Tuesday, June 26, 2018

உதவி செய்ததற்கு இதுதான் தண்டனையா?- காரில் ‘லிஃப்ட்’ கொடுத்தவருக்கு நேர்ந்த கதி

Published : 25 Jun 2018 12:28 IST

மும்பை,




நிதின் நாயர், நிதின்நாயருக்கு போலீஸார் வழங்கிய ரசீது - படம் உதவி: பேஸ்புக்

ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டும், அவசரத் தேவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே அனைவருக்கும் கற்றுக்கொடுக்கப்படும் பண்புகளில் ஒன்றாகும். அதன்படி நம்மால் முடிந்த உதவிகளைப் பிறருக்கு செய்து வருகிறோம்.

ஆனால், மும்பையில் நடந்த இந்த விஷயத்தை அறிந்தால், நாம் உதவி செய்வதற்கு கூட இனி அச்சப்படலாம்.

மும்பையைச் சேர்ந்த மென்பொறியாளர் நிதின் நாயர். சமீபத்தில் தான் சிலருக்கு உதவி செய்ததற்கு போலீஸார் அளித்த தண்டனை மிகுந்த வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது:

''கடந்த 18-ம் தேதி மும்பையில் கனமழை பெய்தது. அப்போது எனது காரில் நான் அலுவலகத்துக்குச் சென்றுகொண்டிருந்தேன். ஏரோலி சர்க்கிள் பகுதியில் சென்றபோது, சாலை ஓரத்தில் ஒரு முதியவர், இருவர் ஓடும் தண்ணீரில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். அரசுப் பேருந்திலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

அந்த முதியவரிடமும், அங்கிருந்த இரு இளைஞர்களிடமும், எங்கு செல்லவேண்டும் என்று கேட்டேன். காந்திநகர் செல்ல வேண்டும் என்றனர். வாருங்கள் நானும் காந்திநகர் வழியாகச் செல்கிறேன். உங்கள் 3 பேரையும் அங்கு இறக்கி விடுகிறேன் என்று கூறி அவர்களை எனது காரில் ஏற்றிக்கொண்டேன்.

காரை ஸ்டார்ட் செய்து புறப்படும்போது, வேகமாக ஒரு பைக் எனது காரின் முன்வந்து நின்றது. அதில் இருந்து ஒரு போக்குவரத்து காவலர் இறங்கினார். எனது ஓட்டுநர் உரிமத்தைக் கேட்டார். நான் நோ பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்விட்டோனோ என்ற அச்சத்தில், தவறுக்கு மன்னிக்கவும் என்று கூறி எனது ஓட்டுநர் உரிமத்தை வழங்கினேன். அதைப் பெற்றுக்கொண்ட காவலர், மாலை அல்லது நாளை காலையில் நவி மும்பை போலீஸ் நிலையத்தில் வந்து இதைபெற்றுக்கொள்ளுமாறு கூறிச் சென்றுவிட்டார். காரணம் என்ன என்று கேட்டபோது, அங்கு வாருங்கள் என்று கூறிவிட்டார்.

இந்நிலையில் அதன்படி மறுநாள் காலை நவி மும்பை காவல் நிலையத்துக்குச் சென்று அங்கிருந்த போலீஸிடம் விவரங்களைக் கூறி எனது ஓட்டுநர் உரிமத்தைக் கொடுங்கள் என்றேன். அதற்கு அவர்கள் நீங்கள் மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிமுறையை மீறி இருக்கிறீர்கள், ஆதலால், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து இருக்கிறோம். நீதிமன்றத்தில் அபராதத்தைச் செலுத்திவிட்டு, ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறி என்னிடம் கட்டண ரசீதை அளித்தனர்.

அதில் நான் அடையாளம் தெரியாத நபர்களுக்கு எனது வாகனத்தில் லிஃப்ட் அளித்தது மோட்டார் வாகனச் சட்டம் 66/192ன்படி குற்றமாகும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, போலீஸிடம் இருந்து ரசீதைப் பெற்றுக்கொண்டு, எனது வழக்கறிஞர் நண்பரிடம் உண்மையில் இப்படி அபராதம் விதிப்பதற்குச் சட்டத்தில் விதிமுறை இருக்கிறதா, அதுபோன்று ஒரு பிரிவு சட்டத்தில் இருக்கிறதா என்று கேட்டேன். அவர் அதை போலீஸார் அளித்த ரசீதையும், வழக்குப் பிரிவையும் ஆய்வு செய்து உண்மைதான், முகம் தெரியாத, அடையாளம் தெரியா நபர்களுக்குத் தனியார் வாகனத்தில் லிஃப்ட் அளிப்பது சட்டப்படி குற்றமாகும் என்று தெரிவித்தார். இதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். உதவி செய்தற்கு இப்படி ஒரு தண்டனையா என்று வேதனை அடைந்தேன்.


போலீஸார் வழங்கிய அபராத ரசீது

மறுநாள் நீதிமன்றம் சென்று அபராதத் தொகை ரூ.2 ஆயிரத்தை செலுத்தினேன். அதன்பின் அபராதம் செலுத்தியதற்கான ரசீதை போலீஸிடம் காண்பித்து எனது ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றுக்கொண்டேன்.

இந்த விஷயம் சரியானது அல்லது தவறானது என்பதை நான் வாதிட விரும்பவில்லை. இந்த நாட்டில் உதவி செய்வதும் குற்றமாக்கப்பட்டுள்ளது, சகமனிதருக்கு உதவி செய்வதைக் கூட சட்டம் விரும்புவதில்லை என்பதைக் காட்டுகிறு என்பதைத் தெரிவிக்கவே இதைப் பதிவு செய்கிறேன்.''

இவ்வாறு நாயர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவரிடம் நிருபர் ஒருவர் கேட்டபோது, ''மோட்டார் வாகனச் சட்டம் 66/192-ன்படி தனியார் வாகனங்களில் அடையாளம் தெரியாதவர்களை ஏற்றிச் செல்ல அனுமதி இல்லை. அதாவது பெர்மிட் இல்லாமல் வாகன உரிமையாளர் அல்லது குடும்பத்தினரைத் தவிர யாரையும் அழைத்துச் செல்ல உரிமை இல்லை. அவ்வாறு சென்றால் அதற்கு அபராதம் விதிக்கச் சட்டத்தில் விதிமுறை உண்டு'' எனத் தெரிவித்தார்.

இது குறித்து நவி மும்பை போலீஸ் துணை ஆணையர் நிதின் பவார் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அவர் கூறுகையில், ''இந்தவிவகாரம் குறித்து நவி மும்பை போலீஸிடம் அறிக்கை கேட்டு இருக்கிறேன். அந்த அறிக்கை கிடைத்தபின், அவர்கள் வழக்குப் பதிந்தது சரியான பிரிவில்தானா என்பது குறித்து கூறுகிறேன்'' எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Recovery of commutation: Ex-forest officials move CAT

Recovery of commutation: Ex-forest officials move CAT  Nov 29, 2024, 3:10 IST Read more at: http://timesofindia.indiatimes.com/articleshow/1...