Tuesday, June 18, 2019

மோசடிக்குள்ளாக்கப்படும் மாணவர்கள்!

By ஐவி. நாகராஜன் | Published on : 17th June 2019 03:06 AM |

dinamani

இது ஒரு மோசடி அல்லது சதி என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். போலியாக ஒரு பல்கலைக்கழகத்துக்கு அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை அனுமதி அளித்து, அதன் மூலம் 129 இந்திய மாணவர்கள் அமெரிக்காவின் குடியுரிமைத் துறையிடம் சிக்கியுள்ள செய்தி அண்மையில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. 

மிக்சிகனில் உள்ள கிரேட்டர் டெட்ராய்ட் நகரில் பாஃர்ம்லேண்ட் யுனிவர்சிட்டி என்ற போலியான ஒரு பல்கலைக்கழகத்தின் பெயரில், "வகுப்புகளுக்குச் செல்ல வேண்டாம். அமெரிக்காவில் தங்குவதற்கு கல்விக் கட்டணம் செலுத்தினால் போதும்' என மோசடி விளம்பரத்தை நம்பி ஏமாந்தவர்கள் அந்த மாணவர்கள். 

இவர்களின் நிலைமை இன்று அமெரிக்காவில் பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. எப்படியாவது அமெரிக்காவில் வேலை பார்க்க வேண்டும் எனத் துடிக்கும் மாணவர்கள் அவர்கள். இப்படி மோசடி விளம்பரம் மூலம் மாணவர்களை ஏமாற்றுவதே சட்டப்படி குற்றம் என்கிறார்கள் அமெரிக்க சட்ட வல்லுநர்கள். இதனால் ஆலோசகர்கள் இடைத் தரகர்களிடம் பல லட்சம் ரூபாயை மாணவர்கள் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பாதிக்கப்பட்ட மாணவர்களில் சிலர் நாடு திரும்பி விட்டனர். மேலும் சிலர் அமெரிக்க சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். 

நாடு கடத்தப்படும் இந்த மாணவர்கள் செய்த தவறுக்கு தண்டனையாக இனி அவர்கள் எந்தக் காலத்திலும் அமெரிக்காவுக்கு வர முடியாது என்ற நிலையும், இதுபோன்ற சம்பவங்களால் அமெரிக்காவில் உள்ள உயர் கல்வி நிலையங்களின் மீது பலருக்கும் தேவையற்ற சந்தேகமும் உருவாக வாய்ப்புள்ளது. இதன் விளைவு, அரசின் அங்கீகாரத்தோடு முறையாக நடைபெறும் கல்வி நிறுவனங்களும் விசாரணை என்ற பெயரில் சில சங்கடங்களைச் சந்திக்க நேரிடுகின்றன. அதேபோல் இந்தியாவில் செயல்படும் ஒரு சில மோசடி பேர்வழிகளால் கல்வி ஆலோசனைத் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்ற நிறுவனங்களின் பெயரும் கெடுகிறது.
இந்தியாவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் மாணவர்கள் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்கச் செல்கிறார்கள். அண்மைக்காலமாக அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப் படிப்புகளைப் படிக்க அனுமதிக்கப்படுவதால் அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில், "அமெரிக்கா செல்ல விசா வாங்கித் தருவதாக ஏமாற்றும் புரோக்கர்களிடம் ஏமாற வேண்டாம்' என இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகங்கள் தொடந்து எச்சரித்து வருகின்றன. எனினும், இவற்றையும் தாண்டி படிக்கும் ஆர்வத்தோடு ஏராளமான நடுத்தர மற்றும் பின்தங்கிய கிராமப்புற மாணவர்கள் தெரிந்தோ தெரியாமலோ ஏமாறுகின்றனர். 
 
அதோடு சில மோசடி நிறுவனங்கள் அப்பாவி இந்திய மாணவர்களை ஏமாற்றி பணம் பறித்து வருகின்றனர். இந்தப் போலி பல்கலையில் சேர விரும்பிய இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை அங்கீகரித்துள்ள "ஐ-20' விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் விசா அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் திருட்டுத்தனமாக தங்க விரும்பும் மாணவர்களைப் பிடிக்க நடத்திய இந்த நாடகத்தை உண்மைபோல் காட்டுவதற்காக இதுபோன்று செய்யப்பட்டுள்ளது என்று பொது வெளியில் பேசப்படுகிறது.
இனியாவது இதுபோன்ற கசாப்பான நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதற்கு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாணவர்களும் கூடுதல் விழிப்போடு இருந்து ஹசெயல்பட வேண்டும்.

 அமெரிக்காவில் உள்ள தனது தூதரகங்கள் மூலம் இந்திய மாணவர்களுக்கு சட்ட உதவியும், தூதரக உதவியும் கிடைப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். இந்தியாவில் போலியான விளம்பரங்களின் மூலம் மாணவர்களை கவர நினைக்கும் இடைத் தரகர்கள் மீது மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அமெரிக்கா மட்டுமல்ல சீனா, பிலிப்பின்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் புரோக்கர்களையும், விளம்பரங்களையும் நம்பி ஏமாந்துவிட வேண்டாம். ஒரு முறைக்கு இரு முறை ஆழ்ந்து பரிசீலித்து உரியவாறு முடிவெடுக்கவேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான வெளிநாட்டு கல்வி நிறுவனங்களைக் கண்டறிந்து அது குறித்த விவரங்களை விரிவாகக் கேட்டறிந்து, எச்சரிக்கையோடு செயல்படவேண்டும்.
உண்மையில், விசா மோசடி செய்யும் இடைத்தரகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால், அதுவே அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் நல்லது. இது மாணவர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும். இதில் அமெரிக்காவும் இந்தியாவும் உரிய முறையில் தீவிர கவனம் செலுத்துவது நல்லது.
தேசிய வெளிநாட்டு மாணவர்கள் ஆலோசனை அமைப்பின் புள்ளிவிவரப்படி 2017-18-ஆம் கல்வியாண்டில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் ஒரு கோடியே 10 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்கள் மூலம் 3,900 கோடி அமெரிக்க டாலர்கள் வருமானம் வருகிறது. மொத்தம் 4 லட்சத்து 55 ஆயிரம் வேலைவாய்ப்புகள் இவர்கள் மூலம் உருவாகின்றன. சீனா 3 லட்சத்து 63 ஆயிரம் மாணவர்களோடு முதலிடத்தில் இருக்கிறது. இந்தியா 96 ஆயிரம் மாணவர்களோடு இரண்டாவது இடத்திலும் தென்கொரியா, சவூதி அரேபியா, கனடா, வியத்நாம் நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
அமெரிக்கா மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளிலும் ஆசிய பசிபிக் நாடுகளிலும் உயர் கல்வி படிக்க இந்திய மாணவர்கள் செல்கிறார்கள். 2017-ஆம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக ட்ரம்ப்
பதவியேற்ற பிறகு கடுமையான குடியுரிமைச் சட்டங்கள் மற்றும் ஹெச்-1பி விசா கட்டுப்பாடுகள் மூலம் அமெரிக்காவின் கல்வித் துறை கலையிழந்து நிற்கிறது. இந்த நிலையில் விசா மோசடியைக் கண்டுபிடிக்க நடத்தப்படும் நாடகங்கள் மூலம் அப்பாவி மாணவர்களை ஏமாற்றுவது எந்த விதத்திலும் பலன் தராது; இது நியாயமும்
இல்லை.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024