Tuesday, June 18, 2019

ஆட்டத்தின் போது கொட்டாவி விட்ட சர்ஃபராஸ்: கடுப்பான பாகிஸ்தான் அமைச்சர்
By எழில் | Published on : 17th June 2019 01:55 PM |



இந்தியாவுக்கு எதிராகத் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணியினரின் செயல்பாடுகளை பாகிஸ்தான் அமைச்சர் விமரிசனம் செய்துள்ளார்.



உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.

2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் மிக பரபரப்பான ஆட்டம் எனக் கூறப்பட்டுள்ள இந்த ஆட்டம், மான்செஸ்டர் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ரோஹித் சர்மா, விராட் கோலியின் அபார ஆட்டத்தால் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்களை குவித்தது இந்திய அணி. ஒரு நாள் ஆட்டத்தில் துரிதமாக 11,000 ரன்களை கடந்து, ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்தார் கேப்டன் விராட் கோலி.

பாகிஸ்தான் ஆடிய போது, மழை குறுக்கிட்டது. இதனால், டிஎல்எஸ் முறைப்படி ஓவர்கள் குறைக்கப்பட்டு 40 ஓவர்களில் 302 ரன்களைக் குவிக்க வேண்டும் என கடின இலக்கு பாக். அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியத் தரப்பில் விஜய் சங்கர், குல்தீப் யாதவ், பாண்டியா ஆகியோர் சிறப்பாகப் பந்துவீசி பாக். சரிவுக்கு வித்திட்டனர். இந்த வெற்றி மூலம் உலகக் கோப்பையில் 7-ஆவது முறையாக பாகிஸ்தானை வென்றுள்ளது இந்தியா.

இந்நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்தபோது பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் கொட்டாவி விட்டபடி கீப்பிங் செய்தார். இதன் காணொளி உடனடியாகச் சமூகவலைத்தளத்தில் பரவியது. இதையடுத்து ரசிகர்களால் விமரிசனத்துக்கு அவர் ஆளாக்கப்பட்டார்.

பாகிஸ்தானின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் ஷிரீன் மஸாரி, சர்ஃபராஸின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ஆட்டம் தொடங்குவதற்குச் சில நேரங்கள் முன்பு பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் தனது மனைவி சானியா மிர்சாவுடன் ஒரு ஷீஷா பாரில் நண்பர்களுடன் இருந்ததாக விடியோவும் செய்தியும் வெளியாகியுள்ளன. இதற்கு பாகிஸ்தான் அமைச்சர் ஷிரீன் கண்டனம் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது:

மைதானத்தில் கேப்டன் கொட்டாவி விடும்போது அங்கு ஃபீல்டிங் இல்லாமலாகிவிடுகிறது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு ஷீஷா புகைப்பிடித்தலில் ஈடுபடும்போது, அவமானத்தை விட வேறென்ன எதிர்பார்க்க முடியும்? டாஸ் வென்ற கேப்டன் இந்திய அணியை பேட்டிங் செய்ய விட்டது நிலைமையை மோசமாக்கிவிட்டது. இந்திய அணி மிகவும் தொழில்முறையுடன் ஒற்றுமையுடன் விளையாடினார்கள். ஆனால் பாகிஸ்தான் அணியில் அந்த ஒற்றுமையின்றி வீரர்களிடையே பிரிவினை உள்ளது. விளையாட்டில் வெற்றி, தோல்வி சகஜம். ஆனால், கொஞ்சமாவது தொழில்முறையுடன் விளையாடவேண்டும் என்று பாகிஸ்தான் அணியையும் கேப்டன் சர்ஃபராஸ், சோயிப் மாலிக் ஆகியோரையும் விமரிசித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024