Friday, June 14, 2019

water scarcity




chennai,hotel,சென்னை,ஓட்டல்,lunch,மதியம்,நோ மீல்ஸ்,no meals
சென்னை: கடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக, சென்னை ஓட்டல்களில், இனி, மதிய சாப்பாடு கிடைக்காது. தண்ணீர் இன்றி தவிக்கும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை, அலுவலகம் வர வேண்டாம் என்றும், வீட்டில் இருந்தே வேலை பார்க்கும்படியும், அறிவுறுத்தி உள்ளன. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர், லாரி தண்ணீருக்கு செலவு செய்ய முடியாமல், வீட்டை காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

மழை பெய்யாததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளும் வறண்டு கிடக்கின்றன; நிலத்தடி நீரும் கிடைப்பதில்லை. இதனால் சென்னைவாசிகள் குடிக்க குளிக்க சமைக்க என அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீர் இன்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதேபோல பல மாவட்டங்களிலும் தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

சென்னையில் பல பகுதிகளில் வசிப்போர் 'கேன் வாட்டர்' வாங்கி குளிக்கவும் குடிக்கவும் பயன்படுத்துகின்றனர். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் லாரி தண்ணீருக்கு செலவு செய்ய முடியாமல் வீட்டை காலி செய்து சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். சென்னை ஓட்டல்களில் உணவு சமைக்கவும் குடிக்கவும் 'கேன்' தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. பாத்திரங்கள் கழுவ நிலத்தடி நீர் பயன்படுத்தப்பட்டது. தற்போது தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் அதற்கான செலவும் அதிகரித்திருப்பதால் மதிய சாப்பாட்டை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.





இதுகுறித்து சென்னை ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் எம்.ரவி கூறியதாவது: இட்லி தோசை போன்ற டிபன் வகைகளுக்கு குறைந்த தண்ணீர் போதும். மதிய சாப்பாட்டிற்கு மட்டும் சாம்பார் ரசம் காரக்குழம்பு மோர் கூட்டு பொரியல் போன்றவை தனித்தனி பாத்திரங்களில் வழங்கப்படுகின்றன. இதனால் மற்ற உணவு வகைகளை விட சாப்பாடு தயாரிக்கவும் அவற்றை வழங்க பயன்படுத்தும் பாத்திரங்களை கழுவவும் அதிக தண்ணீர் செலவாகிறது. தற்போது தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் உள்ளது. ஆரம்பத்தில் 12 ஆயிரம் லிட்டர் தண்ணீரை தனியாரிடம் 1 800 ரூபாய்க்கு வாங்கினோம். சமீபத்தில் 2 500 ரூபாய்க்கு வாங்கினோம். இப்போது தட்டுப்பாடு அதிகமானதால் 5 000 ரூபாய் வரை கேட்கின்றனர்.

இவ்வளவு விலை கொடுத்து வாங்குவதில் சிரமம் உள்ளது. எனவே பிரச்னையை சமாளிக்க சாப்பாடு விற்பனையை நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஓட்டல்கள் திறக்கப்படும் நேரங்களிலும் மாற்றம்

செய்யப்பட உள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு தொடர்ந்தால் ஓட்டல்களுக்கு யாரும் வரமாட்டார்கள். இந்த பிரச்னைக்கு தீர்வு காண கோரி முதல்வர் பழனிசாமியை சந்திக்க உள்ளோம். அப்போது ஓட்டல்களின் தண்ணீர் தேவைக்காக ஒரு நீர்நிலையை ஒதுக்குமாறு வலியுறுத்தப்படும். அந்த நீர்நிலை பகுதியை நாங்களே பராமரித்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்கிறோம். குடிநீர் பிரச்னையை தீர்க்க கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களை அதிக இடங்களில் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

வீட்டில் இருந்து வேலை:

இந்நிலையில் சென்னையில் கிண்டி அடையாறு திருவான்மியூர் தரமணி பெருங்குடி சோழிங்கநல்லுார் போன்ற பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குவிந்து உள்ளன. அந்நிறுவனங்கள் செயல்படும் சர்வதேச தரத்திலான கட்டடங்களில் உள்ள கழிவறை பயன்பாட்டுக்கு அதிக தண்ணீர் தேவைப்படும்.

தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடு ஐ.டி. நிறுவனங்களையும் விட்டு வைக்கவில்லை. இதனால் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே அலுவலக பணிகளை இணையதளம் வாயிலாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளன.

விடுதிகள் மூடல்:

சென்னையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எழும்பூர் சென்ட்ரல் தரமணி வேளச்சேரி போன்ற பகுதிகளில் ஆண்கள் பெண்கள் தங்கும் தனித்தனி விடுதிகள் உள்ளன. இவற்றில் பிற மாவட்டங்களில் இருந்து சென்னையில் உள்ள நிறுவனங்களில் வேலை செய்வோர் தங்கியுள்ளனர். தங்கும் விடுதிகளில் குளிக்க நிலத்தடி நீர் மட்டும் வழங்கப்படுகிறது. தற்போது நிலத்தடி நீரும் கிடைக்காததால் விடுதிகளின் சார்பில் அதிகம் செலவழித்து லாரிகளில் தண்ணீர் வாங்கி வினியோகிக்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் குளிக்க தண்ணீர் இல்லாததால் வெளிமாவட்டங்களை சேர்ந்த பெண்கள் தங்கள் ஊர்களுக்கு சென்றபடி உள்ளனர். ஆண்கள் கடலோர பகுதிகளுக்கு சென்று அங்குள்ள குட்டைகளிலும் கடல் நீரிலும் காலை கடன்களை முடித்து திரும்புகின்றனர்.

தமிழகத்தில் உள்ள, ஓட்டல்களில், தண்ணீருக்கான செலவு மட்டும், வழக்கத்தை விட, 25 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு, அனைத்து ஓட்டல்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மழை பெய்தால் தான், தண்ணீர் பிரச்னை தீரும். மழை நீர் வீணாகாமல் இருக்க, அனைத்து ஓட்டல்களிலும், மழை நீர் சேகரிக்கும் வசதியை விரைவாக ஏற்படுத்துமாறு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

- வெங்கடசுப்பு, தலைவர், தமிழக ஓட்டல்கள் சங்க தலைவர்.


No comments:

Post a Comment

'Uncle-Aunty quota' for NRI admissions in Kerala too!; MBBS and nursing admissions getting rigged

 'Uncle-Aunty quota' for NRI admissions in Kerala too!; MBBS and nursing admissions getting rigged   Wednesday 25 September, 2024 | ...