Wednesday, November 7, 2018

திரை வெளிச்சம்: கத்தி போச்சு சர்கார் வந்தது

Published : 02 Nov 2018 11:28 IST

செல்லப்பா

 

தமிழ்த் திரையுலகில் கதைக் கையாடல் என்பது தொன்றுதொட்டு இருந்துவருகிறது. ‘கல்யாணப்பரிசு’ திரைப்படம் வெளியானபோது, அந்தப் படத்தின் கதை தமது என்று கூறிப் பத்துப் பேர் வந்ததாகவும், ‘பத்துப் பேருக்குத் தோன்றிய கரு தனக்குத் தோன்றியிருக்காதா’ என்று இயக்குநர் ஸ்ரீதர் கூறியதாகவும் ஒரு பேச்சு உள்ளது.

இயக்குநர் பாரதிராஜாவின் ‘முதல் மரியாதை’ படத்தில் கி.ராஜநாராயணின் ‘கோபல்லபுரம் கிராமம்’ நாவலின் சில சம்பவங்கள் இடம்பெற்றிருந்த விவகாரம் பலரறிந்தது. கே.பாலசந்தரின் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் கதை தன்னுடையது என என்.ஆர்.தாசன் என்பவர் வழக்குப் போட்டு வெற்றிபெற்றதாகத் தெரிகிறது.

பிரபல ஹாலிவுட் படமான சைக்கோவைத் தழுவியே பாலுமகேந்திரா ‘மூடுபனி’ படத்தை எடுத்தார் என்போர் உண்டு. இயக்குநர் மணிரத்னத்தின் ‘நாயகன்’ கதை என்ன என்பது எல்லோருக்கும் தெரியும்.

‘கறுப்புப்பணம்’ என்ற படமே ‘ஜென்டில் மேன்’ ஆனதும், ‘நாம் பிறந்த மண்’, ‘இந்தியன்’ ஆனதும் இயக்குநர் ஷங்கரின் திறமைக்குச் சான்றுகள். நடிகர் கமல்ஹாசனின் கதை சாமர்த்தியம் குறித்து ‘ஹே ராம்’ என்று சொல்லத்தக்க அளவில் பதிவுகள் காணக் கிடைக்கின்றன.

அட்லி, விஜய் போன்ற சமகால இயக்குநர்கள் எவ்வளவு திறமையாகக் கதைகளைத் தேடி உருவாக்குவார்கள் என்பதை விவரிக்கவே தேவையில்லை. ஆக, காலங்காலமாக நிகழ்ந்துவரும் பண்பாட்டு நிகழ்வுபோல் இந்தக் கதை விவகாரம் தொடர்ந்துவருகிறது. பெரிய நடிகர், அதிக பட்ஜெட் எனும்போது அதற்கு ஊடக வெளிச்சம் அதிகமாகக் கிடைக்கிறது.

செங்கோலும் சர்காரும்

அண்மையில் ஏ.ஆர்.முருகதாஸின் ‘சர்கார்’ படக் கதை தொடர்பாகவும் இதே போன்று பேச்சு எழுந்தது. தொடர்ந்து வெற்றிப் படங்களையே தருவதால் இயக்குநர் முருகதாஸ் படம் ஒன்றைத் தொடங்கினாலே யாருடைய கதையை அவர் படமாக்குகிறார் என்பதிலேயே ரசிகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

பட்ட காலிலே படும் என்பதுபோல், முருகதாஸுக்கும் நிகழ்கிறது. அவரது ‘ரமணா’ தொடங்கி ‘கஜினி’, ‘ஏழாம் அறிவு’, ‘கத்தி’ எனத் தொடர்ந்து இப்போது ‘சர்கார்’ வரை அவரைப் போன்றே ஒத்த சிந்தனையுடன் பலரும் யோசித்துக் கதைகளை எழுதியிருக்கிறார்கள். இதில் முத்தாய்ப்பு கிறிஸ்டோபர் நோலன்தான்.

‘சர்கார்’ பட முன்னோட்டக் காட்சிகள் வெளியானதும் அதைப் பார்த்த வருண் ராஜேந்திரன் என்னும் உதவி இயக்குநர், தான் 2007-ம் ஆண்டில் பதிவுசெய்திருந்த தனது ‘செங்கோல்’ கதையைப் போலவே அதுவும் இருந்ததும் பதறிப்போயுள்ளார்.

வருண் உடனடியாகத் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தை அணுகியுள்ளார். அதன் தலைவரான இயக்குநர் கே.பாக்யராஜ், விசாரித்து அறிந்ததில் வருண் சொல்வதில் உண்மை இருப்பதை உணர்ந்ததால், முருகதாஸை அழைத்து விசாரித்திருக்கிறார். ஆனால், முருகதாஸ் ‘சர்கார்’ தனது கதைதான் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்.

எந்தச் சமரசத்துக்கும் தயாரில்லை என்றும் மீதியை நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்வதாகவும் தெரிவித்து வெளியேறியிருக்கிறார். வேறுவழியற்ற சூழலில் செயற்குழு உறுப்பினர்களுடன் கலந்துபேசி எடுத்த முடிவின்படி, வருணின் கதைக்கும் முருகதாஸின் கதைக்கும் இடையே ஒத்த சாராம்சம் இருப்பதை ஒத்துக்கொண்டு அவருக்குத் தங்களால் உதவ இயலவில்லை என்பதற்காக வருத்தமும் தெரிவித்துக் கடிதம் ஒன்றை வருணிடம் கொடுத்துவிட்டார்.

