Thursday, June 21, 2018

யோகா: உலகிற்கு இந்தியா வழங்கிய கொடை

By ப. நாகேந்திரன் | Published on : 21st June 2018 01:30 AM |

மனிதன் தன் அறிவியல் ஆற்றல் மூலம் வாழ்க்கையை வசதியாக்கிக் கொண்டான். ஆனால் மனத்தையும் உடலையும் செம்மையாக்க தவறிவிட்டான். அதனாலேயே பல்வேறு இன்னல்களும் நோய்களும் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. அவற்றிலிருந்து விடுபட செய்வதறியாது தவிக்கின்றான்.

இந்தியா உலகிற்கு வழங்கிய கொடைகளுள் குறிப்பிடத்தக்கது யோகக் கலையாகும். மனிதனின் ஒருங்கிணைந்த ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்குவது இந்த யோகக் கலையே. பலரும் நினைக்கிறார்கள் யோகா இறைநிலையை அடைவதற்கென்று. அது ஒரு வகையில் சரியென்றாலும், அதன் உடல்ரீதியான் பயன்கள் ஏராளம். ஆம், யோகா என்பது வெறும் உடல் பயிற்சி, மனப் பயிற்சி மட்டுமல்ல; அதுவொரு நோய் தீர்க்கும் நிவாரணியும்கூட.

யோகா என்பது ஓர்அறிவியல். நம்முள் மறைந்துள்ள ஆற்றல்களை வெளிக்கொணரும் ஒருங்கிணைந்த முறை. நம்முள் இருக்கும் குணாதிசயங்களான அன்பு, அறிவு, திறமை, மகிழ்ச்சி, பாதுகாப்பு, நம்பிக்கை, விழிப்புணர்வு, உள்ளுணர்வு ஆகிய அனைத்தும் யோகப் பயிற்சியினால் விரிவடைகின்றன. இதுவே பண்டைய காலத்தில் யோகாவின் நோக்கமாகவும் பயன்பாடாகவும் கருதப்பட்டது. இன்னொரு முக்கிய அம்சம், உடலில் நோய் வரக் காரணமான பல பிரச்னைகளை வெளியேற்றுகிறது.
உடல் ஆரோக்கியம் பெறவும், அதைப் பராமரிக்கவும் ஆற்றல் மிகுந்த, சாந்தமான மற்றும் சீரான மனநிலையை யோகா உருவாக்குகிறது. இதுவே யோகத்தின் ரகசியம். எங்கு ஆரோக்கியமும் ஆற்றலும் அமைதியும் நிலவுகின்றதோ அங்கு நோய்க்கு இடமில்லை. எனவேதான் இன்று யோகா பல பிரச்சினைகளுக்கு தீர்வாகக் கருதப்படுகிறது; பல்வேறு மருத்தவமனைகளிலும் யோகா ஒரு சிகிச்சை முறையாக உள்ளது.
யோகாசனம் மூலம் ஆஸ்துமா, ஆர்த்ரைடீஸ், இதயக் கோளாறு, குடல் பிரச்னை, இடுப்பு வலி, தலைவலி, மூளைக் கோளாறு, மலட்டுத்தன்மை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் குணமாகின்றன.

யோகா எப்படி இவ்வளவு நோய்களை குணப்படுத்துகின்றது? எந்தவொரு நோய்க்கும் அதற்கான மூலக்காரணத்தை அறியாமல் சிகிச்சை அளிப்பதால் எந்தப் பயனும் இல்லை.

நோய்நாடி நோய் முதல்நாடி அதுதனிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்' என்பது குறள்.

பொதுவாக, இன்றைக்கு வரக்கூடிய நோய்கள் அனைத்தும் மனிதர்களின் தவறான பழக்கங்களால் மட்டுமே ஏற்படுகின்றன. குறிப்பாக, தவறான உணவுப்பழக்கம், தேவையற்ற சிந்தனை மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகியவற்றால் வருகின்றன.

இப்படி வரும் நோய்களின் தாக்கம், நம் வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்கள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அதிகரிக்கின்றன. மேலும் அவை வளர்ந்து மருத்துவர்களால்கூட குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இந்நிலையில்தான் பல மருத்துவர்களும் நோயாளிகளை யோகாசனம் செய்யப் பரிந்துரைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய மருத்துவ ஆய்வு, யோகாவைப் போன்ற ஒரு பன்முறை நிவாரணி இல்லை என்பதை நிரூபித்துள்ளது. எனவேதான் ஏனைய மருத்துவ முறைகளுக்குச் சவாலாக யோகா உருவெடுத்துள்ளது.

