Thursday, June 21, 2018

ஈரானிய கொள்ளையர் 5 பேர் கைது : தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டோர் சுற்றிவளைப்பு

Added : ஜூன் 21, 2018 00:33

சென்னை: சென்னையில், 100க்கும் மேற்பட்ட இடங்களில், செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு, போலீசாரை கதிகலங்க செய்து வந்த, ஈரானிய கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; அவர்களிடமிருந்து, 40 சவரன் நகை, கார் மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.சென்னையில், நேற்று முன்தினம், ஒரே நாளில், காலை, 6:00 மணியில் இருந்து, 11:00 மணி வரை, ராயப்பேட்டையில், செவிலியர், கவிதாவிடம், 9 சவரன், புளியந்தோப்பு, சுந்தர காண்டம், 60, என்ற மூதாட்டியிடம், 13 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்தனர்.மேலும், அண்ணா நகரில், ஜெயா, 65, என்ற மூதாட்டியிடம், 9 சவரன், புழலில், சுதர்சனம்மாள், 70, என்பவரிடம், 7 சவரன், மாதவரத்தில், குமாரி, 70, என்பவரிடம், 6 சவரன் செயின் ஆகியவற்றை, மர்ம நபர்கள் பறித்து தப்பினர்.

கேமரா பதிவு : போலீசார், சம்பவம் நடந்த இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, ஒரே கும்பலைச் சேர்ந்த, ஐந்து பேர், செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், அவர்கள், மாதவரத்தில், குமாரியிடம் செயின் பறித்த பின், இரு சக்கர வாகனத்தில், ஆந்திரா நோக்கி செல்லும் காட்சிகளும், கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தன.இதையடுத்து, சென்னை மாநகர போலீசார், ஆந்திர மாநில போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அம்மாநில போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.அதேபோல், சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனர், பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையிலான தனிப்படை போலீசார், ஆந்திரா விரைந்தனர். அவர்கள், நேற்று முன்தினம் இரவு, ஆந்திர மாநிலம், கர்னுார் சுங்கச்சாவடி அருகே சென்றபோது, சந்தேகப்படும்படி சிவப்பு நிற கார் சென்றுள்ளது.மின்னல் வேகத்தில் பறந்த அந்த காரை, தனிப்படை போலீசார் துரத்தினர். ஒரு கட்டத்தில், அந்த காரில் இருந்த மர்ம நபர்கள், சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, ஆளுக்கு ஒரு திசையில் ஓட்டம் பிடித்தனர்.அவர்களை போலீசார் துப்பாக்கி முனையில் பிடித்தனர். விசாரணையில், அவர்கள், மஹாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வரும், ஈரானிய கொள்ளையர், அப்பாஸ், 39, நவாப் அலி, 38, அம்படாஸ் உள்ளிட்ட ஐந்து பேர் என்பது தெரியவந்தது.இதையடுத்து, அவர்களை சென்னைக்கு அழைத்து வந்துள்ள போலீசார், அண்ணாநகரில், ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:ஈரான் நாட்டில் இருந்து, 50 ஆண்டுகளுக்கு முன், மஹாராஷ்டிரா மாநிலம், அம்புவேலி உள்ளிட்ட இடங்களுக்கு, 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இடம் பெயர்ந்துள்ளனர்.தமிழகத்தில், காரமடை, திருப்பத்துார், மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருகின்றனர். போலீஸ் போல் நடித்து, செயின் பறிப்பில் ஈடுபடுவதே இவர்களது பாணியாகும்.

காரில் வருகை ; விமானத்தில் பறந்து வந்து, ஒரு வாரம் தங்கி, வேலை முடிந்ததும், மீண்டும் பறந்து விடுவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகள் இவர்களுக்கு அத்துப்படி. இந்த முறை, மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து, சென்னைக்கு காரில் வந்து உள்ளனர்.காரை மாதவரத்தில் நிறுத்திவிட்டு, இரு சக்கர வாகனத்தை திருடியுள்ளனர். அந்த வாகனத்தில், செயின் பறிப்பு நடத்திய பின், மாதவரத்தில் நிறுத்திவிட்டு, மீண்டும் காரில், ஆந்திராவில் செயின் பறிப்பு நடத்த சென்றுள்ளனர்.இவர்கள், பல மாதங்களாக, 100க்கும் மேற்பட்ட இடங்களில், செயின் பறிப்பு நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 40 சவரன் நகை, கார் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...