Saturday, November 3, 2018

Rain 2019

கன மழைக்கு தீபாவளி, 'லீவு'

பதிவு செய்த நாள்: நவ 03,2018 06:21

வடகிழக்கு பருவமழையின் தொடக்க நாளில், 15 செ.மீ., மழை கொட்டியுள்ளது. இன்றுடன், கன மழைக்கு, சில நாட்கள் விடுமுறை என, அறிவிக்கப்பட்டு உள்ளது.ஒவ்வொரு ஆண்டும், அக்., 20க்கு பின், வடகிழக்கு பருவமழை துவங்கும். இந்த ஆண்டு, அக்., 26ல், மழை துவங்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடலியல் மாற்றங்களால், வடகிழக்கு பருவமழை தாமதமானது.இந்நிலையில், நவம்பர்,1ல், பருவமழை துவங்கியதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன்படி, நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, நாகை மாவட்டம், வேதாரண்யத்தில், 15 செ.மீ., மழை பெய்துள்ளது.திருத்துறைப்பூண்டி, 13; மயிலாடுதுறை, 9; திருவாரூர், 8; காரைக்கால், நன்னிலம், ராமேஸ்வரம், பரங்கிபேட்டை, 7; பாம்பன், மதுக்கூர், 6; சீர்காழி, பட்டுக்கோட்டை, பொள்ளாச்சி, சிதம்பரம், குடவாசல், 5; தென்காசி, போளூர், திருவள்ளூர், 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில், நேற்று மழை கொட்டியது. சென்னையில், காலை முதலே வெயில் கொளுத்தியது.இன்றைய வானிலையை பொறுத்தவரை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.கடலோர மாவட்டங்களில், லேசான மழை பெய்யலாம்.சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில், சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.நாளை முதல், 6ம் தேதி வரை, சில நாட்கள் இடைவெளிக்கு பின், மீண்டும் கனமழை துவங்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், ஸ்டெல்லா கூறியதாவது:வட கிழக்கு பருவமழை, தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவின் பெரும் பகுதிகளில் துவங்கி விட்டது. கன்னியாகுமரி மற்றும் தென் மாவட்டங்களை ஒட்டிய பகுதியில், வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.அதனால், அடுத்த இரண்டு நாட்களுக்கு, தமிழகத்தில், பல இடங்களில் மிதமான மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.கன மழைக்கு வாய்ப்பு இல்லை. சென்னையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில நேரங்களில், இடைவெளி விட்டு லேசான மழை பெய்யும்.இவ்வாறு, அவர் கூறினார் - நமது நிருபர் -.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024