Friday, February 7, 2020

'நீட்' தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு

Added : பிப் 07, 2020 00:38

தேனி: 'நீட்' தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், மேலும் ஒரு மாணவரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.அரசு, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை, 'நீட்' தேர்வு மூலம் நடக்கிறது.

இதில், ஆள்மாறாட்டம் செய்து, வேறு ஒருவரை தேர்வு எழுத வைத்து, கல்லுாரியில் சேர்ந்த முறைகேடு தெரியவந்தது. இத்தேர்வு முறைகேட்டில், தேனி அரசு மருத்துவ கல்லுாரியில் சேர்ந்த, மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை, டாக்டர் வெங்கடேசன் முதலில், தேனி, சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.இதை தொடர்ந்து, புரோக்கர்கள் மூலம், வெவ்வேறு கல்லுாரிகளில் சேர்ந்த பிரவின், ராகுல், இர்பான், பிரியங்கா ஆகிய, நான்கு மாணவர்கள், அவர்களின் பெற்றோர் என, 10 பேர் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்டவர்கள், ஜாமினில் உள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய, புரோக்கர் முருகன் மட்டும், தேனி சிறையில் உள்ளார்.

இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையில், சென்னையில் உள்ள, ஒரு தனியார் மருத்துவக் கல்லுாரியில் படித்த, மாணவர் பவித்திரன், 20, என்பவர், நேற்று கைது செய்யப்பட்டு, தேனிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.இவரது சொந்த ஊர், கிருஷ்ணகிரி. இவரும், 'நீட்' தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு, கல்லுாரியில் சேர்ந்தது, தெரிய வந்தது. மாணவரிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர்.இவ்வழக்கில் முக்கிய புள்ளியான, ரஷீத்தை இன்னும் கைது செய்யவில்லை.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024