பிரதமர் அலுவலக அதிகாரியாக நம்ம ஊரு அமுதா!
Updated : ஜூலை 23, 2020 01:40 | Added : ஜூலை 23, 2020 00:37
சென்னை : தமிழகத்தில், மதுரையில் பிறந்து வளர்ந்த பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா, பிரதமர் அலுவலகத்தின், இணை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் நேர்மை மற்றும் பணித் திறனுக்கு கிடைத்த பரிசாக, இந்தப் பணி கருதப்படுகிறது.
மதுரையை சேர்ந்தவர் அமுதா. பெற்றோர் மத்திய அரசு ஊழியர்கள். அமுதா, மதுரை வேளாண் கல்லுாரியில், பி.எஸ்சி., வேளாண்மை படித்தார்.இவரது தாத்தா சுதந்திரப் போராட்ட தியாகி. அவர் மறைவுக்கு பின், தன் பாட்டிக்கு கிடைத்த ஓய்வூதியம் பெற, அமுதா கலெக்டர் அலுவலகம் சென்றார். அப்போது, அவருக்கு கலெக்டராக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
பட்டப்படிப்பு முடித்த பின், ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதினார். முதல் முறை, காவல் துறை பணிக்கு தேர்வானார். மீண்டும் தேர்வு எழுதி, 1994ல் நேரடி ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்வானார்.
துடிப்பான செயல்பாடு
செங்கல்பட்டு சப் -- கலெக்டர், தர்மபுரி மாவட்ட கலெக்டராக பணியாற்றினார். அதன்பின், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றினார். 'யுனிசெப்' அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார்.சிறு வயதில், கபடி வீராங்கனையாக இருந்தவர். படிக்கும்போதே, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களை வென்றவர்.
ஐ.ஏ.எஸ்., அதிகாரியான பின், தன் நேர்மையாலும், துடிப்பான செயல்பாடுகளாலும், அனைவரின் பாராட்டையும் பெற்றார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை, அரசு சார்பில் முன் நின்று கவனித்தவர் இவர் தான். அவற்றை சிறப்பாக செய்து, அனைவரையும் கவர்ந்தார்.
கடந்த ஆண்டு, மத்திய அரசு பணிக்கு சென்றார். உத்தரகண்ட் மாநிலம், முசோரியில் உள்ள, ஐ.ஏ.எஸ்., அகாடமியில், விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தார்.
திறனுக்கு கிடைத்த பரிசு :
இந்நிலையில், பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பணி, அவரது நேர்மை மற்றும் பணித்திறனுக்கு கிடைத்த பரிசாக கருதப்படுகிறது. இவரது கணவர் ஷம்பு கல்லோலிகர். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர், தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரி. தற்போது, தமிழக அரசின் கைத்தறித் துறை செயலராக உள்ளார்.
அமுதாவிற்கு புகைப்படம் எடுப்பது, சைக்கிளில் நீண்ட துாரம் செல்வது பிடிக்கும். இளையராஜாவின் தீவிர ரசிகை. 'தினமும் அவர் பாடல்களை கேட்க, தனியே நேரம் ஒதுக்குவேன்' என, அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், மதுரையில் பிறந்து, பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலராக உயர்ந்துள்ள அமுதாவிற்கு, அனைத்து தரப்பிலிருந்தும், பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பிரதமர் அலுவலகத்தில், நம்ம ஊர் பெண் என்று நாமும் பெருமைப்படுவோம்.
No comments:
Post a Comment