Friday, June 8, 2018

இலவசங்களுக்கும் விலையுண்டு

By இரா.கதிரவன் | Published on : 08th June 2018 01:33 AM |

எங்கள் துணிக்கடையில் ஒரு புடவை வாங்கினால் ஒரு புடவை இலவசம்!', எங்கள் நிறுவனத்தில் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கினால் ஒரு இஸ்திரி பெட்டி இலவசம்!', எங்கள் மூலமாக, சென்னைக்கு மிக அருகில் மனை வாங்கினால் பத்திரப் பதிவு இலவசம்!' - இத்தகைய விளம்பரங்களை தினசரிகளிலும் தொலைக் காட்சிகளிலும் அடிக்கடி பார்க்கின்றோம். திரைப்படத் துறையினர் உள்ளிட்ட பல பிரபலங்கள் இவற்றால் மக்களின் கவனத்தை ஈர்க்கின்றனர் .

இது தவிர, பத்திரிகைகளில் அதிகம் வெளிவராத விஷயமாக, இரண்டு மாணவர்களை எங்கள் பள்ளிக்கூடத்தில் சேர்த்தால் , மூன்றாம் மாணவருக்கு கல்விக்கட்டணம் இல்லை' , என்று வாய்மொழிச் செய்திகளைச் சில கல்வி நிறுவனங்கள் பரப்புகின்றன. பள்ளியின் வசதிகள், கற்பித்தலின் தரம், ஆகியனவற்றைக் கருத்தில் கொள்ளாமல், தங்களுக்கு கல்விக்கட்டண தள்ளுபடி அல்லது சலுகை கிடைக்கிறது என்பதற்காக, சில பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் முகவர்களாக மாறி, பிள்ளை பிடிக்கும்' அவலத்தையும் நாம் பார்க்கிறோம்.

பொதுவாக இலவசங்கள் சார்ந்த திட்டங்கள் இரு சாராரால் நடத்தப்படுகின்றன. ஒன்று தனியார் வியாபார நிறுவனம். இன்னொன்று அரசாங்கத்தின் திட்டங்கள்.

முதலில், தனியார் நிறுவனங்களை எடுத்துக் கொள்ளலாம். தங்களது வியாபாரத்தைப் பெருக்குவதற்கும் போட்டியாளர்களை சமாளிப்பதற்கும் பல நிறுவனங்கள் இத்தகைய இலவசங்களை தாராளமாக அள்ளி வழங்குகின்றன. ஆனால், உறுதியாக சொல்லக் கூடிய ஒன்று, இந்த இலவசங்கள் நிச்சயமாக இலவசமானவை அல்ல. இலவசம் எனக் கூறப்படும் பொருள்களின் விலை மற்ற பொருள்களின் விலையில் கூட்டப்படுவது நிச்சயம். இன்னும் சொல்லப் போனால், இந்த இலவசம் குறித்த விளம்பரங்களுக்கு ஆகும் செலவையும்கூட வாடிக்கையாளர்கள்தான் செலுத்த நேரிடும்.
ஆனாலும் இந்த இலவசங்கள்', வாடிக்கையாளர்கள் எனும் விட்டில் பூச்சிகளை தங்களது நிறுவனம் என்னும் விளக்குகளுக்கு இழுத்து செல்லுகிறன என்பதை மறுப்பதற்கில்லை .

அடுத்ததாக, அரசின் இலவசத் திட்டங்கள். அரசின் எல்லா இலவசத் திட்டங்களையும் ஒரேயடியாகக் குறைகூறிவிட முடியாது; கூறவும் கூடாது. சில விஷயங்கள் மிகவும் பயனுள்ளவை. குறிப்பாக, பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு, புத்தகங்கள் , சைக்கிள், மடிக்கணினி போன்றவை நேரடியாக அவர்களைச் சென்று சேர்பவை. இவற்றின் மூலம், பத்து வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு முன்பு இருந்துவந்த சத்துக் குறைபாடு சார்ந்த பல நோய்கள் தற்போது அறவே நீங்கியிருக்கின்றன. மேலும் பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளின் , குறிப்பாக மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும், பள்ளியிலிருந்து மாணவர்கள் இடைநிற்றல் கணிசமாகக் குறைந்திருப்பதும் மிக முக்கியமான பலன்களாகும்.

