Thursday, June 21, 2018

ஒரு கொடியில் பூத்த இரட்டை முட்கள்

Published : 16 Jul 2016 12:45 IST


டாக்டர் ஜி. ராமானுஜம்



ஒரு பழைய கதை ஒன்று உண்டு. ஒரு சாதுவிடம் ஒரு சாத்தான் ‘நீ கட்டாயம் ஏதாவது தவறு ஒன்றைச் செய்தே ஆக வேண்டும். உனக்கு மூன்று விஷயங்களைத் தருகிறேன். அதில் ஏதாவது ஒன்றை, நீயே தேர்வு செய்துகொள்!‘ என்றதாம். பயந்து போன சாது ‘அவை என்னென்ன?’ என்று கேட்டார். ஒரு குழந்தை, ஒரு இளம்பெண், ஒரு போத்தல் மது இம்மூன்றையும் சாத்தான் காட்டி ‘நீ ஒன்று இந்தக் குழந்தையைக் கொல்ல வேண்டும் அல்லது இந்தப் பெண்ணை பலாத்காரம் செய்ய வேண்டும் அல்லது ஒரு பாட்டில் மதுவைக் குடிக்க வேண்டும். இதில் எந்தத் தவறைச் செய்கிறாய்?’ என்று கேட்டது.

கொலை, பலாத்காரம் போன்றவற்றைப் பற்றியெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்காதவர் சாது. ஆகவே, வேறு வழியில்லாமல் மதுவைக் குடித்தார். மதுவின் போதை ஏறியதும், அவருக்கு அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்ய வேண்டும் என்ற வெறி வந்தது. அப்போது அந்தக் குழந்தை அழுதது இடைஞ்சலாக இருக்க, அதையும் கொன்றுவிட்டாராம்.

ஆகப் பரமசாதுவாக இருப்பவர்கள்கூட, போதையால் தவறிழைப்பது நடக்கும்போது, ஏற்கெனவே குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருபவர்களுக்குப் போதையும் சேரும்போது மூளை முற்றிலுமாகச் செயலிழக்கிறது.

ஏன் இந்தச் சீர்குலைவு?

சமீபத்தில் சென்னை பட்டினப்பாக்கத்தில் நடந்த ஒரு திருட்டுச் சம்பவத்தில் ஆசிரியை ஒருவர் கொல்லப்பட்டது பெரும் அதிர்வலைகளை எழுப்பியிருக்கிறது. சம்பவத்தில் தொடர்புடைய நபர் குடிபோதையில் இருந்ததாகவும் போதைக்கு வேண்டிய பணத்துக்காகத் திருட்டுகளில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதுபோன்ற திருட்டுக் குற்றங்களுக்கும் போதைப் பழக்கத்துக்கும் உள்ள தொடர்பை ஆராய வேண்டிய அவசியம் இருக்கிறது.

மனித இனம், சமூகமயமாக்கப்பட்ட ஒரு விலங்கினம். மனித இனம் ஒரு சமூகமாகச் செயல்படும்போது தனிப்பட்ட விருப்பங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு, மற்றவர்களுக்குத் தீங்கு ஏற்படுத்தாமலும் நன்மை அளிக்கும் வகையில் ஒரு சமுதாயமாக வாழ்வதற்கு ஏற்ற வகையில் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. இதற்கு மனிதருடைய மூளையில் ஏற்பட்ட வளர்ச்சியும் மாற்றங்களும், அதன்மூலமாக மனதில் ஏற்பட்ட மாறுதல்களுமே முழுமுதல் காரணம்.

போதைப் பழக்கம் என்பது மூளையில் சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை அளவுக்கு அதிகமாக நுகரவும், தனக்கும் பிறருக்கும் தீமை செய்துகொள்ளும் வகையிலும், தனிமனித, சமுதாய உறவுகளில் சீர்குலைவை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்த ஒன்று.

யார் காரணம்?

