அமைதியின்றி ஆனந்தமில்லை
By டி.எஸ்.தியாகராசன் | Published on : 08th June 2018 01:34 AM |
இன்று தமிழ்நாடு எல்லா நிலைகளிலும், எல்லா இடங்களிலும் அமைதியை, ஆனந்தத்தை இழந்து வருகிறதோ என்ற ஐயம் எழுந்துள்ளது. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பிரச்னைகள் தோன்றிய வண்ணம் உள்ளன. தொடரவும் செய்கின்றன. போராட்டங்கள், ஊர்வலங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்புகள், மறியல்கள் என்று வீறு கொள்கின்றன. தடையுத்தரவு மீறப்படுகிறது. கூட்டம் கலைய கண்ணீர்ப்புகை, எதிர்க்க கல்வீச்சு, காவலர் தடியடி பிரயோகம் என்று வளர்ந்து துப்பாக்கிச் சூட்டில் முடிகிறது. அப்பாவி மக்கள் பலர் பலி, வாகனங்கள் எரிந்து நாசம், பொருள்கள் சேதம் என்ற துயரச்செய்தி வெளியிடும் நாளேடுகள், காட்சி ஊடகங்கள். தொடர்ந்து கண்டன கணைகள் வீசப்படுகின்றன. மீண்டுமொரு கதவடைப்பு, அஞ்சலி ஊர்வலம், உண்மை கண்டறிய விசாரணை ஆணையம் அமைக்கப்படுகிறது. அறிக்கை வர எவ்வளவு காலம் ஆகுமோ?
கத்தியின்றி ரத்தம் இன்றி சுதந்திரம் பெற்ற நாடு என்று மகிழ்ந்த நாம், நம்மை நாமே ஆளுகின்ற மக்களாட்சி நாட்டிலே நம்மை நாமே வதைத்துக் கொள்கிறோம். தூத்துக்குடி ஆலையால் இதுநாள் வரை பாதிக்கப்பட்டு உயிர் துறந்தார்கள் என்று சொல்லப்படுகின்ற எண்ணிக்கையை விட, இப்போது ஏற்பட்ட கலவரத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகம். பொருள் சேதமும் மிக அதிகம்.
கொடிய பாம்பின் நஞ்சையே மருந்தாக்கி மருத்துவ உலகிற்கு வழங்குகிறோமே! மிருகங்களின் சாணங்களையும் சமையல் எரிவாயுவாக்கி, அறுசுவை உணவைப் படைக்கிறோமே! அப்படி இருக்க, ஒரு ஆலையால் ஏற்படும் தீமைகளைக் கண்டறிந்து தக்கவாறு நீக்கிச் செயல் வினையாற்ற நம் நாட்டில் எது பஞ்சம்? விஞ்ஞானிகளா? நிபுணர்களா? தொழில்துறை வல்லுநர்களா? பிற துறை அறிஞர்களா? எதுவும் இல்லை. தீமையைக் களையவும், நன்மையை வளர்க்குமான தூய மனவளம் நம்மிடம் இல்லை என்பதே உண்மை.
பல நூறு கோடி செலவில் தொழிற்சாலை உருவாகவும், பயன்பாட்டிற்கு வரவும் ஆண்டுகள் பல சென்றன. ஆனால் ஒரே ஒரு ஆணை, ஒரே ஒரு பூட்டு ஓரிரு நிமிடங்களில் ஆலையை மூடிவிட்டோம். ஆனால் பல ஆண்டுகளாக காவிரிப் படுகையில் ஈரோடு, திருப்பூர் போன்ற இடங்களில் உள்ள சாயப்பட்டறைகளால் மண்ணும், நீரும் நஞ்சாகி மனிதர்களும், மாடுகளும் முடங்கிப் போகின்றனரே; பாலாற்று கரையோரங்ளில் இருக்கின்ற தோல் பதனிடும் தொழிற்சாலைகளால் எங்கள் வாழ்வே பாழ் என்று பல்லாயிரவர் நொந்து போகின்றனரே; நாட்டில் நாளுக்கு நாள் சாராய ஆலைகள் பல்கிப் பெருகுகின்றனவே; இங்கே எல்லாம் நாம் ஏன் போராட்டம் நடத்தவில்லை?
இந்த ஆலையின் தயாரிப்பு என்ன பீரா? விஸ்கியா? இல்லையே.