ஆக, இந்த திட்டம் பெரும் பலனை தருவதனாலும், சுகாதாரம் - கல்வி ஆகியனவற்றில் பெரும் முன்னேற்றத்தை தருவதாலும், இலவசம் என்று கூறப்பட்டாலும் இவற்றை நாம் வரவேற்கலாம்.

அடுத்ததாக, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசி திட்டம். உரலுக்கு ஒரு புறம் இடி, மத்தளத்துக்கு இரண்டு புறமும் இடி' என்பார்களே அது போல, இத்திட்டத்துக்கான மிகப்பெரும் விலையை தருபவர்கள் விவசாயிகள்தான். இலவசமாக அரிசி வழங்கப்படுவதால், பொதுச்சந்தையில், விவசாயியின் விளைபொருளுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான விலை கிடைப்பதில்லை என்பது உண்மை. இன்னொருபுறம், இத்திட்டத்துக்கு 2011-இல் ஆண்டொன்றுக்கு 3,400 கோடி ரூபாய் செலவு செய்த தமிழக அரசு, தற்போது சுமார் 5,400 கோடி செலவு செய்கிறது. இந்த இழப்பினை ஈடுகட்ட, அரசு மக்களிடமிருந்து வெவ்வேறு வகைகளில் வரி வசூல் செய்கின்றது. அதனைச் செலுத்துபவர்களில் பெரும்பாலோர் விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்கள் ஆவர். அதாவது, இந்தத் திட்டத்துக்காக, ஏற்கெனவே தன்னுடைய விளைபொருளுக்கு போதுமான விலை பெறாமல் கடும் இன்னலுக்கு ஆளாகியிருக்கும் விவசாயிகள், மறுபுறம் மறைமுகமாக, இலவச திட்டத்துக்கான விலையையும் செலுத்துகின்றனர்.வேறு சில இலவசங்கள் வழங்கப்பட்டும் பயன்படைத்தவை. அவற்றின் தரம் அப்படி. உதாரணமாக, இலவசம் என்ற பெயரில் வழங்கப்படும் மின் உபகரணங்கள் (எலெக்ட்ரானிக் பொருட்கள்). அவை சில வாரங்கள் கூட இயங்காதவை. இவை வெறும் முழுக்க முழுக்க விரயம் ஆகும் .

இத்தகைய அரசு இலவசங்களுக்கு நம்மால் தரப்படும் விலை எது? அடிப்படையில் ஒருவரது இலவசத்துக்கான விலையை இன்னொருவரும் பகிர்ந்து கொள்ளுகிறார். இப்படி மறைமுகமாக பணமாக இலவசத்துக்கு' தரப்படும் விலை மட்டுமல்ல, மக்கள் மனதில் ஏற்படும் இலவசம் குறித்த ஆவல், பிறரை அண்டி வாழும் மனோபாவத்தை ஏற்படுத்துகிறது. இலவசமாக எது கிடைத்தாலும் கூச்சமின்றி அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்போக்கினை அதிகரிக்கின்றது.

அது, மனோதத்துவ ரீதியாக, தம்மை தாமே தாழ்த்திக் கொள்ளும் மனப் போக்கினை நாளடைவில் ஏற்படுத்துகிறது. இலவசத்திற்கு அடிமையான மக்கள் மனதளவில் முடங்கிப் போவார்கள். இவை எல்லாம் ஒரு சமுதாயமே இலவசத்துக்காக' தரும் ஒரு பெரும் விலையாகும். எனவே அரசு, தனது ஒவ்வொரு இலவச திட்டத்தினையும் சீர்தூக்கி, சாதக பாதகங்களை தீவிரமாக அலசி, அவை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி, தேவையற்ற இலவசத் திட்டங்களை ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் நிறுத்திவிட வேண்டும் .

ஆக மொத்தம், தனியார் நிறுவனங்கள் என்றாலும் சரி, அரசு ஆனாலும் சரி இலவசம் என்று எதுவுமே இல்லை என்பதும், மாறாக ,அதற்கென ஒரு பெரும் விலையை நாம் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024