Saturday, June 15, 2019

சாட்சிகளை மீண்டும் வரவழைக்கும் பழக்கத்தை நிறுத்த ஐகோர்ட் உத்தரவு

Added : ஜூன் 15, 2019 03:55


சென்னை:'குறுக்கு விசாரணைக்காக, சாட்சிகளை மீண்டும் மீண்டும் வரவழைக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

மோசடி வழக்கில், 2007ல், குற்றப்பத்திரிகை செய்யப்பட்டது;2012ல், எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணை துவங்கியது. அரசு தரப்பில், நான்கு சாட்சிகள்,2012, 2013 மற்றும் 2018ம் ஆண்டுகளில் விசாரிக்கப்பட்டனர். இவர்களிடம் குறுக்கு விசாரணை செய்யப்படவில்லை.இதையடுத்து, மூன்று சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க கோரி, எழும்பூர் நீதிமன்றத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கு தொடுத்தனர்.

மனுவை, எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.மனுவை, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், முகமது ரியாஸ் ஆஜரானார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

அரசு தரப்பில், சாட்சி விசாரணை நடந்த அன்றே, குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பிலும், குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த நடைமுறை ஒருபோதும் பின்பற்றப்படுவது இல்லை. சாட்சி விசாரணை நடந்து, பல ஆண்டுகளுக்கு பின், குறுக்கு விசாரணை நடத்த சாட்சிகளை வரவழைக்க கோரப்படுகிறது.
நியாயமான விசாரணை உறுதி செய்யப்பட வேண்டும் என்பது சரி தான்; அதற்காக, குற்றம் சாட்டப்பட்டவரின் விருப்பப்படி, சாட்சிகளை குறுக்கு விசாரணை கோர வேண்டும் என்பது அர்த்தமல்ல. எப்போது, குறுக்கு விசாரணை நடத்துவது என்பதை முடிவு செய்யும் வரை, நீதிமன்றம் காத்திருக்க வேண்டும் என, எதிர்பார்க்க முடியாது.

இத்தகைய பழக்கத்தை ஊக்குவித்தால், வழக்கு விசாரணை தாமதமாகும்; விசாரணை நீதிமன்றங்களில், வழக்கு களின் நிலுவை கூடும். சாட்சிகளை மீண்டும் வரவழைக்க கோரும் மனுக்கள் மீது, சாதாரணமாக உயர் நீதிமன்றம் குறுக்கிட்டால், கீழமை நீதிமன்றங்களில், வழக்குகள் நிலுவை அதிகரிக்க, உயர் நீதிமன்றமும் பொறுப்பாகி விடும்.

எனவே, மீண்டும் மீண்டும் சாட்சிகளை குறுக்கு விசாரணைக்கு அழைக்கும் வழக்கத்தை, நிறுத்த வேண்டும். பொதுவாக, நீதிமன்றங்களுக்கு வந்து சாட்சியம் அளிக்க, தயக்கம் காட்டுவர். 

அவர்களை, மீண்டும் மீண்டும் வரவழைத்தால், ஒரு கட்டத்தில், சாட்சியாக ஆஜராக யாரும் வர மாட்டார். எழும்பூர் நீதிமன்ற உத்தரவில், தவறு இல்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024