வாழ்க்கைக்கு மிகவும் அவசிய உலோகமான செம்புதான் அதன் தயாரிப்பு. நம் நாட்டில் மொத்த பயன்பாட்டு செம்பில் 35 விழுக்காடு முதல் 43 விழுக்காடு வரை உற்பத்தி செய்தது இந்த தூத்துக்குடி ஆலை. உலக செம்பு உற்பத்தியில் இந்தியாவில் 5 சதவீதம்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிலும் மூன்று நிறுவனங்கள்தான் உற்பத்தி செய்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இது. ஆண்டுக்கு 4 லட்சம் டன் செம்பினை உற்பத்தி செய்து வந்தது. தங்கம், வெள்ளிக்கு அடுத்து மதிப்பு மிக்க அவசியமான உலோகம் செம்பு. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களில் இரண்டற கலந்து நிற்கிறது. மின்கம்பி வடங்களில் 90 சதவீதம் செம்புதான். மோட்டார் இயந்திரங்களில் 20 சதவீதமும், குளிர்சாதன இயந்திரத்தில் ஒரு டன் ஏ.சி.க்கு 1.4 கிலோவும் செம்பு பயன்படுத்தப்படுகிறது. தங்க ஆபரணங்கள் தொடங்கி வீட்டு உபயோக பொருட்கள்வரை செம்பின் பயன்பாடு மிக அதிகம். உள்ளூரில் உற்பத்தி நின்று போனதால் விலை அதிகமாகும் என்கிறார்கள் வணிகர்கள். ஆலை மூடப்பட்டதால், நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 ஆயிரம் பேர் வேலை இழக்கிறார்கள். அரசிற்கு வரியாகக் கிடைக்கும் பல நூறு கோடி வருமானம் நின்று போனது. புதிதாக தொழில் தொடங்க விரும்பும் தொழிலதிபர்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.
பல்குழுவும், பாழ் செய்யும் உட்பகையும் நாட்டின் வளர்ச்சிக்கு தடைக்கற்கள் என்கிறார் வள்ளுவர். வேலையின்மை கூடும். வறுமை வாட்டும். அமைதி குறையும். நம்மால் புதிதாக ஒரு தொழிற்சாலையைத் தொடங்க முடியுமா? நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலை தர இயலுமா? தஞ்சை டெல்டா பகுதியில் காவிரி நதிப் படுகையில் எரிபொருள் கிடைக்கும் என்று நிலவியலாளர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்னரே கணித்து கூறினர். கடந்த 40 ஆண்டு காலமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக எரிபொருள் கிடைக்கத் தொடங்கியுள்ளன. இதற்கும் இப்போது எதிர்ப்பு, போராட்டம். பல்லாயிரம் மனித நாட்கள் பாழாகிப் போகின்றன. தமிழகத்தின் நெற்களஞ்சியம் சூறையாடப்படுகிறது.
நிலம், நீர் மாசடைகிறது', மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது' என்கிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் நல்ல நீர்வரத்து இருந்த காலத்தில் விவசாயிகள் செலவுக்கு ஏற்ற வருமானம் பயிர்த்தொழிலில் பார்த்தது இல்லை என்பதே உண்மை. மேலும், வேளாண் பணிகளுக்கு தகுந்த பணியாட்கள் கிடைப்பதில்லை என்பதும் உண்மை. நீர்வரத்து குறைந்த இன்றைய நாளில் சாகுபடியே முழுமையாக நடைபெறுவது இல்லை. குறுவை, தாளடி, சம்பா என்ற முப்போக சாகுபடி குறைந்து இன்று ஒரு போகத்திற்கே திண்டாட்டம் என்ற நிலை. பூமியின் மேற்பரப்பை நம்பி வாழ்ந்த நம் விவசாயிக்கு இறைவன் பூமித்தாயின் கர்ப்பப்பையில் இருந்து கருப்புத் தங்கத்தை தோண்டி எடுக்க துணை நிற்கிறான் இன்று. அன்று வறண்ட பாலைவனக் காட்டில் ஒட்டகம் மேய்த்துக் கொண்டும், பேரீச்சம் பழத்தைச் சுவைத்துக்கொண்டும் இருந்த அரேபியன் இன்று உலகின் பெரும் பணக்கார வரிசையில் அமர்ந்து இருக்கிறானே, எதனால்? பூமிக்கு கீழ் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட கருப்பு தங்கம்தானே காரணம். அங்கே நெல்வயல் இல்லை, எண்ணெய் வயல்தான் உண்டு. பாசுமதி அரிசி விளைவதில்லை. ஆனால் உண்ணுவது என்னவோ பாசுமதிதான்.
