Tuesday, November 6, 2018


பார்க்கும்திசையெல்லாம் தீப ஒளி பரவட்டும்

Added : நவ 06, 2018 06:17

கங்கா ஸ்நானம் ஆச்சா

பிரம்மாவின் வேதங்களை கவர்ந்த அசுரன் ஹிரண்யாட்சன் பாதாளலோகத்தில் ஒளிந்தான். அதை மீட்க பெருமாள் வராக அவதாரமெடுத்து பூமிக்குள் சென்றார். அப்போது பூமித்தாயாருடன் ஏற்பட்ட ஸ்பரிசத்தில் அவளுக்கு 'பவுமன்' என்பவன் பிறந்தான். பூமியின் பிள்ளை என்பது பொருள். பொறுமை மிக்க தாய்க்கு பிறந்த அவன் கெட்ட குணங்கள் மிக்கவனாக இருந்தான். இவன் 'நரகாசுரன்' என அழைக்கப்பட்டான்.

தேவர்களையும், மக்களையும் கொடுமை செய்தான். பெரிய இடத்துப் பிள்ளை என்பதால் அவனை யாரும் தட்டிக் கேட்க வில்லை. இருப்பினும் அவனது அட்டூழியம் பொறுக்காமல் பெருமாளிடம் புகார் செய்தார் பிரம்மா. ஆனால் தன் தாயைத் தவிர வேறு யாராலும் அழிவு நேரக் கூடாது என்று வரம் பெற்றிருந்தான் நரகாசுரன். அப்போது சத்தியபாமாவாகப் பூமியில் வாழ்ந்தாள் பூமாதேவி. அவள் பகவான் கிருஷ்ணரைத் திருமணம் செய்திருந்தாள். கிருஷ்ணர் அவளை அழைத்துக் கொண்டு நரகாசுரனுடன் போருக்குச் சென்றார். ஒரு கட்டத்தில் நரகாசுரனால் தாக்கப்பட்டு மூர்ச்சையடைபவர் போல நடித்தார். பதறிப்போன பாமா தன் கணவரைக் காப்பாற்ற மகனான நரகாசுரன் மீது அம்பு தொடுக்கவே, அவன் இறந்தான். இறந்தவன் அசுரன் என்றாலும் மகன் என்பதால் பெற்ற வயிறு பதறியது. அதே நேரம் அவனது இறப்பை முன்னிட்டு மக்கள் எண்ணெய் தேய்த்து நீராடி புத்தாடை உடுத்தி கொண்டாட வேண்டும் என கிருஷ்ணரிடம் வரம் கேட்டாள். அந்நாளையே 'தீபாவளி' நன்னாளாக கொண்டாடுகிறோம். இந்நாளில் எண்ணெய்யில் மகாலட்சுமியும், நீரில் கங்கையும் வாசம் செய்வதால் தீபாவளி குளியலை ஒருவருக்கொருவர் 'கங்கா ஸ்நானம் ஆச்சா' எனக் கேட்பது வழக்கம்.

