Saturday, June 15, 2019

மாற வேண்டும் மனங்கள்!

By வெ. இன்சுவை | Published on : 15th June 2019 02:13 AM

இந்தக் கால இளைஞர்கள் சிலரின் போக்கு பற்றி நண்பர் ஒருவர் என்னிடம் மிகவும் ஆதங்கத்துடன் பேசினார். இளைய சமுதாயத்தின் மீது அவருக்கு இருந்த உள்ளார்ந்த அக்கறையுடன் பேசினார். நண்பருக்கு வேலைதான் உலகம். தான் செய்யும் வேலையில் அப்படியே தன்னை கரைத்துக் கொள்வார். "அர்ப்பணிப்பு' என்பதன் பொருள் அவர் எனக் கொள்ளலாம். ஆகவே, அவர் தனக்குக் கீழ் பணிபுரிபவர்களிடமும் அதே அர்ப்பணிப்பு உணர்வை எதிர்பார்ப்பார். தான் கற்றது அனைத்தையும், தன் அனுபவத்தின் மூலம் பெற்றது அனைத்தையும் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டும் என்பது அவரது ஆசை. ஆனால், அவருக்குப் பெரும் ஏமாற்றமே விஞ்சுகிறது. 

"பொறுப்பற்றவர்கள்' என்று நாம் ஒட்டுமொத்த இளைய சமுதாயத்தையும் குறை கூறக் கூடாது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அவர்களின் வேகம், விவேகம், உறுதி, ஒற்றுமை, கண்ணியம் ஆகியவற்றைப் பார்த்து உற்சாகம் அடைந்தோம். இனி நம் தேசம் விடியலை நோக்கிப் பயணப்படும் என எல்லோரும் மகிழ்ந்தோம். அந்த நம்பிக்கையை மெய்ப்பிப்பது போல இளைஞர்கள் இணைந்து அவரவர் ஊரிலுள்ள நீர்நிலைகளைத் தூர் வாருகிறார்கள்; குளங்கள், ஏரிகளைச் சீரமைக்கிறார்கள்; நெகிழி பயன்பாட்டிற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள்.
படித்த இளைஞர்கள் பலர் தங்கள் கிராமத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுக்கிறார்கள். அரசுத் தேர்வுகள் தயாரிப்புக்கு உதவுகிறார்கள்; படித்த இளைஞர்கள் விவசாயத் தொழிலை விரும்பி ஏற்கிறார்கள். நம் விவசாயிகளுக்காக விசனப்படுகிறார்கள். அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு அண்மையில் பயிற்சி அளித்துள்ளனர். இவையெல்லாம் ஒரு சில எடுத்துக்காட்டுகளே.

நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்தால் உருவாக்கப்படுகிறோம். ஒவ்வொருவர் வாழ்விலும், ஒவ்வொரு நாளிலும் எண்ணற்ற மக்களின் உழைப்பும், உதவியும் பயனாகின்றன. ஆகவே, இந்தச் சமுதாயத்துக்குக் கடன்பட்டுள்ளோம் என்பதைப் புரிந்துகொண்ட ஒவ்வொருவரும், அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப சமுதாயத் தொண்டில் தங்களை இணைத்துக் கொள்கின்றனர்.

இத்தகைய அளப்பரிய சேவை தரும் ஆத்ம திருப்தியும், அளவிலா ஆனந்தமும் "நான்', "எனது' என்று ஒரு குறுகிய வட்டத்துக்குள் தங்களை சுருக்கிக் கொண்ட பலருக்கும் இருப்பதில்லை. இந்தப் பிரிவினருக்கு அவர்களுடைய சொந்த வீடும், உறவும்கூட இரண்டாம் பட்சமே. எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற சுயநலம் வெறியாகி விடுகிறது. புற நிகழ்வுகள் எதுவும் அவர்களைப் பாதிப்பதில்லை. இவர்களின் முன்னேற்றப் பாதையில் அடுத்தவர் பக்க நியாய தர்மங்கள், உணர்வுகள் இவற்றைப் பற்றியெல்லாம் யோசிக்க நேரம் இருப்பதில்லை, அவர்களைப் பொருத்தவரை அது அவசியமும் இல்லை.

