Saturday, June 15, 2019

சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் பெண் அதிகாரி அரிவாளால் வெட்டி சாய்ப்பு : வெறிச்செயலில் ஈடுபட்ட காதலன் ரெயில் முன் பாய்ந்தார்


சுவாதி கொலை வழக்கை போன்று, சென்னை சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் இன்னொரு காதல் கொடூர சம்பவம் நடந்தது. பெண் அதிகாரி ஒருவரை அவரது காதலன் அரிவாளால் வெட்டி சாய்த்துவிட்டு தானும் ரெயில் முன் பாய்ந்தார்.

பதிவு: ஜூன் 15, 2019 05:56 AM
சென்னை,

நெஞ்சை உலுக்கிய இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

ஈரோடு மாவட்டம் கொண்டச்சி பாளையம் அருகே உள்ள களியங்காட்டு வலசு என்ற கிராமத்தை சேர்ந்தவர் தேன்மொழி(வயது 26). இவரது தந்தை பெயர் வீரமணி. பட்டதாரியான இவர் சென்னை சேத்துப்பட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். 3 மாதங்களுக்கு முன்பு இவர் அந்த பணியில் சேர்ந்தார்.


சென்னை எழும்பூர் வீராசாமி தெருவில் உள்ள மகளிர் விடுதி ஒன்றில் தங்கி உள்ளார். இவரும் சுரேந்தர்(27) என்ற வாலிபரும் உயிருக்கு உயிராக காதலித்ததாக தெரிகிறது. சுரேந்தரின் தந்தை பெயர் விஜயராகவன். இவரும் ஈரோடு மாவட்டம் ரூபின் பாக் பகுதியைச் சேர்ந்தவர். பட்டதாரியான இவர் ஈரோட்டில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று மாலை 6 மணியளவில் சுரேந்தர் சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் உட்கார்ந்து இருந்தார். தேன்மொழி, பணி முடிந்து சேத்துப்பட்டு ரெயில் நிலையத்துக்கு வந்தார். இருவரும் ரெயில் நிலையத்தில் உட்கார்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.

திடீரென்று அவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. உட்கார்ந்து பேசிய அவர் கள் பின்னர் நின்று கொண்டு சத்தம் போட்டு பேசினார்கள். அப்போது இரவு 7.50 மணி இருக்கும். உச்சக்கட்ட மோதலில் எதிர்பாராதவிதமாக சுரேந்தர் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை கையில் எடுத்து தேன்மொழி மீது பாய்ந்தார். அவரை கீழே தள்ளி சுரேந்தர் அரிவாளால் வெட்டினார்.

இதில், தேன்மொழியின் தாடை மற்றும் கன்னம் பகுதியில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவரது கழுத்து மற்றும் கையிலும் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தார்.

அந்த நேரத்தில் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி மின்சார ரெயில் ஒன்று வேகமாக வந்தது. உடனே சுரேந்தர் அந்த ரெயில் முன் பாய்ந்தார். ஆனால் ரெயில் என்ஜின் சற்று முன்னால் சென்றுவிட்டது. சுரேந்தர் ரெயில் என்ஜினுக்கு பின்னால் உள்ள பெட்டியில் மோதி தலையில் பலத்த காயத்தோடு பிளாட்பாரத்தில் தூக்கி எறியப்பட்டார். மூச்சு பேச்சு இல்லாமல் அவரும் உயிருக்கு போராடினார்.

கண்ணிமைக்கும் நேரத்துக்குள் காதல் ஜோடியினர் இருவரும் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் அலறி அடித்து ஓடினார்கள். தேன்மொழியை வெட்டிய அரிவாளும் அங்கேயே கிடந்தது.

இதுபற்றி பொதுமக்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில்வே போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், சூப்பிரண்டு ரோகித் நாதன் ராஜகோபால் மற்றும் போலீஸ் படையோடு சேத்துப்பட்டு ரெயில் நிலையத்துக்கு விரைந்தார். தேன்மொழி உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவருக்கு தாடை மற்றும் முகத்தில் ஏற்பட்ட வெட்டுக்காயத்துக்கு தையல் போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டவில்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். சுரேந்தர் அரசு ராஜீவ்காந்தி பொது ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவருக்கு சுயநினைவு வரவில்லை.

இருவரும் உயிருக்கு போராடிய நிலையில் இருந்ததால், எதற்காக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது? என்பது பற்றிய முழு விவரமும் உடனடியாக தெரியவில்லை என்று போலீசார் கூறினார்கள்.

ஆனால், அவர்களுடைய காதலில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டு இருக்க வேண்டும் என்றும், அதுபற்றி பேசுவதற்காகத்தான் சுரேந்தர் ஈரோட்டில் இருந்து சென்னை வந்து இருக்கலாம் என்றும், தேன்மொழியை வெட்டி சாய்க்கும் நோக்கத்தோடு தான் சுரேந்தர் அரிவாளோடு சென்னை புறப்பட்டு வந்து இருக்க வேண்டும் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 24-ந்தேதி நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரை ஒருதலையாக காதலித்த நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் வெட்டி வீழ்த்தினார். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. போலீசாரால் கைது செய்யப்பட்ட ராம்குமாரும் புழல் மத்திய சிறையில் இறந்து போனார்.