வரப்போகும் நாட்களெல்லாம் நல்லதாக நடக்கட்டும்

* நற்குணங்களின் இருப்பிடமே! கருணையின் விலாசமே! அன்பில் சிறந்தவனே! அசுரர்களை துவம்சம் செய்தவனே! இடைக்குலத்தின் தவக்கொழுந்தே! மேகம் போல நீலவண்ணனே! கண்ணனே! மதுராநகர வாசியே! மின்னல் போல் ஜொலிக்கும் பட்டு பீதாம்பரதாரியே! கிருஷ்ணனே! உன்னை வணங்குகிறேன்.* என் மனத் தாமரையில் எப்போதும் இருப்பவனே! நந்தகோபர் வளர்த்த பிள்ளையே! எல்லா துன்பங்களையும் அடியோடு போக்கியருள்பவனே! லீலைகள் பல புரிந்ததால் கோபியர் மனதை விட்டு அகலாத செல்வமே! கிருஷ்ணனே! உன்னை வழிபடுகிறேன்.* கதம்ப மலரைக் காதில் குண்டலமாகத் தரித்தவனே! மிக அழகான கன்னங்களைக் கொண்டவனே! கோபிகைப் பெண்களின் நாயகனே! நந்தகோபருக்கும் யசோதைக்கும் அன்பைப் பொழிந்தவனே! வழிபடும் அடியவர்க்கு சுகம் தருபவனே! கோபி கிருஷ்ணனே! உன்னை தியானிக்கிறேன்.* பூபாரத்தைப் போக்கியவனே! பிறப்பு, இறப்பு என்னும் சம்சார பந்தத்தில் இருந்து விடுவிப்பவனே! பிறவிக் கடலைக் கடக்கச் செய்யும் தோணியே! யசோதையின் இளஞ்சிங்கமே! வெண்ணெய்யை விரும்பித் திருடுபவனே! சாதுக்கள் மீது பற்று கொண்டவனே! நாளும் புதிய கோலத்தில் காட்சி அளித்தவனே! கிருஷ்ணனே! உன்னைச் சரணடைகிறேன்.* இடைக்குலத்தின் திலகமாக திகழ்பவனே! ஆயர்குலத்தின் அணிவிளக்கே! ஆனந்தம் அருள்பவனே! தாமரை போல இருக்கும் என் மனதில் மோகத்தைத் துாண்டுபவனே! சூரியன் போல பிரகாசிப்பவனே! வேணுகானம் இசைப்பதில் வல்லவனே! யாவரும் விரும்பும் அழகு மிக்கவனே! கடைக்கண் பார்வையால் அன்பர்களுக்கு வேண்டும் வரமருள்பவனே! கிருஷ்ணனே! உன்னைப்போற்றி மகிழ்கிறேன்.* ஆயர்பாடிக்கு அலங்காரமே! பாவங்களை போக்குபவனே! பக்தர்களின் மனதை மகிழ்விப்பவனே! நந்தகோபரின் புத்திரனே! மயில்தோகையை தலையில் சூடியவனே! இனிய புல்லாங்குழலை கையில் ஏந்தியவனே! கோபியரிடம் விளையாடியவனே! கிருஷ்ணனே! உன்னை துதிக்கிறேன். உன்னருளால் உலகம் செழிப்புடன் வாழட்டும்.

தீபாவளியின் தம்பி யார் தெரியுமாஷசொல்கிறார் காஞ்சிப்பெரியவர்

பகவத் கீதையை 'தீபாவளியின் தம்பி' என்று குறிப்பிடுவது வழக்கம். தியாகத்தாய் சத்தியபாமா மகனை இழந்த நிலையில், பகவான் கிருஷ்ணரிடம் அந்நாளை பண்டிகையாக கொண்டாட வரம் பெற்றதால் 'பண்டிகைகளின் ராஜாவாக' தீபாவளி இருக்கிறது.தத்துவங்கள் பல இருந்தாலும் அதற்கெல்லாம் சிகரமாக இருப்பது பகவத்கீதை. தீபாவளி போல இதுவும் தியாகத்தின் பின்னணியில் உருவானதே. சாதாரணமாக தத்துவ உபதேசம் என்பது குருநாதர் தன் சீடர்களுக்கு செய்வதாக இருக்கும். ஆனால் கீதையோ நெருக்கடியான சூழலில் போர்க்களத்தில் பிறந்தது. எஜமானராக இருக்கும் அர்ஜுனன், வண்டிக்காரனாக தேரோட்டும் சாரதியிடம் கேட்ட உபதேசம். “சிஷ்யனாக சரணாகதி அடைந்த எனக்கு உபதேசம் செய்வாயாக” என அர்ஜுனன் கேட்ட போது பகவத்கீதை பிறந்தது. இதனால் கீதை 'தீபாவளியின் தம்பி' என்ற அந்தஸ்து பெறுகிறது. பண்டிகைகளில் ராஜா தீபாவளி போல் தத்துவங்களில் கீதை உயர்ந்ததாக உள்ளது. தீபாவளி, கீதைக்கு காரணகர்த்தாவாக இருப்பவர் பகவான் கிருஷ்ணரே.

நாளெல்லாம் நல்ல நாளே!