நீண்ட நாள்கள் வேலை கிடைக்காமல் பலர் திண்டாடியிருப்பார்கள். பெற்றோரின் வசவுகள், உறவினர்களின் உதாசீனங்கள், நண்பர்களின் புறக்கணிப்புகள் என அனைத்தையும் வலியோடு அனுபவித்திருப்பார்கள். விரக்தியின் விளிம்பிற்கே தள்ளப்பட்டு, சொல்ல முடியாத மன வேதனைகளை உள்ளுக்குள்ளேயே புதைத்துக் கொண்டு மனம் புழுங்கிக் கொண்டிருந்திருப்பார்கள். ஒரு தேநீர் குடிப்பதற்குக்கூட காசுக்காக தந்தையிடம் நிற்கும் அவலம். எனவே, கிடைக்கும் ஏதாவது ஒரு வேலையில் சேரலாம் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

பட்டப் படிப்பும், பொறியியல் பட்டப் படிப்பும் படித்த இளைஞர்கள் பலரின் இறுதிப் புகலிடம் விற்பனைப் பிரதிநிதி வேலைதான். இந்தக் கொளுத்தும் வெயிலில் இரு சக்கர வாகனத்தில் அலைகிறார்கள். உணவுப் பெட்டியுடன் வெயிலிலும், மழையிலும் வீடு வீடாக விநியோகம் செய்யும் இளைஞர்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. பொறியியல் பட்டப் படிப்பு முடித்தவர்கள் பலரும் வேலை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டு 1,000-த்துக்கும் மேற்பட்ட புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. பட்டம் பெற்றவர்களுக்கே வேலை இல்லை என்னும்போது, புற்றீ
சல்கள்போல பொறியியல் கல்லூரிகளை ஆரம்பிப்பது சரியா?
இளைஞர்களில் ஒருசிலர் வேலை கிடைத்ததும் நிறம் மாறிப் போகிறார்கள். சில மாதங்களில் பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள்; அதாவது, வேலை செய்வதுபோல போக்குக் காட்டுவது எப்படி? நூல் பிடிப்பது போல வேலை செய்வது எப்படி? ஒரு மாதத்தில் இரண்டு தாமதம், இரண்டு அனுமதி போன்ற சலுகைகளை தேவை இல்லாவிட்டாலும்கூட அனுபவிப்பது எப்படி என்றெல்லாம் பாடம் படித்துக் கொள்கிறார்கள்.

வேலைக்கு வரும்போதே ஒருவித சலிப்பு மனப்பான்மையுடன் வருகிறார்கள். சலிப்பும், வெறுப்பும் ஒரு பெரும் தொற்றுநோய். கொஞ்ச நஞ்ச அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும் பணி புரிபவர்களைக் கூட இந்த நோய் தொற்றிக் கொள்ளும். ஒரு பழமொழி உண்டு. 'குதிரை கொள்ளு என்றால் வாயைத் திறக்குமாம், கடிவாளம் என்றால் வாயை மூடிக் கொள்ளுமாம்'. அதேபோல நிறைய சம்பளம் வேண்டும்; ஊதிய உயர்வு வேண்டும். ஆனால் வேலை செய்ய மட்டும் சுணக்கம். முதல் தேதியன்று நம் மனதிலும், முகத்திலும் தோன்றும் மகிழ்ச்சியை 30 நாள்களும் தேக்கி வைக்க வேண்டாமா?

முதலில் ஒருவர், தான் வேலை செய்யும் நிறுவனத்தை நேசிக்க வேண்டும். நிறுவனத்தின் வளர்ச்சியில்தான் நம் முன்னேற்றமும் அடங்கியுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரைப் போலவே, அங்கு பணிபுரியும் காவலாளியும் அதன் வளர்ச்சியில் முக்கியமானவர். இந்த எண்ணம் அனைவரிடமும் வேண்டும்.
இந்தியாவின் புகழ் பெற்ற பொறியாளரான மறைந்த விஸ்வேஸ்வரய்யா, "இரண்டு தண்டவாளங்களுக்கு இடையே உள்ள பகுதியைச் சுத்தம் செய்யும் பணி எனக்கு அளிக்கப்பட்டால், நான் அந்த வேலையைச் செவ்வனே செய்வேன். உலகில் உள்ள வேறு எந்த தண்டவாளப் பகுதியும் இதைவிட அதிக தூய்மையானதாக இல்லை என்னும் அளவுக்குச் சிறப்பாக தூய்மை செய்வேன்' 

என்றார். இந்த ஈடுபாடும், அக்கறையும் பெரும்பாலானோருக்கு இல்லை.
நன்றாக ஓடக்கூடிய குதிரையின் மேல் பணம் கட்டுவது போன்று, நன்றாக வேலை செய்பவர்களிடம் மட்டும்தான் முக்கிய வேலையை அதிகாரிகள் ஒப்படைக்கின்றனர். இது நாளடைவில் அவர்களிடையே ஒரு கோபத்தை ஏற்படுத்துகிறது. "நான் மட்டும் முட்டாளா?' என முணுமுணுக்க வைக்கிறது. உண்மையில், வேலையைச் செவ்வனே செய்யும்போது கிடைக்கும் ஆத்ம திருப்தி அலாதியானது.