சுவாதி சம்பவம் வழக்கு நடந்த அதே ஜூன் மாதம் தான் தற்போது அரசு பெண் அதிகாரி தேன்மொழியும் அவரது காதலனால் அரிவாளால் வெட்டப்பட்டு உயிருக்கு போராடும் நிலையில் உள்ளார்.

அந்த சம்பவத்தில் இருவரும் இறந்து போனார்கள். இந்த சம்பவத்தில் இருவரும் உயிருக்கு போராடுகிறார்கள்.

சுவாதி கொல்லப்பட்ட நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் அருகில் உள்ள சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் தான் தற்போதைய சம்பவமும் நடந்துள்ளது. அந்த சம்பவம் அதிகாலையில் நடந்தது. இந்த சம்பவம் இரவில் நடந்துள்ளது.

இந்த சம்பவம் பற்றி சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டது.

காதலில் முறிவு ஏற்பட்டது ஏன்? தேன்மொழி பரபரப்பு வாக்குமூலம்

தேன்மொழி நேற்று இரவு 10.30 மணி அளவில் கண் விழித்தார். அப்போது அவரிடம் டாக்டர்கள் விசாரித்தனர்.

டாக்டர்களிடம் அவர் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-

நானும் சுரேந்தரும் கடந்த 3 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தோம். எங்களின் காதலுக்கு சாதி குறுக்கே வந்தது. நாங்கள் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் எனது பெற்றோர் எங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தோம். ஆனால் எனது பெற்றோர் சுரேந்தருக்கு என்னை திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டனர். சுரேந்தரிடம் நான் பேசுவதற்கும் தடை விதித்தனர். இதனால் நான் அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டேன். எங்கள் காதலும் முறிந்துபோனது.

இந்த நிலையில் நான் வேலை கிடைத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் சென்னை வந்துவிட்டேன். இதையடுத்து சுரேந்தர் என்னை தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்று அழைத்தார். நானும் எனது நிலையை எடுத்துக்கூற சேத்துப்பட்டு ரெயில் நிலையம் சென்றேன். இருவரும் அங்கு பேசினோம். எனது நிலையை எடுத்துக்கூறினேன். ஆனால் எனது விளக்கத்தை அவர் ஏற்கவில்லை. இருவரும் காரசாரமாக பேசிக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென நான் எதிர்பாராத நிலையில் சுரேந்தர் என்னை அரிவாளால் வெட்டி விட்டார்.

இவ்வாறு அவர் கூறியதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தை நேரில் பார்த்த ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்

சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் மனோஜ் கூறியதாவது:-

சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த போது இருவரும் பேசிக்கொண்டிருந்ததை கவனித்தேன். இந்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்து சண்டை போட தொடங்கினர். இதை கவனித்த நான் அவர்களை சத்தம்போட்டு விட்டு சென்றேன். எனக்கு தமிழ் தெரியாததால் அவர்களை எச்சரித்து விட்டு அங்கிருந்து நடைமேடையில் சிறிது தூரம் சென்றேன். அதற்குள் இந்த சம்பவம் நடந்து விட்டது. இதனால் அவர்களை என்னால் தடுக்க இயலவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கதறி அழுத சுரேந்தரின் தந்தை

தேன்மொழியை அரிவாளால் வெட்டிவிட்டு சுரேந்தர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து அவரது பெற்றோருக்கு நேற்று இரவு போலீசார் தகவல் கொடுத்தனர். அப்போது, அவரது தந்தை விஜயராகவன் கதறி அழுதார். சுரேந்தரின் காதல் விவகாரம் பற்றி எனக்கு தெரியாது. சென்னையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள போவதாக என்னிடம் கூறிவிட்டு சுரேந்தர் சென்றான். இப்போது அவனுக்கு ஏற்பட்டுள்ள நிலை கேட்டு என் இதயமே வெடிக்கும் போல் உள்ளது என்று அவர் போலீசாரிடம் கூறினார்.

உடனடியாக அவர் மகனை பார்ப்பதற்கு சென்னை புறப்பட்டார்.

சினிமா பாணியில் நண்பர்களுடன் சென்று பெண் கேட்ட சுரேந்தர்

சுரேந்தரும், தேன்மொழியும் ஈரோட்டில் உள்ள இருவேறு கல்லூரிகளில் இருவரும் பட்டப்படிப்பு படித்து உள்ளனர். இருவரும் பஸ்சில் ஒன்றாக கல்லூரிக்கு செல்லும் போது காதல் மலர்ந்துள்ளது. திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவு செய்துள்ளனர்.

சினிமா பாணியில் சுரேந்தர் தனது நண்பர்களோடு தேன்மொழியின் வீட்டுக்கு சென்று அவரது தந்தையிடம் பெண் கேட்டு உள்ளார். ஆனால், தேன்மொழியின் தந்தை சுரேந்தரை கடுமையாக திட்டி அனுப்பி உள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்துள்ளது. அதன் பிறகு சுரேந்தர் மன உளைச்சலோடு காணப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Govt sets timeline for nod to set up self-financing colleges

Govt sets timeline for nod to set up self-financing colleges Poulami.Roy@timesofindia.com 07.11.2024 Kolkata : The state higher education de...