அந்தக் கடிதம் ஊடகங்களில் வெளியானவுடன் விஷயம் எல்லாத் திக்கிலும் பரவிவிட்டது. சமூக வலைத்தளங்களில் முருகதாஸ் கடுங்கேலிக்கு ஆளானார். தன் கதைதான் ‘சர்கார்’ என்பதை முருகதாஸே மறந்துவிடக்கூடிய அளவுக்கு நிலைமை முற்றியது.

ஜெயமோகனும் சர்காரும்

ஆனாலும், விடாப்பிடியாக நின்ற முருகதாஸ் தன் கதைதான் ‘சர்கார்’ எனச் சாதித்தார். தனது முழுக்கதையை பாக்யராஜ் படித்துப் பார்க்காமல், ஒருதலைப் பட்சமாகத் தனக்குத் தண்டனை அளித்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

இதைத் தொடர்ந்து பாக்யராஜும் தன் தரப்பின் நியாயத்தைத் தெரிவித்து ஊடகங்களில் பேசினார். இதனிடையே ‘சர்கார்’ படத்தில் பணியாற்றும் எழுத்தாளர் ஜெயமோகனும் இது முருகதாஸின் கதைதான் என்றும் தானும் முருகதாஸும் அவருடைய உதவியாளர்களும் கடுமையாக உழைத்து உருவாக்கிய கதை இது என்றும் எதற்கும் அஞ்சாமல் தனது இணையதளத்தில் எழுதினார்.

ஆனால், புரியாத புதிராக அடுத்த நாளே நீதிமன்றத்தில் வருண், ஏ.ஆர்.முருகதாஸ் இடையே சமரசம் ஏற்பட்டது. தன்னைப் போலவே சிந்தித்த வருணின் சிந்தனைக்கு மதிப்புக் கொடுக்கத் தயாரானார் முருகதாஸ். படத்தின் டைட்டில் கார்டில் வருணை அங்கீகரித்து நன்றி தெரிவிப்பதாகக் கூறிய முருகதாஸ், ‘சர்கார்’ தனது கதை தான் என்பதை மட்டும் மீண்டும் வலியுறுத்தினார். சமரசத்துக்குப்பின் ஊடகங்களில் கருத்துத் தெரிவித்த வருண், ‘விஜய்க்கும் எஸ்.ஏ.சிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தனது தீபாவளிப் பரிசே சர்கார்’ என்பதையும் தெரிவித்து முடித்தார்.

‘சர்கார்’ கதை சர்ச்சையைப் பொறுத்த விஷயத்தில், எழுத்தாளர் சங்கத்தின் தலைவரான பாக்யராஜ் நியாயமாகவும் துணிச்சலாகவும் நடந்துகொண்டார் எனப் பலதரப்பிலிருந்தும் பாராட்டுக் கிடைத்தது. அதே நேரத்தில் ஜெயமோகன் சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் கிண்டலடிக்கப்பட்டார்.

தனது இணையதளத்தில் படத்தின் தலைப்பைக்கூட சர்க்கார் என்று பிழையாகக் குறிப்பிட்டிருந்த அவர், வருணுக்கு அங்கீகாரம் கிடைத்ததற்குப் பின்னர், அதைக் கேரளத்தின் நோக்குக்கூலிக்கு ஒப்பிட்டு எழுதிய தன்மை பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் பங்கேற்ற இயக்குநர் பிரவீன் காந்தி, ஜெயமோகன் இந்தச் சொல்லை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், அடுத்த நாள் தனது வாக்கியத்தைச் சற்றே மாற்றிய ஜெயமோகன் நோக்குக்கூலி என்பதையும் எடுத்துவிட்டார்.

ஜெயமோகனின் இப்படியான போக்கு பலருக்கும் பேரிடியாக இருந்தது. திரைத் துறையைப் பொறுத்தவரை ஜெயமோகன் சாதாரண மனிதர். ஒரு எழுத்தாளர் என்ற அளவில் அவருடைய எந்தச் சொல்லுக்கும் அங்கே பெரிய மதிப்பிருக்காது. அதை உணர்ந்ததால்தான் அவர் இந்த விஷயத்தில் ஏ.ஆர்.முருகதாஸின் தரப்புக்கு ஆதரவாகவே நின்று அவரை வலுப்படுத்துவதில் தன் பலத்தை வெளிப்படுத்தி இருக்கக்கூடும் என்கிறார்கள் திரைத் துறையையும் இலக்கியத்தையும் அறிந்தவர்கள்.

இனி வரும் காலத்தில் எழுத்தாளர்களுக்குக் கொடுமை நிகழாவண்ணம் தடுப்பதற்காகத் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் தனது விதிகளை மாற்றியமைக்கும் என்றும் எழுத்தாளர்களுக்கு நியாயம் கிடைக்க சங்கம் துணை நிற்கும் என்றும் பாக்யராஜ் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

படமெடுக்கத் தொடங்குவதற்கு முன்பாகவே கதை தொடர்பாகத் தடையில்லாச் சான்றிதழ் பெறுவது பயன் தரும் என்றும் பலர் தெரிவித்திருக்கிறார்கள். எவ்வளவோ முதல் போட்டுப் படமெடுக்கும் திரைப்பட உலகினர், உதவி இயக்குநர்களின் கதையை அவர்களிடம் அனுமதி பெற்றுப் படமாக்கினால், இதைப் போன்ற சிக்கல்களைத் தவிர்க்கலாம் என்று ஆலோசனைகள் கூறப்படுகின்றன. சமூகத்துக்கு நல்ல கருத்துகளைச் சொல்வதில் ஆர்வம் காட்டும் திரைத்துறையினர், அதைக் கடைப்பிடிப்பதிலும் ஆர்வம் காட்டுவது நல்லது என்கிறார்கள் விஷயமறிந்தோர்.

தொடர்புக்கு: chellappa.n@thehindutamil.co.in

No comments:

Post a Comment

MUMBAI Bombay floods