Wednesday, June 20, 2018


'ஜெயலலிதா கொள்ளையடித்த பணம்''திகில்' கிளப்பும் திண்டுக்கல் சீனிவாசன் 


dinamalar

வேடசந்துார்: ''ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை தினகரன் மூலம் பெற்றுக்கொண்டு 18 எம்.எல்.ஏ.,க்கள் துரோகம் செய்கின்றனர்,'' என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 'பகீர்' கிளப்பி உள்ளார்.



'உலகில் பிரிக்கவே முடியாதது எது' என கேட்டால் 'அமைச்சர் சீனிவாசனும் சர்ச்சை பேச்சுக்களும்' என அடித்து கூறலாம். தற்போதைய அரசியலில் 'சர்ச்சை பேச்சுகளின் நாயகன்' இவர். சசிகலா ஆதரவு நிலையில் இருந்த போது, 'மருத்துவமனையில் அம்மா இட்லி, சட்னி சாப்பிட்டார். அதை நாங்கள் பார்த்தோம்' என சத்தியம் செய்தார்.

சசிகலாவை எதிர்த்த பின் 'நாங்கள் யாரும் அம்மாவை பார்க்கவில்லை' என 'திகில்' கிளப்பினார். இதே போல அவ்வப்போது 'திகில், பகீர்' பேச்சுகள் பறக்கும். சில மாதங்கள் அடக்கி வாசித்த அவர் நேற்று முன்தினம், சர்ச்சை பேச்சில் உச்சம் தொட்டுவிட்டார். 'அம்மா கொள்ளையடித்த பணம் தினகரனிடம் உள்ளது'

என பேசி 'நம்பர் ஒன் உளறு வாயர்' என சமூக ஊடகங்களில் பட்டம் வென்று விட்டார்.

காவிரி பிரச்னையில் தமிழக அரசை பாராட்டி அ.தி.மு.க., சார்பில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாரில் கூட்டம் நடந்தது. இதில் அவர் பேசியதாவது:

அம்மாவால் கட்சியில் ஒதுக்கிவைக்கப்பட்டவர் தினகரன். அம்மாவால் எம்.எல்.ஏ.,வான 18 பேர் தற்போது அந்த துரோகியுடன் உள்ளனர். அம்மாவால் கேடி, ரவுடி என ஒதுக்கிவைக்கப்பட்ட தினகரனுடன் போனவர்கள் அவரை மகாத்மா காந்தி, புத்தரை போல் பேசுகின்றனர்.

கேப்பையில் நெய் வடிகிறது என்றால் கேட்பவர்களுக்கு எங்கே போச்சு அறிவு. இவர்களால்தான் ஆட்சி நடப்பது போல, 'முதல்வர் பழனிசாமியை நீக்கவேண்டும்' என்றனர். சபாநாயகரிடம் மனுக்களை கொடுத்த பின் அவர் ஒரு மாதம் அவகாசம் கொடுத்தார். அவகாசம் பெற்று மைசூர், அமெரிக்கா என ஜாலியாக சுற்றினர்.

அம்மாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தினகரன் மூலம் பெற்றுக்கொண்டனர். ஸ்டாலினிடமும் பணம் பெற்றுக் கொண்டு ஸ்டாலின் முதல்வர், தினகரன் துணை முதல்வர்,

மற்றவர்கள் எல்லாம் அமைச்சர்கள் என கனவு கண்டனர். இதை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்கமுடியுமா? எனவே அவர்களை சபாநாயகர் நீக்கினார். தினகரனால் மாஜி எம்.எல்.ஏ.,க்கள் பலர் நொந்துபோய் விட்டனர்.இவ்வாறு அவர் பேசினார்.

'நான் பேசவில்லை':

திண்டுக்கல்லில் அமைச்சர் சீனிவாசன் கூறியதாவது: வேடசந்துாரில் நடந்த கூட்டத்தில், ஜெ., மறைவிற்கு பின்பு கட்சியை கைப்பற்ற தினகரன் முயற்சி மேற்கொண்டதை பற்றி பேசினேன். 30 ஆண்டுகளுக்கு மேலாக சசிகலா குடும்பத்தினர் ஜெ.,க்கு தெரியாமல் தவறான வழியில் கொள்ளையடித்த பணத்தை வைத்து தினகரன் அரசியல் நடத்தி வருகிறார் என்ற கருத்துப்பட பேசினேன். ஜெ.,பற்றி நான் தவறாக பேசவில்லை. அவரால் வளர்க்கப்பட்ட நான் அதுமாதிரி பேச மாட்டேன். என் மீது சிலர் அவதுாறு பரப்புகின்றனர், என்றார்.

 


No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024