இந்தக் கால இளைஞர்களிடம் உள்ள குறை என்னவென்றால், அவர்கள் யாரிடமும் எதையும் கற்றுக் கொள்ள விரும்புவதில்லை. நம் எதிரிகளிடம் இருந்துகூட நமக்கு கற்றுக் கொள்ள ஏதாவது இருக்கும். நம்மை தாழ்த்திக்கொண்டு பணிவாக நடந்துகொண்டால்தான் கற்றுக் கொள்ள முடியும். ஒரு நிறுவனத்தில் உள்ள எல்லா விதமான வேலைகளையும் கற்றுக் கொண்டால் எந்த இக்கட்டான சூழ்நிலையையும் எளிதாக எதிர்கொள்ள முடியும்.

அடுத்து, ஏதாவது தவறு நேர்ந்து விட்டால் அந்தத் தவறை ஒப்புக் கொள்ளும் பேராண்மை வேண்டும். அதற்குப் பின் அதே தவறு நேராமல் கவனத்தில் கொள்ள வேண்டும்; உடனே, அந்தப் பழியை யார் மீது சுமத்தலாம் எனக் கருதி, தவறுக்கு அடுத்தவரை பலிகடா ஆக்குவது சரி அல்ல.
பொது மக்களின் சேவைப் பிரிவில் வேலை செய்பவர்களுக்கு இனிய சுபாவம் அவசியம். எரிச்சலூட்டும் கேள்விகளுக்குக் கூட தன்மையாகப் பதில் கூற வேண்டும். வேலையை நேசிக்க ஆரம்பித்தால் ஓர் ஈடுபாடு வந்துவிடும். தற்காலிகப் பணியாளராக இருக்கும்போது காட்டும் சுறுசுறுப்பு, அக்கறை, பணிவு இவையெல்லாம் பணி நிரந்தரமாக்கப்பட்டவுடன் காணாமல் போய் விடுகிறது. 

வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக மிக நீண்டது. ஒரு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து அங்கு எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு, ஒரு சில ஆயிரங்கள் சம்பளம் அதிகம் என்பதால் வேறு நிறுவனத்துக்கு மாறுகிறார்கள். இவர்கள் இடத்துக்கு அந்த நிறுவனம் வேறு நபரைத் தேட வேண்டும். இப்படி மாறிக் கொண்டே இருப்பவர்கள் எந்த ஓர் இடத்திலும் நிலையாக இருப்பதில்லை.

வாழ்க்கை என்பது தன்னை அழுத்தி மூச்சு முட்ட வைக்கும் சூழ்நிலைகளை எதிர்த்து மனிதனை மேலெழுந்து வரச் செய்யும் முயற்சியே ஆகும். அதற்கு "நம் இளைஞர்களிடம் சிந்தனை ஆற்றல் மிக்க மூளை, இரக்கமுள்ள இதயம், வேலை செய்யக் கூடிய கைகள் ஆகிய மூன்றும் வேண்டும்' என்றார் சுவாமி விவேகானந்தர்.

"வழியெங்கும் வாய்ப்புகள், ஆனால் விழிமட்டும் மூடியபடி...' என்று இருந்தால் வெற்றி கிட்டுவது எப்படி? உழைக்க வேண்டிய நேரத்தில் உழைத்தால், முதுமையின்போது வாழ்க்கை சுகமாக இருக்கும். வேலையை நேசிக்க வேண்டும். அதை ஓர் தவமாக எண்ண வேண்டும், கொண்டாட்டமாக மாற்றிக் கொள்ள வேண்டும். உளிபடும் முன் கல், உளி பட்ட பின்தான் அது சிலை. எனவே, தொடர் முயற்சியும், தொய்வில்லாப் பயிற்சியும் ஒரு சாதாரண மனிதனையும் சாதனையாளராக மாற்றும்; உலகம் அப்போது அவருக்கு வாழ்த்துப் பா பாடும்!

கட்டுரையாளர்: பேராசிரியர் (ஓய்வு)

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024