பண்டிகைகளில் அதிகம் செலவழிப்பது தீபாவளிக்கு மட்டுமே. குடும்பத்திற்கு மட்டுமின்றி, உறவினர், நண்பர் வகையிலும் புத்தாடை, இனிப்புகள், பட்டாசு என தாராளமாக பணம் செலவாகும். இந்நாளில் பணத்திற்கு அதிபதியான குபேரலட்சுமியை வழிபட்டால் எல்லா நாளும் தீபாவளியாக இனிக்கும். மங்கல திரவியங்களான மஞ்சள், குங்குமம், வெற்றிலைபாக்கு, வெள்ளை நிற மலர்கள், சந்தனம், பழம், அட்சதை, நவதானியத்தை படைத்து 'ஓம் குபேராய நமஹ' 'ஓம் மகாலட்சுமியை நமஹ' என்னும் மந்திரங்களை 108 முறை ஜெபித்து மகாலட்சுமிக்கு தீபம் காட்ட வேண்டும்.

எல்லோரும் நலம் வாழ...

தீபாவளியன்று காலை, மாலை தீபம் ஏற்றும்போது,“கீடா: பதங்கா: மசகாச்ச வ்ருக்ஷா:ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:!த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜாபவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா:!!”என்ற ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம்.பொருள்: புழு, பறவை, மரம் எதுவானாலும், நீரிலும், நிலத்திலும் வாழும் ஜீவராசிகள் எதுவானாலும், மனிதர்களில் யாரானாலும், இந்த தீபத்தைப் பார்க்கும் அனைவரும் பாவங்களில் இருந்து விடுபட வேண்டும். பிறவிப்பிணி நீங்கி இன்பமாக வாழ வேண்டும். விளக்கேற்றும் புண்ணியபலனை உயிர்கள் எல்லாம் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

ஆதிமனிதன் கொளுத்திய 'மத்தாப்பூ'

