திகளை முதல் பக்கத்தில் இடம் பெறும் நாள் விரைவில் வர வேண்டும்.

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...