உலக வரைப்படத்தில் குண்டூசி முனை உள்ள சின்னஞ்சிறு நாடான சிங்கப்பூரில் சீரக சம்பாவா விளைகிறது? இல்லை, பஞ்சாப் கோதுமையை அறுவடை செய்கிறார்களா? எதுவும் இல்லை. குடிநீர் கூட பக்கத்து நாட்டில் இருந்துதான் வருகிறது. ஆனால், உலகின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக சிங்கப்பூர் விளங்குகிறது. விமானப் பயணத்துறையில் சாதனை புரிகிறது. சிங்கப்பூர் நாணய மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பல குறுந்தொழில்கள் செழித்து வளருகின்றன. இதைப் போன்றே சின்னஞ்சிறு தீவான ஜப்பானில் என்ன செந்நெல்லும், கரும்பும், கமுகுமாகப் பயிரிடப்படுகிறதா? இரும்பு உற்பத்தி இல்லை. ஆனாலும் வாகன உற்பத்தியிலும், மின்னணு பொருட்கள் தயாரிப்பிலும் கோலோச்சுகிறதே எங்ஙனம்? உலக யுத்தத்தில் நிர்மூலமாகி சிதைந்து போன அந்த நாட்டின் மக்கள், உழைப்பில் உறுதியும், வணிகத்தில் நேர்மையும் கொண்டு உலகை வலம் வருகிறார்கள். உணர்ச்சிக்கு உரம் ஏற்றி பேதங்களை நீரூற்றி வளர்த்திட்டால் வருங்கால சந்ததியினர் நம்மை மன்னிக்க மாட்டார்கள்.
தமிழ்நாட்டில் இப்போதெல்லாம் எடுத்ததற்கெல்லாம் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன. மெட்ரோ ரயில் பாதை அமைத்தால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும்' என வணிகர்கள் கடை அடைத்து கண்டனம். புதிய பசுமை வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை. இப்படிப் பல. அண்மையில் ஓர் ஊரில் விநோதமான ஒரு போராட்டம். எங்கள் ஊரில் உடனடியாக மது பானக் கடைகளைத் திற' என்று பெண்களே போராட்டம் நடத்தினர். நீர்நிலைகளில் கட்டப்பட்ட கட்டடங்கள், குடிசைகளை அகற்ற நடவடிக்கை எடுத்ததால், ஆக்கிரமிப்புகளை அகற்ற விடாமல் மறியல், ஏழைகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்காதே என்று எதிர்க்கட்சிகளின் ஓங்கிய குரல்.
சிங்கப்பூர் விமான நிலையம் உலகின் சிறந்த விமான நிலையங்களில் ஒன்று. ஆனால் நிலப்பரப்பு நமது விரிவடைந்த சென்னை மாநகரின் அளவை விட குறைவு. சென்னையில் ஆண்டிற்கு ஓரிரு கோடி மக்கள் விமானப் பயணிகளாக வந்து போகிறார்கள். இடம் போதவில்லை. விமான நிலைய விரிவாக்கத்திற்காக அரசு கடந்த 25 ஆண்டுகளாக எவ்வளவு முயன்றும் நிலம் பெற முடியவில்லை.
பக்கத்து நாடான சீனாவில் சீனாவின் துயரம்' என்று 4,000 ஆண்டு காலமாக அழைத்து வந்த மஞ்சள் ஆற்றை, இப்போது சீனாவின் மகிழ்ச்சி' என்று அரசு மாற்றி விட்டது. 1887 மற்றும் 1931 -ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகளில் 60 லட்சம் மக்கள் மடிந்தனர் என்பது வரலாறு. 1960-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டுவரை உள்ள காலத்தில் 12 பெரிய அணைகளைக் கட்டியது சீன அரசு. இதனால் 74 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலத்திற்கு பாசன வசதி கிடைத்தது. ஏழு புனல் மின் நிலையங்கள் மூலம் 5,618 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. இந்த அணைகளைக் கட்டும்போது விவசாயிகள் இழந்த நிலத்தின் பரப்பளவு பல்லாயிரம் ஏக்கர். இடம்பெயர்ந்த மக்கள் பல ஆயிரம் பேர். ஆனால், அரசின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பை நல்கினார்கள். இதனால்தான் இன்று உலகின் சக்தி மிகுந்த நாடாக சீனா திகழ்ந்து வருகிறது.
உலக மாந்தர் அனைவர்க்கும் அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம் வேண்டும் என்றும், உலகில் வன்முறை, வறுமை, அறியாமை வேண்டாம் என்றும் வேண்டுவோம். அமைதி தழைக்கட்டும். ஆனந்தம் பெருகட்டும்.
No comments:
Post a Comment