பொதுவாக, தவறான வாழ்க்கைமுறையால் முதலில் பாதிப்படைவது மனம்தான். நமது முழு ஆளுமைத் திறனும் நமது உடல் மற்றும் மனத்தை மையமாக வைத்தே உள்ளது. மனத்தை ஒரு மரத்தின் வேருக்கு இணையாகக் கூறலாம். ஒரு மரத்தின் வேரானது எப்படி நிலத்திலிருந்து சத்துகளை உறிஞ்சி அதன் தண்டு, இலை, கிளை, பூ மற்றும் கனிகளுக்குக் கடத்துகின்றதோ அவ்வாறே மனமானது உடலின் ஆதரமாக இருக்கக்கூடிய உயிர்சக்தியிலிருந்து ஆற்றலை உறிஞ்சி உடலின் அனைத்து பாகங்களுக்கும் கடத்துகின்றது. வேரானது செயலிழந்தாலோ அல்லது அதற்கு தேவையான ஆற்றல் கிடைக்வில்லையேன்றாலோ முழு மரமும் பட்டுப்போகின்றது. அதேபோன்று மனம் பலவீனமடைந்தால் உடல் வலிமையிழந்து நோய் எதிர்ப்பு சக்தியை இழக்கிறது. அதுவே பின்பு சுவாசம், நரம்பு மற்றும் ஜீரண மண்டலங்களை பாதித்து பல்வேறு வியாதிகள் வரக் காரணமாகிறது. இவற்றை தடுக்க வேண்டுமானால் மனத்தை ஒருமுகப்படுத்தும் பயிற்சியில் ஈடுபட வேண்டும். மனத்தை ஒருமுகப்படுத்துதல் மற்றும் தியானம் செய்வதன் முலம் நோயற்ற, மகிழ்ச்சியான,நிம்மதியான வாழ்க்கை அமைகிறது.

இன்று நோய் இல்லாத மனிதரே இல்லை என்கிற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு நோயால் பாதிக்கப்பட்டுள்ளோம். மருத்துவரை அனுகி அதற்கான மருந்துகளை உட்கொள்கிறோம். இதில் தவறேதும் இல்லை. ஆனால் அம்மருந்துகளுக்கே அடிமைப்பட்டு கிடப்பது என்பது தவறு.

மற்ற மருத்துவமுறைகளிலிருந்து யோகா முற்றிலும் மாறுபடுகிறது. பிற மருத்துவமுறைகளில் வெளியில் இருந்து ஏதேனும் ஒரு பொருளை மருந்தாகக் கொடுக்க வேண்டும். ஆனால், யோகாவில் அந்த மருந்துப் பொருளை உடலிலேயே உற்பத்தி செய்கிறோம். உடலில் ஏதேனும் ஒரு பகுதி சரிவர வேலை செய்யாமல் இருந்தாலோ அல்லது அதன் மூலம் கிடைக்கவேண்டிய ஹார்மோன்கள் கிடைக்காமல் இருந்தாலோ குறைபாடு ஏற்பட்டு பிறகு அது நோயாக மாறுகிறது.

உதாரணத்திற்கு, உடலில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தக்கூடிய இன்சுலின் கணையத்தில் சுரக்கிறது. கணையம் சரியாக வேலை செய்யவில்லையெனறால் இன்சுலின் சுரப்பு குறைந்து சர்க்கரையில் சமமின்மை ஏற்பட்டு சாக்கரை நோய் ஏற்படுகிறது. சூரிய நமஸ்காரம் மற்றும் உடலை முறுக்கி செய்யும் சில யோகாசனங்கள் மூலம் கணையத்தை நங்கு செயல்பட வைத்து இன்சுலின் சுரப்பை அதிகரிக்க முடியும்.
அதேபோன்று, இன்றைக்கு பெரும்பாலான இருதய நோய்கள் ஏற்பட முக்கிய காரணம் மன அழுத்தம் மற்றும் சரியான முறையில் ரத்த சுழற்சி இல்லாததுதான். இதன் விளைவாக ரத்தம் உறைந்து போதல், இருதய அடைப்பு மற்றும் செயலிழப்பு ஏற்படுகின்றன. ஆனால் முறையான ஆசனங்கள் மற்றும் பிராணயாமம் செய்வதால், மன அழுத்தம் குறைவதோடு ரத்த குழாய்களில் ஆக்ஸிஜன் அதிகரிப்பதால் ரத்த ஓட்டமும் சீராகிறது. இதனால், இருதயத்திற்கும் தேவையான ரத்தம் பாய்ச்சப்பட்டு இருதயம் நன்கு செயல்பட்டு ஆரோக்கியம் பெருகுகிறது.