போதையால் குற்றச்செயல்கள் அதிகரிக்கின்றனவா? இல்லை குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் போதைப் பழக்கத்தில் அதிகம் ஈடுபடுகிறார்களா என்ற சர்ச்சை, முதலில் கோழி வந்ததா, முட்டை வந்ததா என்பது போன்ற இன்னொரு புராதனக் கேள்வி. இந்த விவகாரத்தில் கோழி, முட்டை இரண்டையும் விட்டுவிட்டு அதற்கு முந்தைய பரிணாம வளர்ச்சி நிலைக்குச் சென்று ஆராய்வோம்.

2006-ம் ஆண்டு அமெரிக்க உளவியல் ஆய்விதழ் ஒன்றில் வெளியான ஆராய்ச்சிக் கட்டுரை முக்கிய விஷயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது. சுமார் முப்பது ஆண்டுகளாக நூற்றுக்கணக்கானவர்களைச் சிறுவயது முதலே ஆராய்ச்சி செய்து கண்டறியப்பட்ட அந்த ஆராய்ச்சி முடிவுகளை டாக்டர் ப்ளாக் என்பவர் வெளியிட்டார். அந்த ஆராய்ச்சி முடிவுகளின்படி போதைப் பழக்கத்துக்கான விதை, சிறு வயதிலேயே விதைக்கப்படுகிறது. ஒருவர் பிறந்த சூழ்நிலை, குடும்பப் பின்னணி, ஆளுமை, பெற்றோர்களின் ஆளுமை போன்றவையே பின்னாளில் ஒருவர் போதைப் பழக்கத்துக்கு அடிமையாவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துகின்றன என்பதே இந்த ஆய்வு முன்வைத்த முடிவு.

எது அடிமைத்தனம்?

இந்த இடத்தில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். ஒருவர் ஒரு போதைப்பொருளை ஓரிரு முறை உட்கொண்டார் என்றாலே, அதற்கு அவர் அடிமையாகிவிட்டார் என்று அர்த்தமில்லை. அந்தப் போதைப்பொருளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது, பெரும்பாலான நேரம் அப்பொருளை எடுத்துக்கொள்வதைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பது, அது இல்லாமலிருந்தால் உடலிலும் மனதிலும் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுவது, போதைப்பழக்கத்தால் உடலிலும் உறவுகளிலும் பிரச்சினைகள் ஏற்படுவது தெரிந்தும்கூடத் தொடர்ந்து அதை எடுத்துக்கொள்வது, நிறுத்த முடியாமல் போவது, போதைப் பழக்கத்தால் முக்கியமான நிகழ்வுகளையும் வாய்ப்புகளையும் இழப்பது என்று பல அறிகுறிகள் இருக்கின்றன.

இப்போது குற்றச்செயல்களுக்கு வருவோம். போதைப் பழக்கத்தைப் போன்றே, குற்றச்செயல்களில் அதிகம் ஈடுபடும் ஆளுமைக் கோளாறு உடையவர்களுக்கும் (Anti Social Personality) குடும்பச் சூழல், பெற்றோர், வளரும் சூழ்நிலை போன்ற புறக்காரணிகளின் பங்கே முக்கியமானதாக இருக்கிறது.

ஆகப் போதைப்பழக்கத்துக்கு அடிமையாதல், குற்றச்செயல்களில் ஈடுபடுதல் ஆகிய இரண்டுமே ஒரு கொடியில் பூத்த இரண்டு மலர்கள் (அல்லது முட்கள்) போல், ஒரே பின்னணியில் உருவாகின்றன. குற்றச்செயல்களில் ஈடுபடும் ஆளுமை கொண்ட நபர்களில் தொண்ணூறு சதவீதம் பேர் போதைப்பழக்கத்துக்கு அடிமையாக இருக்கிறார்கள். அதேபோல் போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுள் பாதிக்கும் மேற்பட்டோர் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

