ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க ஜனாதிபதி மறுப்பு
dinamalar 16.06.2018
புதுடில்லி : முன்னாள் பிரதமர், ராஜிவ் படுகொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறைகளில் உள்ள, ஏழு கைதிகளை விடுவிக்கும்படி, தமிழக அரசு விடுத்த கோரிக்கையை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.
முன்னாள் பிரதமரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான, ராஜிவ், 1991ல், தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதுாரில், விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட, முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயகுமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன்,
நளினி ஆகிய ஏழு பேருக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
இவர்கள் ஏழு பேரையும், 20 ஆண்டுக்கு மேல் சிறையில் இருந்ததால், விடுதலை செய்ய முடிவு செய்துள்ளதாக, தமிழக அரசு அறிவித்தது. அந்த முடிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. 'சி.பி.ஐ.,யால், மத்திய சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்ட கைதிகளை விடுவிக்கும் முன், மத்திய அரசை கலந்தாலோசிக்க வேண்டும்' என, மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க, தமிழக அரசுக்கு அதிகாரம் கிடையாது' என்றது, அதைத் தொடர்ந்து, ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க அனுமதி கோரி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு, தமிழக அரசு கடிதம் எழுதியது. அந்த கடிதத்தை பரிசீலித்த ஜனாதிபதி, தமிழக அரசின் கோரிக்கையை நேற்று நிராகரித்தார்.
இது குறித்து, மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க வேண்டும் என்ற, தமிழக அரசின் கோரிக்கையை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைப்படி, ஜனாதிபதி நிராகரித்துள்ளார். இந்த முடிவு, தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த சூழ்நிலையிலும், ராஜிவ் கொலையாளிகள் விடுதலை அடைவது சாத்தியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment