Friday, June 14, 2019

12 ஆயிரம் லிட்டர் லோடுக்கு ரூ.3,000

Added : ஜூன் 14, 2019 03:59 |

சென்னை:நீர்நிலைகள் அழிப்பு, பருவமழை பொய்த்தது போன்ற காரணங்களால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதை சமாளிக்க, அதிகபட்ச ஆழத்துக்கு, பல இடங்களில், ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன.அதிலிருந்தும் போதிய தண்ணீர் கிடைக்காததால், தனியார் லாரிகள் வாயிலாக, தண்ணீர் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

சென்னையில், தனி வீடுகளில் இருப்பவர்களை காட்டிலும், அடுக்குமாடி குடியிருப்பு களில் அதிகம் பேர் வசிக்கின்றனர். அவர்களின் நிலைமை பரிதாபமாகி உள்ளது.பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகளில், லாரி தண்ணீர் வாங்க ஏற்படும் கூடுதல் செலவை, பலரால் சமாளிக்க முடிவதில்லை. மூன்று மாதத்திற்கு முன், தனியார் தண்ணீர் நிறுவனங்கள், 12 ஆயிரம் லிட்டர் லோடுக்கு, 1,200 ரூபாய் வாங்கின. இப்போது, 3,000 ரூபாய் கேட்கின்றனர்.

இது குறித்து, அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகிகள் கூறியதாவது:தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, அடுக்குமாடி குடியிருப்புகளை பராமரிப்பது சிக்கலாகியுள்ளது. கூடுதல் தொகையை வசூலிப்பதிலும், தண்ணீர் வாங்குவதிலும், தினமும் பிரச்னைகளை சந்திக்கிறோம். வாடகைக்கு இருப்பவர்கள், கூடுதல் செலவை சமாளிக்க முடியாமல், வீட்டை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

அடுத்து வரும் மாதங்களில், நிலைமை மேலும் மோசமடையும் என்பதால், எப்படி சமாளிப்பது என, தெரியாமல் தவிக்கிறோம்.அரசு, போர்க்கால அடிப்படையில்,ஏதாவது நடவடிக்கை எடுத்து, அனைத்து குடியிருப்புகளுக்கும் தண்ணீர் கிடைக்க செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024