கங்கைக்கும் மேலான காவிரி

தீபாவளி குளியலை கங்கா ஸ்நானம் பெருமையாகச் சொல்கிறோம். ஆனால் இந்த ஸ்நானத்தை உருவாக்கிய கிருஷ்ணரோ, தன் பாவம் தீர காவிரிக்கு கரைக்கு வந்தார். வீரனான நரகாசுரனைக் கொன்றதால் அவருக்கு வீரஹத்தி தோஷம் உண்டானது. அவரது நீலமேனி வண்ணம் ஒளியிழந்து மங்கிப்போனது. அதை தீர்க்க கைலாயம் சென்று சிவனிடம் உபாயம் கேட்டார். “கிருஷ்ணா! துலா மாதமான ஐப்பசி மாதம் முழுவதும் சூரிய உதயத்தில் இருந்து ஆறு நாழிகை (2மணி 24 நிமிடம்) நேரத்திற்குள் காவிரியில் நீராடினால், வீரஹத்தி தோஷம் நீங்கும்” என்றார். கங்கா ஸ்நானத்திற்கு அருள் செய்த கிருஷ்ணர் தீபாவளியன்று காவிரியில் நீராடித் தன் பாவம் போக்கினார். இதனால் கங்கையை விட காவிரியும் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த பாரத நாட்டில் கடவுள் அருள் வேண்டி ஏராளமான பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அந்த பண்டிகைகள் ஒவ்வொன்றிற்கும் ஆன்மிகப் பின்புலம், வரலாற்றுப் பின்னணி நிச்சயம் உண்டு. நரகாசுரன் என்ற அரக்கனை ஸ்ரீகிருஷ்ண பகவான் வதம் செய்து உலக மக்களை காத்தருளிய நாளை தீபமேற்றி தீபாவளியாக கொண்டாடி வருகிறோம்.தீமையை வெற்றி கொள்ளும் ஒளித்திருநாளாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்பது தீ ஒளி என்று பொருள். வீடுகளில் அன்றைய தினம் விளக்குகளை ஏற்றி வைப்பதன் மூலம் வீடுகளில் இருள் விலகி , வளம் பெருகும் என்பது ஐதீகம். தீய சக்திகளை விரட்டியதை மகிழ்ச்சியுடன் கொண்டாட, பட்டாசு என்பது பட்டாசுகளுக்கான ஐதீகம்.காலையில் குளிச்சிட்டு, புது டிரஸ் போட்டுகிட்டு, பட்டாசு வெடிச்சிட்டு, ருசியா நாலு பலகாரத்த சாப்பிட்டோமா, அப்படியே 'டிவி'யில போடும் சினிமா நிகழ்ச்சியை பார்த்தோமான்னு பலருக்கு தீபாவளி வீணாக முடிந்து விடுகிறது. இன்னும் சிலருக்கோ தீபாவளி என்பது மது அருந்தி, மாமிச உணவுகளை உண்ணும் ஒரு கொண்டாட்டமாகவே உள்ளது. இந்த இனிய தீபாவளிப் பண்டிகை பற்றி இன்றைய இளைய சமுதாயம் வரலாற்று பின்னணியுடன் தெரிந்து கொள்ளவே இந்த ஆதிமனிதன் கொளுத்திய 'மத்தாப்பூ'குரங்கிலிருந்து வந்த ஆதி மனிதன் தீயை கண்டறியா விட்டால் இன்றைக்கு நாமெல்லாம் பட்டாசு வெடித்திருக்க முடியாது. பூமியின் அற்புதப் படைப்பே 'தீ' என்கிறது யவன புராணம். ஆதிகாலத்தில் இடி, மின்னலால் மரங்கள், புதர்கள் தீப்பிடித்து குபுக்கென்று சிவப்பு நிற ஜூவாலைகள் தோன்றும். அந்த தீயின் மூலமாக வெளிச்சத்தைக் கண்ட ஆதிமனிதன் உணவு சமைக்க, இரவில் வெளிச்சம் தர தீயை பயன்படுத்தினான். தன்னை தாக்கும் மிருகங்களை தீயின் உதவியுடன் விரட்டியடித்து வெற்றி கொண்ட போது கையில் மத்தாப்பூ போல் தீயை வைத்து முழக்கமிட்டு, கூட்டமாக கொண்டாடிய ஒவ்வொரு நிகழ்வுகளும் ஆதிமனிதனுக்கு தீபாவளியே.தீயை அடக்கியாளப் பழகிய மனிதன் தீயை சிறு சிறு பொறியாக மாற்றி தீக்குண்டங்களில், அதாவது வேள்வியில் நிலை நிறுத்தினான். இதுவே பின்னாளில் சிறு ஒளியாக தீபமாக மாறியது. மனிதன் உயிர் வாழவும், உயிரை பாதுகாக்கவும் பயன்பட்டதால் 'தீ' புனிதமாக்கப்பட்டது. இன்றும் மாலை நேரத்தில், வீடுகளில் தீபமேற்றி செல்வத்தின் அதிபதி லட்சுமியை வரவேற்கும் முறை உள்ளது. எனவே, ஆதிகாலத்தில் இருந்து இன்று வரை தீப ஒளி நம்மை காத்து வருகிறது.மனிதன் மனதிலுள்ள இருள் எனும் தீமையை போக்க தீப ஒளியில் இறைவனை வணங்கினான். உள்ளத்து தீமையை சுட்டெரி 'தீ' என்ற அறிவை பயன்படுத்தி விரட்டி, குறைவில்லா செல்வத்தை இல்லங்களுக்கு கொண்டு வரும் நன்னாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீய எண்ணங்களை விலக்கி சங்கடங்கள் வந்தாலும் சந்தோஷமாகவே இருங்கள். தீபாவளி மத்தாப்பூவைப் பார்த்தீர்களா? அதன் தலையில் நெருப்பை வைத்தாலும், வண்ண வண்ணமாய் பொங்கி எப்படி எல்லாம் சிரிக்கிறது பார்த்தீங்களா? அப்படி இருப்போமே!

காவிக்கு இல்லை கட்டுப்பாடு

தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிப்பது அவசியம். ஐப்பசி மாதம் குளிர்காலம் என்பதால் வெந்நீரில் குளிக்கிறோம். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும் சிறப்பு இருக்கிறது. நல்ல எண்ணெய்யில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். சாதாரணமாக எண்ணெய்த்தலையைக் கண்டால் அபசகுனம் என்பர். ஆனால், தீபாவளியன்று எண்ணெயில் லட்சுமி இருப்பதால் நீராடுவோருக்கு வளம் பெருகும். காவியணிந்த துறவியும் கூட எண்ணெய் தேய்த்து நீராடி தீபாவளியை கொண்டாட வேண்டும். இதன் மூலம் முன்வினைப்பாவம் கூட நீங்கும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024