செயலிழக்கும் சிந்தனை

நீரிழிவு நோயும் ரத்தக் கொதிப்பும் ஒரே வாழ்க்கை முறைக் கோளாறால் உருவாகி, ஒன்றன் தீவிரத்தை மற்றொன்று அதிகரிப்பது போல் போதைப்பழக்கமும் குற்றச்செயல் மனப்பான்மையும் ஒன்றை ஒன்று அதிகரிக்கின்றன. குற்றச் செயல்களில் ஈடுபட நினைக்கும் எண்ணங்களைக் கட்டுப்படுத்துவது நமது மூளையே. மூளையில் போதைப் பொருட்கள் ஏற்படுத்தும் சில மாற்றங்கள், இந்தத் தடைகளை உடைக்கின்றன. குற்றம் செய்தால் கிடைக்கும் தண்டனைகளைப் பற்றிய பயம், மனதைவிட்டு அகல்கிறது; சிந்திக்கும் திறன் குறைகிறது. ஆகவே அடுத்தவர்களைப் பற்றி எந்தக் கவலையும் படாமல் தான் நினைத்ததை, உடனே செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது.

போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் பொருளாதாரரீதியில் இழப்புகளைச் சந்திப்பார்கள். வேலையில் ஏற்படும் பிரச்சினைகளால் வேலையை இழப்பதும் அதிகமாக இருக்கும். அதேநேரம், மது போன்ற போதைப்பொருட்களை எடுத்தே ஆக வேண்டுமென்ற நிர்ப்பந்தம் மனதளவில் உண்டாகும்போது, எந்த வழியிலாவது அந்தப் போதைப்பொருளைப் பெறும் கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால், வீட்டில் உள்ள பொருட்களை விற்கும் செயல்களில் இறங்குகின்றனர். ஒரு காலகட்டத்துக்குப் பிறகு திருட்டு, கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபட்டாவது, போதைக்குத் தேவையான பணத்தைப் பெறும் தகாத வழிகளைத் தேடத் தொடங்கிவிடுகின்றனர்.

என்ன தீர்வு?

ஆகப் போதைக்காகத் திருடுவது, ஏன் கொலை கூடச் செய்யக்கூடிய அளவுக்குப் போக வைப்பது, மது போன்ற போதைப் பழக்கங்கள்தான். போதைப் பொருட்கள் எளிதில் கிடைப்பதை அரசு கட்டுப்படுத்தினால், இது போன்ற குற்றங்கள் குறையும் என்றாலும், அது மட்டுமே ஒரே தீர்வல்ல.

கடுமையான சட்டங்கள் மூலமாக மட்டுமே, இதுபோன்ற குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியும் என்பதும் முழு உண்மையல்ல. உலகமயமாக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு, மன அழுத்தத்தை அதிகரிக்கும் சூழ்நிலைகள், போதைப் பழக்கத்தைப் பற்றிய விழிப்புணர்வு இன்மை, குற்றச் செயல்கள் மற்றும் போதை அடிமைகள் மறுவாழ்வுக்கான வாய்ப்புகள் இன்மை போன்ற பல சமூகக் காரணிகளுடன் போதைப்பழக்கமும் குற்றச்செயல்களும் பின்னிப் பிணைந்துள்ளன.

போதைப்பழக்கமும் குற்றச்செயல்களும் சமூகத்தைப் பிடித்துள்ள நோய்க்கான அறிகுறிகள் மட்டுமே. இவற்றைப் பற்றி மட்டுமே பேசுவது நாம் எதிர்பார்க்கும் முழு பலனைத் தராது. நம் அரசும் சமூகமும் மேற்கண்ட புரிதலுடன் இந்தப் பெரும் பிரச்சினையைப் பற்றி விரிவாக அலசி, பல்வேறு முனைகளில் தீர்வுகளை வேகப்படுத்தினால், நாம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.


கட்டுரையாளர், மனநல மருத்துவர்


No comments:

Post a Comment

KGMU starts clinic for L GBTQ patients

 KGMU starts clinic for L GBTQ patients  TIMES OF INDIA LUCKNOW 27.12.2024 Lucknow : King George's Medical University (KGMU) launched a ...