மனிதனின் ஆயுள் எத்தனை வருடங்கள்? என்று என் கருத்தரங்குகளில் அடிக்கடி கேட்பேன். 60கள் என்பதுதான் அதிகமாகச் சொல்லப்படும் விடை. சிலர் இப்போது மருத்துவம் வளர்ந்ததால் 70கள் என்பார்கள். சரியான பதில் 120 என்றால் பலர் நம்பமாட்டார்கள். ஜப்பானில் ஒரு தீவில் 100 வயதைத் தாண்டியவர்கள் ஒரு லட்சம் பேர் இருக்கிறார்கள் என்று தகவல் கூறி மருத்துவ, மானிடவியல் ஆராய்ச்சிகள் எல்லாம் சொல்லி விளக்கிய பின் சரி என்பார்கள்.
ஏன் 60 ?
அது சரி, ஏன் எல்லோரும் 60கள் தான் ஆயுள் என்கிறார்கள். பணி ஓய்வு காலம் 58 அல்லது 60 வயதில். அதற்கு மேல் எதற்கு வாழ்வது என்கிற எண்ணம்தான். சம்பாதிக்காத மனிதன் வாழ்வதில் என்ன அர்த்தம் என்று நம் சமூகம் மறைமுகமாகச் சேதி சொல்கிறதோ? இன்றைய நுகர்வு கலாச்சாரத்தில் பொருள் ஈட்டும் திறனும் வாய்ப்பும் இல்லாதவர்களைப் பின்னுக்குத் தள்ளும் அவல நிலை நிஜம்.
இதனால்தான் ஓய்வு பெற்ற பின் பலர் உடலாலும் மனதாலும் உருக்குலைந்து போகிறார்கள். நல்ல பென்ஷன் தொகை வருபவர்கள் நிலை சற்றுப் பரவாயில்லை. பொருளாதார விடுதலையாவது கிட்டும். மற்றவர்களுக்கு எல்லா வகையிலும் பின்னடைவுதான்.
அறுபதுகளின் நிலை பற்றிக் கவிஞர் கண்ணதாசனின் திரைப்படப் பாடல் வரிகள் எல்லாக் காலத்திற்கும் பொருந்துகிறது:
“கடந்தகாலமோ திரும்புவதில்லை
நிகழ்காலமோ விரும்புதில்லை
எதிர்காலமோ அரும்புவதில்லை
இதுதானே அறுபதின் நிலை!”
குறைபாடா முதுமை?
வயதானவர்களைக் குறைத்து மதிப்பிடும் எண்ணம் வயதாவது பற்றிய நமது தாழ்வு மனப்பான்மையில் பிறக்கிறது. முடி உதிர்தலையும், வெளுப்பதையும், தோல் சுருங்குவதையும் இயற்கை என்று எண்ணுவது போய் அதைக் குறைபாடுகளாக முன்னிறுத்தியதில் நம் சந்தைக்குப் பெரும் பங்கு உண்டு.
முன்பெல்லாம் தாமதமாக வயோதிகம் அடைந்தார்கள். அதை அவர்கள் மறைக்கவோ மறுக்கவோ முயல மாட்டார்கள். இன்று இளம் வயதிலேயே விரைவில் வயோதிகம் அடைகிறார்கள். அதனால் வாழ்க்கை முழுவதும் வயதை மறைக்கும் முயற்சிகள் தேவைப்படுகின்றன. வேலைச்சந்தையும் வயதானவர்களுக்கு எதிராகவே உள்ளது. வாழ்க்கை அனுபவத்தை விட வேலையின் உடனடி தகுதிகளே அதிகம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இதனால் முழுமையாகப் பணி முடித்து ஓய்வு பெற்றவர்களும் சரி, விருப்ப ஓய்வு வாங்கியவர்களும் சரி, ஓய்விற்குப் பின் தங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் பெறும் பணிகளில் மீண்டும் அமர்வதில்லை.
ஒரு புறம் தகுதியான ஆட்கள் இல்லை என்று சொல்லிக்கொண்டு, இன்னொரு புறம் தகுதியான வயதானவர்களை ஒதுக்கிக்கொண்டே இருக்கிறோம். இது இரு தரப்பினருக்கும் நஷ்டத்தையே தரும். இன்னொரு புறம் இன்றைய இளைஞர்கள் பத்தாண்டுகளுக்குள் உச்சத்திற்குச் செல்ல வேண்டும். 40 வயதில் ஓய்வு பெற்று, அதற்குப் பிறகு வாழ்க்கையை இன்பமாக அனுபவிக்க வேண்டும் என்கிறார்கள்.
குறைந்த காலம் இருக்க நினைக்கும் இளைஞர்களைக் கொண்டாடும் நிறுவனங்கள், நிறைந்த சேவையில் நிலைத்து நிற்கும் முதியவர்களை மதிப்பதில்லை.