அதேபோன்று, சுவாச மற்றும் நுரையீரல் சம்பந்தபட்ட பிரச்னைகள் எற்படுவதற்கு முக்கிய காரணம் சுவாச மண்டலத்தில் ஏற்படக்கூடிய நரம்பு கோளாறு, மாசுபட்ட சுற்றுச்சூழல் போன்றவையே. இதற்கு தொடர்ச்சியான யோகபயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதனால் மார்பு மற்றும் உதரவிதானம் நன்கு சுருங்கி விரிவதால் சுவாச மண்டலம் புத்துணர்ச்சியடைகிறது. அப்பகுதிகளுககு தேவையான ரத்த ஒட்டம் அதிகரிப்பதால் செயலற்ற நரம்புகள் செயல்படத் தொடங்குகின்றன. அதன்மூலம் நுரையீரலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைப்பதால் ஆஸ்துமா போன்ற சுவாசக்கோளாறுகள் குணமாகின்றன.

மேலும், மூட்டுவலி ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஸயனோவியல்' என்கின்ற திரவத்தின் பற்றாக்குறைதான். சில பயிற்சிகள் மூலம் அத்திரவத்தை நம் மூட்டுகளிலேயே சுரக்கச்செய்து, மருந்து மாத்திரையின்றி மூட்டு வலியை சரிசெய்ய முடியும்.

மேலும், தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு வியாதி புற்றுநோய். இதனை யோகா மூலம் குணப்படுத்த முடியும் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. புற்றுநோய் ஏற்படக் காரணம், உடலில் நிணநீர் ஓட்டம் சரியாக இல்லாததுதான். வயிற்றை நன்கு உள்ளே அழுத்தி செய்யப்படும் கிரியா மற்றும் பிராணாயாமம் மூலம் உடலின் நிணநீர் ஓட்டத்தை முறைப்படுத்த முடியும்.

யோகப் பயிற்சியில் சவாசனம்' முக்கிய பங்கு வகிக்கிறது. இது பயிற்சியின்போது கடைசியாக செய்யப்படுவது. உணர்ச்சிவசப்படுவதால் வரக்கூடிய மன அழுத்தத்தை சரிசெய்து உயர் ரத்த அழுத்தம் வராமல் இது பாதுகாக்கிறது. சவாசனத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்துவந்தால் பல வியக்கத்தக்க மாற்றங்கள் ஏற்படும்.

ஆக, வெளியிலிருந்து எந்த பொருளையும் மருந்தாக கொடுக்காமல் உள் ஆற்றலையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரித்தே அனைத்து நோய்களையும் குணமாக்குவதால் யோகா ஒரு சிறப்பான இடத்தை பிடித்துள்ளது.

இன்று ஒருவர் யோகா பயிற்சிக்கு வந்தால் அவர் கேட்கும் முதல் கேள்வி எத்தனை நாளில் எனது பிரச்னை சரியாகும்' என்பதே. அப்படிப்பட்டவர்கள் ஒன்றை யோசிக்க வேண்டும். பல ஆண்டுகளாக சிறிது சிறிதாக உடலில் சேர்ந்த அமிலம் மற்றும் நச்சுப் பொருள்கள் சரியாக வெளியேறாததால் நோய்களின் தாக்கம் ஆழமாக உள்ளது. இவற்றை குணப்படுத்த சற்று காலம் பிடிக்குமல்லவா?

சத்கர்மா' எனப்படும் யோக முறை மூலம் உடலிலுள்ளஅனைத்து விதமான நச்சுப் பொருள்களையும் வெளியேற்றி பக்கவிளைவு ஏதுமின்றி நோயிலிருந்து நம்மை பாதுகாக்க முடியும்.

ஆக ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனத்தின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள். சரியான உணவுப்பழக்கம், நல்ல செயல்கள், தூய்மையான சிந்தனை, தினசரி யோகா என வாழ்க்கையை மாற்றியமைத்தால் நோய் நம்மை அண்டவே அண்டாது. ஆரோக்கியம் பெருகும்... மகிழ்ச்சி நிலைக்கும்!

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...