Tuesday, November 6, 2018

தீபாவளி மது விற்பனை ரூ.350 கோடிக்கு இலக்கு: தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறையால் எதிர்பார்ப்பு

Published : 05 Nov 2018 15:41 IST

சென்னை
 


மதுவிற்பனை - கோப்புப் படம்

தமிழகத்தில் மதுபான விற்பனைக்கு ரூ.350 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நான்கு நாட்கள் தொடர் விற்பனை காரணமாக விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் சுமார் 6 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் உள்ளன. டாஸ்மாக் மூலம் அரசுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.80 கோடி அளவிலும், ஆண்டுக்கு சுமார் ரூ. 20 ஆயிரம் கோடி அளவிலும் வருவாய் கிடைக்கிறது. வார இறுதி நாட்கள், பண்டிகை நாட்களில் டாஸ்மாக் மது விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் டாஸ்மாக் நிர்வாகம் விற்பனை இலக்கு நிர்ணயிப்பது வழக்கம்.

அதேபோன்று இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையையொட்டி ரூ.350 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அனைத்து மதுபானக் கடைகளிலும் போதுமான அளவு மது பாட்டில்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கமாக ஆண்டுதோறும் தீபாவளி நாளன்று மட்டும் ரூ.150 கோடி மது விற்பனையாகும் அதே அளவு இந்த ஆண்டும் விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டுதோறும் இலக்கு நிர்ணயித்து விற்பனை செய்து வருவதும், மதுப்பிரியர்கள் அதிகரித்து வருவதும் கவலையளிக்கக்கூடிய விஷயமாக சமூக ஆர்வலர்கள் பார்க்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 3 நாட்கள் தீபாவளி விடுமுறை வரும். இந்தமுறை 4 நாட்கள் விடுமுறை வந்துள்ளதால் மது விற்பனை கடந்த ஆண்டை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாள் என இரண்டு நாளிலும் ரூ.245 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு மதுவுக்கு எதிரான தீவிரப் போராட்டம் காரணமாக 20 சதவிகிதம் தீபாவளி விற்பனை குறைந்து, ரூ.223 கோடி அளவிற்கே விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக மது விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தீபாவளிக்கு மது விற்பனை குறித்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் கடந்த ஆண்டு உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மதுவிலக்குப் போராட்டத்தில் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி கிருபாகரன் தலைமையிலான நீதிபதிகள் அமர்வு, “மாதம் இவ்வளவு மதுபானம் விற்பனை செய்யவேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்து தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் செயல்படுவது வேதனை அளிக்கிறது.

தீபாவளிப் பண்டிகை வருகிறது. இந்தப் பண்டிகையின்போது மது எவ்வளவு விற்பனை செய்யவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதா? மாதம் தோறும் இலக்கு நிர்ணயித்து தமிழக அரசு மது விற்பனை செய்வது வேதனை அளிக்கிறது” எனத் தெரிவித்தது. இதேபோன்ற நிலை இந்த ஆண்டும் தொடர்கிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024