45க்குப் பின்னால்
என்னைப் பொறுத்தவரை 45 வயதைக் கடந்தவர்கள் தங்கள் பணி ஓய்வு காலம் பற்றிச் சிந்தித்தல் நலம். இதைப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் மட்டும் மேற்கொள்ளாமல் உளவியல் ரீதியாக மேற்கொள்ளுதல் முக்கியம்.
இதற்குப் பயனுள்ளதாகச் சில கேள்விகள்:
என் வாழ்க்கையின் முக்கியக் குறிக்கோள்கள் என்ன? பொருளாதாரக் கடமைகள் என்ன? தன்னிறைவான வாழ்க்கைக்கு என்ன செய்ய வேண்டும்? இதே வேலை கடைசிவரை, நிலைக்குமா? வேறு வேலை என்றால் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? அதற்குத் தேவையான திறன்களும் வாய்ப்புகளும் என்னென்ன? வேலை சாராத என் பிற தேவைகள் வாழ்க்கையில் என்னென்ன?
Mid Career Counseling என்று வேலையின் மத்திமக் காலத்தில் உள்ளோர்க்கு ஆலோசனை வழங்குதல் மேலை நாடுகளில் பிரபலம். இங்கும் இவை இனி தேவைப்படும் என்று நம்புகிறேன்.
பணி ஓய்வுக்கு 3 மாதங்கள் முன் பயிற்சி கொடுக்கும் வழக்கம் சில நிறுவனங்களில் உண்டு. என்னைக் கேட்டால் 50 வயதிலாவது இந்தச் சிந்தனையை விதைக்க வேண்டும்.
50 வருடங்கள் வாழ்ந்த மனிதரின் வாழ்க்கையில் உள்ள அனுபவத்தைக் கொண்டு, அடுத்த 10 வருடங்களில் பணி ஓய்வு காலத்திற்கான திட்டமிடலைத் தொடங்கலாம்.
கரப்பான் தப்பித்த ரகசியம்
விருப்ப (அல்லது கட்டாய) ஓய்வு பெற்றவர்கள் பலருக்கு ஆலோசனை மற்றும் பயிற்சி அளித்த அனுபவத்தில் கூறுகிறேன். வேலையில் நெருக்கடி வரும்வரை நம்மில் பலர் வெளியுலகம் பற்றி எதையும் அறிந்து கொள்ள முயல்வதில்லை. நம் தொழிலின் ஆயுட்காலம் என்ன என்று அறிய வேண்டும். புதிய போக்குகளை அடையாளம் காண வேண்டும். நம் அனுபவத்துடன் புதிய திறன்கள் கற்றுப் புதிய வாய்ப்புகள் எங்குள்ளன என்று தேடுவது முக்கியம் எனப் புரிந்து கொள்ள வேண்டும்.
டைனோசர் வழக்கொழிந்து, கரப்பான் பூச்சி தப்பித்த ரகசியம் என்ன? மாற்றத்தைத் தனதாக்கிய வாழ்வியல் தந்திரம் அது. சமூகம் நம்மை மதிக்க வேண்டும் என்கிற சிந்தனையைவிடச் சமூகம் மதிக்கும் வண்ணம் செயல்பட வேண்டும் என்கிற சிந்தனை மூத்த குடிமக்களுக்கு நன்மை பயக்கும். இளைஞர்களிடம் இல்லாத பக்குவமும் நிதானமும் முதியவர்களுக்கு உண்டு. புதிய பொறுப்புகளுக்குத் தேவையான மாற்றத்தைக் கையாண்டு போதிய திறனை நிரூபித்தால் என்றும் கோதாவில் நிற்கலாம்.
ஓய்வு எனும் மாயை
ஓய்வு என்பதுகூட மாயைதான். சிலருக்கு ஓய்வே கிடையாது. சில தொழில்களுக்கு ஓய்வே கிடையாது. ஆசிரியருக்கும் எழுத்தாளருக்கும் எதற்கு ஓய்வு? வயதாக வயதாக ரத்தினமாய் ஜொலிக்கும் நபர்களை நாம் பார்த்ததில்லையா என்ன?
சிவாஜி காலம் முதல் சிம்பு காலம் வரை இன்றும் நிலைத்திருக்கும் கமல்ஹாசனின் இளமை ரகசியம் புதிதாக வரும் எதையும் தேடி எதிர்கொண்டு ஏற்றுக்கொள்ளும் தன்மையே. உங்கள் தொழில் உலகில் நடப்பதையெல்லாம் கவனித்து மாற்றங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டால் நீங்களும் உலக நாயகன் தான்!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
No comments:
Post a Comment