Saturday, June 15, 2019


'நீட்' விடைத்தாள் விவகாரம் தலையிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Added : ஜூன் 15, 2019 00:31

புதுடில்லி:'விடைத்தாளில், ஐந்து கேள்விகளுக்கான விடைகள் தவறாக இருந்ததால், 'நீட்' தேர்வை செல்லாது என அறிவிக்க வேண்டும்' எனக் கேட்ட, மாணவர்களின் கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இதுதொடர்பாக, உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு, மாணவர்களுக்கு உத்தரவிட்டது,பிளஸ் 2 தேறிய மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, நீட் எனப்படும், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.இந்த ஆண்டுக்கான தேர்வு, மே, 5ல் நடத்தப்பட்டது. விடைத்தாள், 29ல் வெளியிடப்பட்டது. ஜூன், 5ல், 'ரிசல்ட்' வெளியிடப்பட்டது.தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கவுன்சிலிங் மூலம் கல்லுாரி ஒதுக்கீடு செய்வதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம், ஐதராபாதைச் சேர்ந்த, நான்கு மாணவர்கள், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அவர்கள், மனுவில் கூறியிருந்ததாவது:தேசிய தேர்வு முகமை, மே, 29ல் வெளியிட்ட விடைத்தாளில், ஐந்து கேள்விகளுக்கான பதில்கள் தவறாக இருந்தன. அதுபற்றி, முகமைக்கு புகார் செய்தோம்.பின், ஜூன், 5ல் இறுதி விடைத்தாள் வெளியிடப்பட்டது. அதில், நாங்கள் கூறிய விடைகள், திருத்தம் செய்யப்பட்டு இருந்தன.

ஆனால், வேறு நான்கு கேள்விகளுக்கு, தவறான விடைகள் கொடுக்கப்பட்டு இருந்தன. எனவே, இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.விடுமுறை கால நீதிபதிகள், அஜய் ரஸ்தோகி, சூர்யகாந்த் மனுவை விசாரித்தனர்.
'தேசிய அளவில் நடத்தப்படும் நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் மற்றும் விடைத்தாளை, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் தான் தயாரிக்கின்றனர்.'நாங்கள் கல்வித்துறை வல்லுனர்கள் அல்ல. நீட் தேர்வு விடைத்தாளை, நாங்கள் ஆய்வு செய்ய முடியாது' எனக் கூறிய நீதிபதிகள், மாணவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர்.இது தொடர்பாக, முதலில், உயர் நீதிமன்றத்தை அணுகி, தீர்வு பெறுமாறும் உத்தரவிட்டனர்.

இதேபோல், மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவைச் சேர்ந்த சில மாணவர்கள், நீட் தேர்வு விடைத்தாள் விவகாரம் தொடர்பாக, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். அந்த வழக்கு, 17ல் விசாரிக்கப்படுகிறது.நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நாளை மறுநாள், கவுன்சிலிங் துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024