Saturday, June 15, 2019

ஈரடுக்கு மேம்பால கட்டுமான பணிகள்:சேலத்தில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
சேலத்தல் நடைபெற்று வரும் ஈரடுக்கு மேம்பால கட்டுமான பணிகளுக்காக இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது
.
பதிவு: ஜூன் 15, 2019 03:45 AM

சேலம்,

சேலம் மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருவாக்கவுண்டனூர் பைபாஸ், ஏ.வி.ஆர். ரவுண்டானா, இரும்பாலை பிரிவு ரோடு பகுதியில் ஏற்கனவே மேம்பாலம் கட்டி முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இதைத்தொடர்ந்து சேலம் ஏ.வி.ஆர்.ரவுண்டானாவில் இருந்து 5 ரோடு வழியாக ராமகிருஷ்ணா சாலை வரையிலும் உயர்மட்ட மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்டு கடந்த 7-ந் தேதி முதல் பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்தநிலையில், குரங்குசாவடியில் இருந்து 5 ரோடு, புதிய பஸ்நிலையம், 4 ரோடு வரையிலும் ஈரடுக்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. இருப்பினும், மீதமுள்ள கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதால் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

இதனால் சேலத்தில் புதிய பஸ்நிலையம் மற்றும் 5 ரோடு பகுதியில் இன்று (சனிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதாவது, சேலம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து 5 ரோடு செல்லும் பஸ், கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஏ.ஆர்.ஆர்.எஸ். 5 தியேட்டர், மெய்யனூர் பிரதான சாலை வழியாக செல்ல வேண்டும். அதேபோல், 5 ரோட்டில் இருந்து புதிய பஸ்நிலையம் நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் செல்லலாம் எனவும், இதற்கு வாகன ஓட்டிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஈரடுக்கு மேம்பால பணிகள் அடுத்த ஆண்டுக்குள் முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024