Thursday, June 13, 2019

நடிகர் வடிவேலுக்கு ரூ.61 லட்சம் அபராதம்

Added : ஜூன் 12, 2019 01:10

சென்னை : வருமான வரித்துறை விதித்த, 61 லட்சம் ரூபாய் அபராதத்தை ரத்து செய்யக் கோரி, நடிகர் வடிவேலு தாக்கல் செய்த மனுவை, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தள்ளுபடி செய்துள்ளது.கடந்த, 2008 - 09ம் ஆண்டில், வடிவேலு தாக்கல் செய்த வருமான வரி கணக்கில், வரி ஏய்ப்பு செய்ததாக, புகார் எழுந்தது. இதையடுத்து, வடிவேலுவுக்கு சொந்தமான சென்னை, மதுரை வீடுகளில், வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர்.இதில், கணக்கில் வராத, 1 லட்சம் ரூபாய் பணமும், 60 லட்சம் ரூபாய்க்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

மேலும், 4 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியதற்கான கணக்கை, அவர் தாக்கல் செய்யாததும் கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக நடந்த விசாரணையில், வடிவேலு வரி ஏய்ப்பு செய்தது உறுதி செய்யப்பட்டது. இதற்காக, 61 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு, வடிவேலுக்கு வருமான வரித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பியது.இதை எதிர்த்து, வருமான வரி மேல்முறையீட்டு ஆணையரிடம், வடிவேலு முறையீடு செய்தார். அதை விசாரித்த ஆணையர், அபாரத தொகையை உறுதி செய்தார்.

ஆணையர் உத்தரவை எதிர்த்து, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில், வடிவேலு மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை, தீர்ப்பாய உறுப்பினர்கள், ஆர்.எல்.ரெட்டி, ஏ.மோகன் ஆகியோர் விசாரித்தனர்.தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு:மனுதாரர், தன் உண்மையான வருமானத்தை, தானாக முன்வந்து தெரிவிக்கவில்லை என்பது உறுதியாகிறது.இதுதொடர்பான விபரங்களை, வருமான வரி கணக்கு தாக்கலிலும் தெரிவிக்கவில்லை. சோதனை நடத்தி, 'நோட்டீஸ்' அளித்த பின், முழு கணக்கை தாக்கல் செய்ய, அவர் முன்வந்துள்ளார்.எனவே, இந்த மனுவை ஏற்பதற்கு, எந்த முகாந்திரமும் இல்லை; மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024